மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு: பிரக்யா, புரோஹித் உள்ளிட்டோர் வாரம் ஒருமுறை ஆஜராக உத்தரவு
By DIN | Published On : 18th May 2019 02:21 AM | Last Updated : 18th May 2019 02:21 AM | அ+அ அ- |

மும்பை: மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள பாஜக வேட்பாளர் பிரக்யா சிங் தாக்குர், ராணுவ துணை தளபதி பிரசாத் புரோஹித் உள்பட 7 பேரும் வாரம் ஒருமுறை நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று மும்பையில் உள்ள சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
மகாராஷ்டிர மாநிலம், நாசிக் மாவட்டத்தில் உள்ள மாலேகான் நகரில் மசூதி ஒன்றின் அருகே கடந்த 2008-ஆம் ஆண்டு செப்டம்பர் 29-ஆம் தேதி நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 6 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இச்சம்பவம் தொடர்பான வழக்கை மும்பையில் உள்ள தேசிய புலனாய்வு அமைப்பு(என்ஐஏ) சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வருகிறது.
முன்னதாக, இந்த வழக்கில், புரோஹித், பிரக்யா, முன்னாள் ராணுவ மேஜர் ரமேஷ் உபாத்யாய, அஜய் ரஹிர்கர், சுதாகர் திவேதி, சுதாகர் சதுர்வேதி, சமீர் குல்கர்னி ஆகிய 7 பேருக்கு எதிராக மாநில பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர், சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இவர்கள் அனைவரின் மீதும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது, இந்த வழக்கில் சாட்சிகளின் வாக்குமூலங்களை நீதிமன்றம் பதிவு செய்து வரும் நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணை சிறப்பு நீதிமன்ற நீதிபதி வினோத் படல்கர் முன் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அப்போது, வழக்கு விசாரணைக்கு குற்றம்சாட்டப்பட்டவர்கள் ஆஜராகாமல் இருப்பது குறித்து நீதிபதி அதிருப்தி தெரிவித்தார்.
அதையடுத்து, "குற்றம்சாட்டப்பட்ட 7 பேரும் வாரம் ஒருமுறை நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்; சரியான காரணமின்றி நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து யாரும் விலக்கு கோரக் கூடாது. அவ்வாறு விலக்கு கோரினால், அனுமதி மறுக்கப்படும்' என்று தெரிவித்த நீதிபதி, வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை வரும் 20-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பிரக்யா சிங் தாக்குர், மத்தியப் பிரதேச மாநிலத்தின் போபால் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் களத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.