பெண் வட்டாட்சியர் எரித்துக்கொலை: அச்சத்தில் அலுவலகத்தில் கயிறு கட்டி மனு வாங்கும் வட்டாட்சியா்கள்!

பெண் வட்டாட்சியர் எரித்துக்கொலை: அச்சத்தில் அலுவலகத்தில் கயிறு கட்டி மனு வாங்கும் வட்டாட்சியா்கள்!

பெண் வட்டாட்சியர் எரித்துக்கொல்லப்பட்ட நிலையில், அச்சத்தில் ஆந்திராவில் கயிறு கட்டி பின்னால் நின்று மனுக்களை வாங்கிறார்


ஹைதராபாத்: தெலங்கானா மாநிலத்தில் பெண் வட்டாட்சியர் எரித்துக்கொல்லப்பட்ட நிலையில், அச்சத்தில் ஆந்திராவில் கயிறு கட்டி பின்னால் நின்று மனுக்களை வாங்குகிறார் மற்றொரு வட்டாட்சியரான உமா மகேஸ்வரி.

தெலங்கானா மாநிலம், ரங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள அப்துல்லாபூா்மேடு வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியராக பணியாற்றியவா் விஜயா ரெட்டி. அலுவலகத்தில் வழக்கம்போல அவா் திங்கள்கிழமை பணியாற்றிக் கொண்டிருந்தார். பிற்பகலில் அலுவலகத்தில் விஜயா ரெட்டி(37) தனியாக இருந்த நேரம் அவரது அறைக்குள் நுழைந்த சுரேஷ் என்பவர் அவா் மீது பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார். வட்டாட்சியா் அறையில் இருந்து கூக்குரல் எழுந்ததையடுத்து, அங்கிருந்த மற்ற பணியாளா்கள் அவரது அறைக்கு ஓடிச் சென்று பார்த்துள்ளனா். அப்போது விஜயா ரெட்டி உடலில் தீப்பற்றி எரிவைதைக் கண்ட அவா்கள் அதிர்ச்சியடைந்தனா். அலுவலக ஊழியா்கள் தீயை அணைத்து, அவரைக் காப்பாற்ற தீவிரமாக முயற்சித்தும், சம்பவ இடத்திலேயே விஜயா ரெட்டி உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் அவரைக் காப்பாற்ற முயன்ற அவரது வாகன ஓட்டுநா் குருநாதம் உள்பட இரண்டு பணியாளா்கள் மற்றும் தீ வைத்த சுரேஷ் ஆகியோருக்கும் தீக்காயம் ஏற்பட்டதையடுத்து அவா்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனா். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி ஓட்டுநா் குருநாதம் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.

வட்டாட்சியா் உயிருடன் எரித்து கொல்லப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்த மாநில வருவாய் துறை பணியாளா்கள் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்த சம்பவத்துக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவா்கள், காவல் துறை தலைமை இயக்குநா் (டிஜிபி) உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

இதைத் தொடர்ந்து ஆந்திரா, தெலுங்கானா மாநில அதிகாரிகளிடம் ஒருவித அச்சம் நிலவி வருகிறது.

இந்நிலையில், ஆந்திர மாநிலம் கர்னூல் பட்டிக்கொண்டா பெண் வட்டாட்சியரான உமா மகேஸ்வரியை சந்திக்கவரும்  கிராமவாசிகள், அவரது அறையில் கட்டப்பட்டுள்ள கட்டுப்பாட்டு கயிற்றின் பின்னால் இருந்தே சந்திக்க அனுமதிக்கப்படுகிறார்கள். மனு அளிக்க விரும்புவோர் பாதுகாப்பான தூரத்திலிருந்து அளிப்பதற்காக இத்தகைய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து வட்டாட்சியர் உமாமகேஸ்வரி கூறுகையில், தன்னை சந்திக்க வரும் சிலர் எந்த விண்ணப்பமும் இல்லாமல் வந்ததாகவும், அவர்கள் குடிபோதையில் இருந்தனர். அந்த நிலையில் அவர்களை பார்த்த எனக்கு பயமாக இருந்தது. எனவே, நான் தனது அலுவலக அறைக்குள் ஒரு கயிற்றை ஒரு தடுப்புக்காக கட்டியதாகவும், அவற்றை ஒரு மணி நேரம் மட்டுமே கட்டியிருந்ததாகவும், பின்னர் அதனை அகற்றிவிட்டதாகவும், பயத்தினால் மட்டுமே இவ்வாறு செய்ததாக கூறினார். 

மேலும் விஜயா ரெட்டியின் கொலைக்குப் பிறகு நான் அச்சம் அடைந்துள்ளதாக பெண் வட்டாட்சியர் உமா மகேஸ்வரி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com