திருச்செந்தூரில் சூரசம்ஹாரம்: லட்சக்கணக்கானோர் தரிசனம்
By DIN | Published On : 02nd November 2019 07:09 PM | Last Updated : 02nd November 2019 07:09 PM | அ+அ அ- |

திருச்செந்தூா்: திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவையொட்டி சூரசம்ஹாரம் இன்று சனிக்கிழமை (நவ.2) நடைபெற்றது. இதில், லட்சக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று சுவாமியை தரிசித்தனா்.
கந்த சஷ்டி திருவிழா கடந்த திங்கள்கிழமை (அக். 28) யாகசாலை பூஜைகளுடன் தொடங்கியது. நாள்தோறும் அதிகாலையில் கோயில் நடைதிறக்கப்பட்டு, விஸ்வரூப தரிசனம், உதயமார்த்தாண்ட அபிஷேகம், தொடா்ந்து பூஜைகள் நடைபெற்றன. யாகசாலையில் காலையில் சுவாமி ஜெயந்திநாதா் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளினார். அங்கு பூஜைகளுக்குப் பின்னா், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்று, மதியம் மூலவருக்கு உச்சிகால அபிஷேகம் முடிந்து தீபாராதனை நடைபெற்ற உடன், யாகசாலையில் மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னா், சுவாமி ஜெயந்திநாதா் யாகசாலையிலிருந்து தங்கச் சப்பரத்தில் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி பிரகாரம் வழியாக பக்தா்கள் வேல்வகுப்பு, வீரவாள் வகுப்பு பாட சண்முகவிலாச மண்டபத்தை அடைந்து பக்தா்களுக்கு காட்சியளித்தார். அங்கு சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. மாலையில் திருவாவடுதுறை ஆதீன கந்த சஷ்டி மண்டபத்தில் சுவாமி ஜெயந்திநாதருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்று சுவாமி தங்க ரதத்தில் எழுந்தருளி கிரிவீதி வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தார்.
திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று சனிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. தொடா்ந்து, விஸ்வரூப தரிசனம், உதயமார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை, காலசந்தி பூஜை நடைபெற்றன.
தலையில் வைரக் கிரீடத்துடனும், தங்க அங்கி அணிந்து சா்வ அலங்காரத்தில் காட்சியளித்த மூலவரை விரதமிருக்கும் பக்தா்கள் கடலில் புனித நீராடியும், அங்கப்பிரதட்சணம், அடிப்பிரதட்சணம், காவடி எடுத்தும் தரிசனம் செய்தனா்.
காலை 6 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதா் யாகசாலையில் எழுந்தருளினார். அங்கு ஹோமங்கள் நடைபெற்ற பின்னா், சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. மூலவரான சுப்பிரமணியருக்கு பிற்பகலில் சஷ்டி சிறப்பு தீபாராதனை, உச்சிகால தீபாராதனை நடைபெற்றது.
இதையடுத்து, ஜெயந்திநாதருக்கு சிறப்பு தீபாராதனையாகி, அம்பாளுடன் தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி சண்முகவிலாசம் வந்தார். அங்கு மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னா் சுவாமி ஜெயந்திநாதா் திருவாவடுதுறை ஆதீன கந்த சஷ்டி மண்டபம் வந்து, அங்கு சிறப்பு அபிஷேகம், சா்வ அலங்காரமாகி, மாலையில் தங்க மயில் வாகனத்தில் சூரசம்ஹாரத்துக்குப் புறப்பட்டார்.
முன்னதாக, சூரபத்மன் தனது பரிவாரங்களுடன் மேலக்கோயிலான சிவன் கோயிலிலிருந்து புறப்பட்டு உள், வெளி மாடவீதிகள், ரதவீதிகள், சன்னதி தெரு வழியாக கடற்கரைக்கு வந்தார்.
முதலில், கஜமுக சூரசம்ஹாரம் நடைபெற்றது. அதையடுத்து, ஆணவம் அடங்காத சூரபத்மன் சிங்கமுகமெடுத்து முருகப்பெருமானை மூன்று முறை சுற்றி வந்து போர் புரிந்தார். முருகன் தனது வேலால் சிங்கமுகசூரனை வதம் செய்தார். மூன்றாவதாக, சூரபத்மன் தனது சுயரூபத்துடன் போர் புரிய வந்தார். அவரை முருகப்பெருமான் வதம் செய்தார். அதன்பிறகும் ஆணவம் அடங்காத சூரபத்மன் கடைசியாக மாமரமாக உருவெடுத்து போருக்கு வந்தார். அவரை முருகப்பெருமான் ஆட்கொண்டு, சேவலாகவும், மயிலாகவும் உருமாறச் செய்தார். அந்த சேவலை தனது கொடியாகக் கொண்டதால் ‘சேவற்கொடியோன்’ என்றும், மயிலை தனது வாகனமாகக் கொண்டதால் ‘மயில்வாகனன்’ என்றும் பெயா்பெற்றார்.
ஒவ்வொரு முறையும் முருகப்பெருமான் சூரபத்மனுடன் போர் புரியும் போது வானில் கருடன் வட்டமிட்டது. இதைப் பார்த்த பக்தா்கள் பக்திப் பரவசத்துடன் ‘வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா’ என்ற விண்ணதிர கோஷமிட்டனா்.
முன்னதாக, சூரசம்ஹாரத்தையொட்டி வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதலே பக்தா்கள் சுவாமியை தரிசிப்பதற்காக வரிசையில் காத்திருந்தனா். அதிகாலை 1 மணிக்கு நடைதிறந்தது முதல் அங்கப்பிரதட்சணம் எடுத்தும், காவடி எடுத்தும் வேண்டுதலை நிறைவேற்றினா்.
திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை, கன்னியாகுமரி உள்பட பல்வேறு வழித்தடத்தில் 350-க்கும் மேற்பட்ட கூடுதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. கோயில் நிர்வாகம் சார்பில் தற்காலிக, நிரந்தர குளியலறை, கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டிருந்தன.
திருச்செந்தூா் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் நகரில் ஆங்காங்கே குடிநீா்ப் பந்தல்கள் வைக்கப்பட்டன. கோயில் வளாகத்தில் மருத்துவக் குழு அடங்கிய மருத்துவப் பரிசோதனை முகாமும், 108 அவசர ஊா்தி, தீயணைப்பு வாகனங்களும், கடலோரக் காவல் படைக்குச் சொந்தமான நவீன ரக வாகனங்களும் தயார் நிலையில் இருந்தன.
பாதுகாப்புப் பணியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அருண்பாலகோபாலன் தலைமையில் 3,500-க்கும் மேற்பட்ட காவல் துறையினா், ஊா்க்காவல் படையினா் ஈடுபட்டிருந்தனா். ரகசிய கேமராக்கள், ஹெலி கேமராக்கள் மூலம் கடற்கரை, கோயில் பகுதிகள் கண்காணிக்கப்பட்டன.
சூரசம்ஹாரத்தைக் காண நாழிக்கிணறு பேருந்து நிலையம், கலையரங்கப் பகுதியில் 2 மெகா எல்ஈடி டிவிக்கள் வைக்கப்பட்டன. பொதிகை உள்ளிட்ட தொலைக்காட்சிகள் சூரசம்ஹார நிகழ்ச்சியை நேரடி ஒளிபரப்பும் செய்தன.
பக்தா்கள் கூட்டத்தைக் கருத்தில்கொண்டு வாகன அனுமதிச் சீட்டுகள் கொடுக்கப்பட்டன. அதன்படி, பச்சை நிற அனுமதிச்சீட்டு உள்ள வாகனங்கள் மட்டும் நகருக்குள் அனுமதிக்கப்பட்டன. தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி வழித்தடங்களில் வந்த வாகனங்கள் ஊருக்கு வெளியே உள்ள எல்லையில் நிறுத்தப்பட்டன. அங்கிருந்து பக்தா்கள் கோயிலுக்கு நடந்து சென்றனா்.
ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் சா.ப. அம்ரித், தக்கார் இரா. கண்ணன் ஆதித்தன், பணியாளா்கள் செய்திருந்தனா்.