மக்கள் பயன்பாட்டுக்கான செயற்கைக்கோள்களை அனுப்பியதில் இந்தியா முதலிடம்: மயில்சாமி அண்ணாதுரை

மக்களின் பயன்பாட்டுக்கான செயற்கைக்கோள்களை அனுப்பியதில் இந்தியா முதலிடத்தில் உள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி
மக்கள் பயன்பாட்டுக்கான செயற்கைக்கோள்களை அனுப்பியதில் இந்தியா முதலிடம்: மயில்சாமி அண்ணாதுரை


விழுப்புரம்: மக்களின் பயன்பாட்டுக்கான செயற்கைக்கோள்களை அனுப்பியதில் இந்தியா முதலிடத்தில் உள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை கூறினார்.

விழுப்புரம் வித்யோதயா கல்வியியல் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில் பங்கேற்ற அவர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

அமெரிக்கா, ரஷியா போன்ற நாடுகள் சந்திரனுக்கு விண்கலனை செலுத்தி ஆய்வில் முன்னோடியாகத் திகழ்ந்தன. கடந்த 2008-ஆம் ஆண்டில் இந்தியா சந்திரயான் -1 விண்கலத்தை அனுப்பி பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டது.  அப்போதுதான் சந்திரனில் தண்ணீர், கனிம வளங்கள் உள்ளிட்டவை உள்ளதை கணித்து முப்பரிமாண படங்கள் மூலம் நம்மால் உலகுக்கு சொல்ல முடிந்தது. இதை அடிப்படையாக வைத்துதான் பிற நாடுகள் மீண்டும் சந்திரனில் ஆய்வை தீவிரப்படுத்தின.

இந்த முறை சந்திரயான்-2 விண்கலத்தை அனுப்ப உள்ளதில், நான்கு சக்கர வண்டியை சந்திரனில் இறக்கி 3 கட்டங்களாக ஆய்வு மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. பூமியிலிருந்து நிலவின் தொலைவு நகர்ந்து போவதாக தெரிகிறது. அது உண்மையா? எவ்வளவு வேகத்தில் நகர்ந்து செல்கிறது என்பதை நாம் கீழிருந்தே அறிய முடியும். முதல்கட்ட ஆய்வில் அறிந்த விஷயங்களின் அடிப்படையில் இந்த முறை நிலவில் ஈரப் பதம், கல், மண் போன்றவற்றின் நிலையை தெளிவாக ஆய்வு செய்ய முடியும்.

விண்வெளி ஆராய்ச்சிப் படிப்புகள் தொடர்பாக மாணவர்களிடம் விழிப்புணர்வு உள்ளது. தற்போது மாணவர்களும் செயற்கைக்கோள்களை தயாரிக்க விண்வெளி ஆராய்ச்சித் துறை ஊக்கம் அளிப்பதோடு, உரிய வாய்ப்புகளையும் வழங்கி வருகிறது. மேலும், தனியார் நிறுவனங்களும் செயற்கைக்கோள்களை தயாரிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதால் இந்தத் துறையில் வேலைவாய்ப்புகள் பெருகி வருகின்றன.

சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு அறிவியல் ஆராய்ச்சி மையம் மூலமாகவும் செயற்கைக்கோள் தொடர்பான தொழில்நுட்பக் கல்வியை மாணவர்களுக்கு வழங்கி வருகிறோம். செயற்கைக்கோள் தொழில்நுட்பம் மூலம் விவசாயம், மீன்பிடி உள்ளிட்ட அனைத்துத் துறைகளுக்கும் உதவுவதிலும், மக்கள் பயன்பாட்டுக்கான செயற்கைக்கோள்களை அனுப்பியதில் உலகளவில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவதில் 4-ஆவது நாடாகவும் இந்தியா பிரகாசிக்கும். செயற்கைக்கோள்களை சிக்கனமாகவும், பயனுள்ளதாகவும் தயாரிப்பதில் நாம் முதலிடத்தில் உள்ளோம். 

ஹைட்ரஜன் எரிபொருள் தயாரிப்பு குறித்து தகவல் வந்துள்ளது. இது அறிவியல், பொருளாதார ரீதியில் சாத்தியமாகுமா என்பது உரிய ஆய்வுக்குப் பிறகே முடிவு செய்ய முடியும் என்றார் மயில்சாமி அண்ணாதுரை.

தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஜி.விஸ்வநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com