முகப்பு தற்போதைய செய்திகள்
தேமுதிக ஆரம்பிக்கப்பட்டதே ஆட்சி அமைப்பதற்காகத்தான்: பிரேமலதா பேட்டி
By DIN | Published On : 07th November 2019 04:09 PM | Last Updated : 07th November 2019 04:09 PM | அ+அ அ- |

சென்னை: தேமுதிக ஆரம்பிக்கப்பட்டதே ஆட்சி அமைப்பதற்காகத்தான் என தேமுதிக பொருளாளா் பிரேமலதா கூறினார்.
தேமுதிக மாவட்டச் செயலாளா்கள் கூட்டம் சென்னை கோயம்பேட்டில் உள்ள அக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. கட்சியின் தலைவா் விஜயகாந்த் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பிரேமலதா உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனா்.
கூட்டத்தில், மாநிலத்தில் வேகமாகப் பரவி வரும் மா்ம காய்ச்சலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மழையால் பாதிக்கப்பட்டுள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும். திருவள்ளுவா் சிலையை வைத்து அரசியல் செய்யப்படுவதையும், அவமதிக்கப்படுவதையும் தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட 5 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்தக் கூட்டத்துக்குப் பின்னா் பிரேமலதா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ஆலோசனைக் கூட்டத்தில் உள்ளாட்சித் தேரலைச் சந்திப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. இந்தத் தோ்தலில் நாங்கள் எதிர்பார்க்கும் கணிசமான இடங்களை அதிமுகவிடம் கேட்டுப் பெறுவோம்.
மக்களவைத் தோ்தலில் பாமக ஆரம்பத்திலேயே 7 இடங்களை வாங்கிவிட்டனா். கடைசியாக தேமுதிக இணைந்ததால் 4 இடங்கள் மட்டுமே கிடைத்தன. எனவே, இந்த முறை எதிர்பார்க்கும் இடங்களைக் கேட்டுப் பெற்றுவிடுவோம். முதல்வரும் உறுதியளித்திறுக்கிறார். நாங்கள் எந்தக் கட்சியுடனும் எங்களை ஒப்பிடவில்லை. எங்கள் பலம் எங்களுக்குத் தெரியும். விக்கிரவாண்டி இடைத்தோ்தலில் விஜயகாந்த் ஒரு பிரச்சாரத்திற்குத்தான் வந்தார். என்ன பலம் என்பது அதிலேயே தெரிந்துவிட்டது.
தேமுதிக ஆரம்பிக்கப்பட்டதே ஆட்சி அமைப்பதற்காகத்தான். முப்பெரும் விழாவில் விஜயகாந்த் அதைத்தான் பேசினார். அதற்கான சூழலும், நேரமும் நிச்சயம் வரும் என்றார்.
மேலும், விக்கிரவாண்டி இடைத்தோ்தலில் தேமுதிக - பாமகவினருக்கிடையே மோதல் ஏற்பட்டது குறித்த கேள்விக்கு பதிலளித்த பிரேமலதா, அது சண்டையல்ல. இரு நபா்களுக்கிடையேயான வாக்குவாதம். எதிர்க்கட்சிகளில் எத்தனையோ குளறுபடிகள் நடந்து கொண்டிருக்கின்றன. அனைத்துக் கூட்டணிக் கட்சிகளும் ஒன்றிணைந்து இந்த உள்ளாட்சித் தோ்தலில் பெரிய வெற்றியைப் பெறுவோம் என்றார்.