தமிழக சட்டப்பேரவை இடைத்தேர்தல்: திமுக 10 முன்னிலை
By DIN | Published On : 23rd May 2019 09:52 AM | Last Updated : 23rd May 2019 09:52 AM | அ+அ அ- |

சென்னை: தமிழக சட்டப்பேரவைக்கான இடைத்தேர்தல் 22 தொகுதிகளில் 10 இடங்களில் திமுக கூட்டணி முன்னிலையில் உள்ளது.
தமிழகத்தில் அதிமுக ஆட்சியின் எதிர்காலத்தை தீர்மானிக்க போகும் நாள் வந்துவிட்டது. நடந்து முடிந்த 22 தொகுதி சட்டப்பேரவைக்கு நடைபெற்ற இடைத்தேர்தலுக்கானவாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
பிரதமர் மோடி தலைமையிலான 5 வருட பாஜக ஆட்சி நிறைவு பெற்றதையடுத்து கடந்த மார்ச் மாதம் தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஏப்ரல் 11 ஆம் தேதி தொடங்கிய மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றது. தமிழகத்தில் ஏப்ரல் 18 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து 22 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. ஏப்ரல் 18 ஆம் தேதி 18 தொகுதிக்கும், மே 19 ஆம் தேதி 4 தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடந்தது.
தேர்தல் நடைபெற்ற 22 தொகுதிகள்: பூந்தமல்லி, பெரம்பூர், திருப்போரூர், சோளிங்கர், குடியாத்தம், ஆம்பூர், பாப்பிரெட்டிபட்டி, அரூர், நிலக்கோட்டை, தஞ்சாவூர், ஓசூர், மானாமதுரை, ஆண்டிப்பட்டி, பெரியகுளம், சாத்தூர், பரமக்குடி, விளாத்திகுளம், திருவாரூர், திருப்பரங்குன்றம், சூலூர், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் (தனி) சட்டமன்றத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதற்கான வாக்குகள் எண்ணப்பட்டு இன்று முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
பேரவையில் கட்சிகளின் பலம்
மொத்த இடம் - 234
அதிமுக - 113
திமுக - 88
இந்திய தேசிய காங்கிரஸ் - 08
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் - 01
சுயேச்சை(அமமுக) - 01
பேரவைத் தலைவர் - 01
காலியிடங்கள் - 22
இந்த இடைத்தேர்தல் முடிவுகள்தான் தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தும். அதிமுக அரசு தொடர்ந்து நீடிக்குமா, ஆட்சி மாறுமா என்பது இந்த தேர்தல் முடிவுகளை பொறுத்தே அமையும்.
வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், தற்போதைய நிலவரப்படி, திமுக கூட்டணி 10 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 8 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன.