அட்டைப்பட கடவுளின் நிலைதான் பெண் சிசுவிற்கும்...

கடந்த 3 தலைமுறைகளில், தோராயமாக 50 மில்லியன் பெண்கள், இந்தியாவின் மக்கள் தொகையிலிருந்து பெண்கள் என்ற ஒரே காரணத்திற்காக அழித்தொழிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றால் நம்பமுடிகிறதா?
அட்டைப்பட கடவுளின் நிலைதான் பெண் சிசுவிற்கும்...

கடந்த 3 தலைமுறைகளில், தோராயமாக 50 மில்லியன் பெண்கள், இந்தியாவின் மக்கள் தொகையிலிருந்து பெண்கள் என்ற ஒரே காரணத்திற்காக அழித்தொழிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றால் நம்பமுடிகிறதா? மானுட வரலாற்றில் நிகழ்ந்திருக்கும், நிகழும் மிக மோசமான இனப்படுகொலைகளில் முதன்மையானது இப்படுகொலைகள். கடந்த 1991ம் ஆண்டு நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஒவ்வொரு ஆண்டு பிறக்கும் குழந்தைகளில் ஆயிரம் ஆண்களுக்கு 972 பெண்கள் இருந்தனர். ஆனால் 2001ம் ஆண்டு நடத்திய கணக்கெடுப்பில் பெண்களின் பிறப்பு விகிதம் 942 ஆக குறைந்தது. இந்தியாவில் நடுத்தர மற்றும் ஏழ்மையான மக்களே அதிகம் இருப்பதால், ஒரு பெண் குழந்தையை பெற்று, வளர்த்து,  திருமணம் செய்து வைக்கும் வரையில் ஏற்படும் செலவுகளை வறுமையின் காரணமாக அவர்களால் சமாளிக்க முடிவதில்லை. இதனால் வேறு வழியின்றி மனதை கல்லாக்கியோ, ரணமாக்கியோ, அல்லது சர்வ சாதாரணமாகவோ பெண் குழந்தைகளை கருணைக் கொலை செய்துவரும் பழக்கம், இந்தியா சுதந்திரம் பெறும் முன்பிலிருந்து இன்று வரை நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றது.  

இந்தியாவில் பெண்களை நீக்கும் வழிமுறைகள் பல உள்ளன. அவை பெண் கருக் கொலை, பெண் சிசுக் கொலை, பெண்களைப் பட்டினிப் போடுதல், வரதட்சணைத் தொடர்பான கொலைகள், “கௌரவ”க் கொலைகள், கருவிலேயே பெண் குழந்தைகளைக் கொல்வதற்காகத் திணிக்கப்படும் தொடர் கருக்கலைப்பினால் விளையும் கர்பக்கால மரணங்கள்,இது தவிர காணாமல் போனவர்களும் பலர் உள்ளனர். இங்கு ”காணாமல் போனவர்கள்” எனும் சொல் உண்மையில் ஒரு இடக்கரடக்கல் என்றே கூறலாம்.

பெண் சிசுக்கொலை குறித்த உண்மைகள்:

1990-களுக்கு முன்புவரை மருத்துவ வசதிகள் சரிவரக் கிடைக்காத, சென்று சேராத நிலையில் கிராமப்புறங்களில் இருக்கும் மருத்துவச்சிகளின் உதவியால் கர்ப்பிணியின் வயிற்றில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என தெரிந்துகொண்டு பெண் குழந்தையாக இருந்தால் கருக்கலைப்பு செய்தும்,அது நிறைவேறாதபட்சத்தில், குழந்தை பிறந்ததும் அதற்குக் கள்ளிப்பால், நெல் என  கொடுத்து சிசுக்கொலை செய்து வந்தனர். தற்போது மருத்துவ வசதி முன்னேறி, நவீன அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் முறை வந்தபிறகு, கர்ப்பிணியின் வயிற்றில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என சௌகரியமாகத் தெரிந்துகொண்டு பெண் குழந்தைகளை சர்வ சாதாரணமாக கருக்கலைப்பு செய்து அழித்துவருகின்றனர். கடந்த செவ்வாய்க்கிழமை கூட விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே பிறந்து 15 நாளேயான பெண் குழந்தையை கொன்று ஆற்றில் புதைத்ததாக அக்குழந்தையின் தந்தை கைது செய்யப்பட்ட செய்தியை நாம் அனைவரும் அறிவோம்..

இந்தியாவில் மட்டும் ஒவ்வொரு நாளும் சுமார் 2,000 பெண் சிசுக்கள் சட்டத்துக்குப் புறம்பாக கருவிலேயே கொலை செய்யப்படுவதாகக் கூறுகிறது ஐக்கிய நாடுகளின் அறிக்கை. கடந்த 30 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் தற்போது பெண் சிசுக்கொலைகளின் எண்ணிக்கை குறைந்து இருப்பதாக மற்றொரு ஆய்வறிக்கை கூறுகிறது.

பெண் குழந்தைகளை பெற்றோர் ஒதுக்கக் காரணங்கள்:

 * தனக்குப் பிறகு குடும்பத் தலைமுறை தொடர ஆண் குழந்தை வேண்டும் என்ற எண்ணம்.

 * பெண் குழந்தைகளை பெற்றது முதல் திருமணம் செய்து கொடுத்தபிறகும்கூட தொடரும் பல்வேறு கடமைகளுக்கான செலவுகள்.

 * ஆண் குழந்தை பிற்காலத்தில் தங்களை காப்பாற்றும் என்ற கணிப்பு.

 * தங்கள் இறுதிச்சடங்கினைச் செய்ய ஆண் பிள்ளை வேண்டும் என்ற பெற்றோர்களின் இது போன்ற மனநிலையை அரசும், சமூக ஆர்வலர்களும் மாற்ற ஒருபுறம் முயற்சித்தாலும், உலக அளவில் இந்தியா மற்றும் சீனாவில் நடைபெறும் 100 சிசு மரணங்களில் 70 சிசுகள் பெண் சிசுக்களாக உள்ளது என்பதே வேதனையான செய்தி.


கடவுள் நம்பிக்கை கொண்ட ஒவ்வொரு வீட்டிலும் பெண் குழந்தைகளை மகாலட்சுமி, அதிர்ஷ்ட தேவதை என கருதுவோர் வாழும் இதே பூமியில்தான் பெண் குழந்தைகளை சுமையாகக் கருதுவோரும் இருக்கின்றனர்.

பெண் சிசுக்கொலை என்றதும் கருவிலேயே அல்லது பிறந்த பிறகு ஒரு குழந்தையைக் கொல்வது என்பது மட்டுமல்ல, 10 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகள் கொல்லப்படுவதும்தான். ஒரு புறம் பெற்றோர்களே பெண் குழந்தைகளை கருணைக்கொலை செய்வதைத்தாண்டி, பெண்குழந்தைகளை கடத்திச்சென்று பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கி கொலை செய்வோரின் எண்ணிக்கையும் தற்போது அதிகரித்துள்ளது. ஒவ்வொரு நாளும் 10 வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தைகள் முதல் ஏராளமான பெண்கள்  ஏதோ ஒருபகுதியில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். இப்படி ஒவ்வொரு காலத்திலும் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் படிப்படியாக அதிகரித்துக்கொண்டேதான் வருகிறது. இதே நிலை தொடர்ந்தால் தற்போது 100:90 என்ற அளவில் இருக்கும் ஆண் பெண் விகிதாச்சாரம், இனிவரும் காலங்களில் அதிகளவில் வேறுபடும்.

என்னதான் வரதட்சணை ஒழிப்புச் சட்டம் 1961, கருவிலேயே பாலினம் அறியும் செயலுக்கு எதிரானச் சட்டம்(PCPNDT Act),பெண் கல்விக்கு ஆதரவான சட்டம், பெண்ணுரிமைக்கு ஆதரவான சட்டம், பெண்ணுக்கும் சொத்தில் சம உரிமை/பங்கு தரும் சட்டம் என, சமுதாயத்தைச் சீரழிக்கும் இந்தக் கொடுமையை முடிவுக்குக் கொண்டு வரவும், மக்களின் எண்ணப் போக்கை மாற்றவும் பல்வேறு முயற்சிகளை அரசு மேற்கொண்டாலும், அவை  இன்றும் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன என்பதே நிதர்சனமான உண்மை. 

கருவறையில் இருக்கும் கடவுளுக்கும் பேப்பர், அட்டைப்படங்களில் அச்சிடப்படும் கடவுளுக்கும் வித்தியாசம் பார்க்கும் இந்த பூமியில் பெண்கள் மட்டும் என்ன விதிவிலக்கா?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com