ரூ.2 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் ரூ. 2 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். 


சென்னை: சென்னை விமான நிலையத்தில் ரூ. 2 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். 
விமானத்தில் கொழும்புவிலிருந்து வந்த ஜியாவுல் ஹக், செய்யது மலுங்கு, கலிஃபதுல்லா மற்றும் துபையில் இருந்து வந்த சிவா, ஃபர்சானா பேகம் தாஜூதீன் ஆகியோரிடம் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தப்பட்டது.
இதேபோல் வியாழக்கிழமையும் கொழும்புலிருந்து வந்த ஃபெரோஸ் கான், செய்யது சிக்கந்தர், முகமது முனாஸ், ஜவ்சீர், சுல்தான் செய்யது இப்ராஹீம், விஸ்வநாதன், முகமது ஆதாம், சிராஜூதீன், பைசுல் ஹக், செய்யது சுல்தான், சிபிரி முகமது, யூசுப் சாஹிபு, அப்துல் ஹலீம், நைனா முகமது, புரஷ்கான், சுபையர் அலி, கலந்தர் ஹைதர் அலி, கலந்தர் சாஹுல் ஹமீது, இமாம் பாபு, ஃபைசத் ரஹ்மான் ஆகியோரிடமும் சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டது. இதில், 6 கிலோ அளவிலான தங்கம் மலக்குடலில் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் மதிப்பு ரூ. 2 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது.

ஏ.சி. மெக்கானிக் வீட்டில் 50 பவுன் திருட்டு
சேத்துப்பட்டு அப்பாராவ் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (35), ஏ.சி.மெக்கானிக்.  கடந்த 12-ஆம் தேதி வீட்டைப் பூட்டிவிட்டு, குடும்பத்துடன் வெளியூர் சென்றார். இந்நிலையில் சதீஷ்குமார், வெள்ளிக்கிழமை வீடு திரும்பியபோது மறைத்து வைத்திருந்த சாவியை மர்ம நபர்கள் எடுத்து வீட்டினுள் பீரோவில் இருந்த 50 பவுன்  நகை, ரூ.1.25 லட்சம் ரொக்கத்தை திருடிச் சென்றதை அறிந்தார். இது குறித்த புகாரின்பேரில் சேத்துப்பட்டு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர். 

கல்லூரி பேராசிரியரிடம் 35 பவுன் திருட்டு
ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிபவர் ஜோ.ஜான்கிருபாகரன் (39). இவர் கடலூரில் நடைபெறும் தனது உறவினர் இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, பேருந்து மூலம் கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்துக்கு வெள்ளிக்கிழமை காலை வந்தார். 

அங்கிருந்து கடலூர் செல்லும் அரசுப் பேருந்தில் ஏறி அமர்ந்தார். அந்த பேருந்து மதுரவாயல் அருகே செல்லும்போது, அவர் அமர்ந்திருக்கும் இருக்கையின் மேலே உள்ள பொருள்கள் வைக்கும் இடத்தில் வைத்த தனது பை திருட்டு போனதை  ஜான் கிருபாகரன் அறிந்தார்.  

அதில் 35 பவுன் நகை, ரூ,19 ஆயிரம் ரொக்கம், மடிக்கணினி ஆகியவை இருந்தனவாம். இது குறித்த புகாரின்பேரில், கோயம்பேடு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து  வருகின்றனர்.

ஆட்டோ ஓட்டுநர் கொலை: 6 பேர் கைது
அயனாவரம் டிக்கா குளம் பகுதியைச் சேர்ந்தவர்  ஆட்டோ ஓட்டுநர் ஜெபசீலன் தனது  மகளின் திருமண வரவேற்புக்காக மீஞ்சூருக்கு  கடந்த 12-ஆம் தேதி சென்றபோது அவரை வழிமறித்து ஒரு கும்பல் வெட்டிக் கொலை செய்தது. இது தொடர்பாக அயனாவரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இந்நிலையில் இவ்வழக்குத் தொடர்பாக தேடப்பட்டு வந்த பிரசாந்த், சரவணன், சாய், அசோக் ஆகிய 4 பேர் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை சரணடைந்தனர்.  வழக்கின் முக்கிய எதிரிகளான பெரம்பூர் ராஜீவ் காந்தி நகரைச் சேர்ந்த வினோத் (21),  டிக்கா குளத்தைச் சேர்ந்த ராகுல் (22), மகேஷ் (23), நளினி (48), ஜி.கே.எம். காலனியைச் சேர்ந்த சதீஷ்குமார் (22), 17 வயது சிறுவன் ஆகிய 6 பேர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட வினோத், அயனாவரம் டிக்காகுளத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமியை திருமணம் செய்ய இருந்ததை ஜெபசீலன் தடுத்து நிறுத்தியதால்  ஏற்பட்ட விரோதத்தில் அவர் கொலை செய்யப்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. வழக்கில் சிறுமியின் தாய் நளினியும் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com