இந்திரா காந்தியைப் போல் என்னை கொல்லப் பார்க்கிறது பாஜக

"பாஜக என்னை கொல்லப் பார்க்கிறது. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியைப் போல எனது மெய்க்காப்பாளர்களாலேயே நானும் ஒருநாள்
இந்திரா காந்தியைப் போல் என்னை கொல்லப் பார்க்கிறது பாஜக


புது தில்லி: "பாஜக என்னை கொல்லப் பார்க்கிறது. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியைப் போல எனது மெய்க்காப்பாளர்களாலேயே நானும் ஒருநாள் கொல்லப்படலாம்' என்று தில்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் கூறியுள்ளார். 

இதுதொடர்பாக பஞ்சாப் மாநிலத்தில் செய்தித் தொலைக்காட்சி ஒன்றுக்கு சனிக்கிழமை அளித்த பேட்டியில் கேஜரிவால் கூறியதாவது: 

பாஜக எனது உயிருக்கு குறி வைத்துள்ளது. அந்தக் கட்சி ஒருநாள் என்னை கொலை செய்துவிடும். எனது தனிப்பட்ட மெய்க்காப்பாளர்களாலேயே நான் கொல்லப்படலாம். எனது மெய்க்காவலர்கள் பாஜகவுடன் தொடர்பில் உள்ளனர். 
மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின்போது ஒருவர் என்னை தாக்க முற்பட்டார். அவர் ஆம் ஆத்மி கட்சியின் அதிருப்தி தொண்டர் என்று காவல்துறை கூறியது. எதிர்காலத்தில் நான் கொல்லப்படலாம். அப்போதும், அதிருப்தி தொண்டரால் நான் கொல்லப்பட்டேன் என்று காவல்துறை கூற வாய்ப்புள்ளது. 

அப்படியென்றால், பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் மீது கோபம் கொண்ட காங்கிரஸ் தொண்டர் அவரை தாக்கலாமா; பிரதமர் மோடி மீது ஆத்திரம் கொண்ட பாஜக தொண்டர் அவரை தாக்கலாமா என்று கேஜரிவால் கேள்வி எழுப்பியுள்ளார். 

கேஜரிவாலின் இந்த குற்றச்சாட்டுக்கு தில்லி காவல்துறையின் கூடுதல் மக்கள் தொடர்பு அதிகாரி அனில் மிட்டல் கூறுகையில், "தலைவர்களுக்கான பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள காவல்துறையினர், நன்கு பயிற்சியளிக்கப்பட்ட, அர்ப்பணிப்புடன் பணியாற்றக் கூடியவர்களாவர். 

பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு குறிப்பிடத்தகுந்த வகையில் அவர்கள் பாதுகாப்பு வழங்கி வருகின்றனர். தில்லி முதல்வருக்கான பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள காவலர்களும் அவ்வாறு அர்ப்பணிப்புடன் பணியாற்றுபவர்களே' என்றார்.

பாஜக கண்டனம்: பாதுகாப்பு அதிகாரிகளால் தனது உயிருக்கு ஆபத்து என்று கேஜரிவால் கூறியுள்ளதற்கு தில்லி பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக பாஜக மூத்த தலைவரும், தில்லி சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான விஜேந்தர் குப்தா சனிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறுகையில், "கேஜரிவால் பொய் கூறுவதை  வாடிக்கையாக வைத்துள்ளார். தினம்தோறும் புதுப்புதுப் பொய்களைக் கூறி வருகிறார். இப்போது, தனது பாதுகாப்பு அதிகாரிகள் பாஜகவுக்கு ரிப்போர்ட் செய்வதாகவும் அவர்களால் தனது உயிருக்கு ஆபத்து என்றும் அவர் கூறியுள்ளார். 

அப்படி கேஜரிவால் நினைத்தால் இது தொடர்பாக உடனடியாக காவல் துறைக்குத் தெரியப்படுத்த வேண்டியது அவரது கடமையாகும். கேஜரிவால் இசட் பிளஸ் பாதுகாப்புப் பெறுகிறார். இவரைப் பாதுகாக்கும் பணிகளில் சுமார் 400- 500 போலீஸார் ஈடுபட்டுள்ளனர். இதற்காக ஆண்டுதோறும் சுமார் ரூ.50 கோடி செலவிடப்படுகிறது. இந்நிலையில் தனது பாதுகாப்பு அதிகாரிகள் மீது அவர் அபாண்டமாகப் பழி கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com