செல்போனை ‘சுவிட்ச் ஆப்’ செய்துவிட்டு குழந்தைகளுடன் பேசுங்கள்!

குழந்தைகள் தினமான நவம்பர் 14 ஆம் தேதியாவது செல்போனை ‘சுவிட்ச் ஆப்’ செய்துவிட்டு ஒரு மணி நேரம் உங்களுடைய குழந்தைகளுடன்
செல்போனை ‘சுவிட்ச் ஆப்’ செய்துவிட்டு குழந்தைகளுடன் பேசுங்கள்!

சென்னை: குழந்தைகள் தினமான நவம்பர் 14 ஆம் தேதியாவது செல்போனை ‘சுவிட்ச் ஆப்’ செய்துவிட்டு ஒரு மணி நேரம் உங்களுடைய குழந்தைகளுடன் மனசுவிட்டு பேசுவதற்கு நேரத்தை செலவிடுங்கள் என்ற, பள்ளிக்கல்வி இயக்குநரின் அறிவுரை, பெற்றோர், கல்வியாளர்கள் மத்தியில், பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இன்றைய தொழிற்நுட்ப வளர்ச்சி யுகத்தில், ஆறாம் விரலாய் மாறிவிட்ட, ஸ்மார்ட் செல்போனால், குடும்ப உறவுகளுக்கான நெருக்கம் குறைந்து கொண்டே வருகிறது. சமூக ஊடகங்களில் நண்பர்களை தேடுவோர், வீட்டிலிருப்போருடனான உணர்வுகளுக்கு மதிப்பளித்து அதற்கான நேரத்தை செலவிடுவதற்கு நேரம் ஒதுக்கப்படுவதில்லை. இதனால், நேரடியாக பாதிக்கப்படுவது குழந்தைகள் என்பதும் அவர்கள் மன அழுத்தத்துடன் இருப்பதாக பெருமாபாலான கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர். 

குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டு வரும் நவம்பர் 14 ஆம் தேதி பள்ளிக்கல்வி துறை சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுவது வழக்கம். அந்தவகையில் இந்த ஆண்டும் பள்ளிக்கல்வி துறை சார்பில் மாநில அளவில் குழந்தைகள் தின விழா நடைபெற உள்ளது. அதேபோல், ஒவ்வொரு பள்ளிகளிலும் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட இருக்கிறது.

குழந்தைகளின் மன அழுத்தத்திற்கு தீர்வு காணும் வகையில், கல்வித்துறை புது முயற்சி எடுத்துள்ளது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், 'பெற்றோர்களே.... குழந்தைகள் தினத்தன்று, இரவு 7:30 முதல் 8:30 மணி வரை, பெற்றோர் தங்களது செல்போனை ‘சுவிட்ச் ஆப்’ செய்துவிட்டு, ஒரு மணி நேரம் உங்களுடைய குழந்தைகளுடன் மனசுவிட்டு பேசுவதற்கு நேரத்தை செலவிடுங்கள். இது, குழந்தைகளின் உணர்வுகளை புரிந்து கொள்வதற்கு உதவும். இதை ஏதோ அன்றைய ஒரு நாளைக்கு மட்டும் செய்யாமல், சிறந்த தலைமுறை உருவாக்குவது, பெற்றோரின் கடமை என்பதால், இவ்வழக்கத்தை வாரம், மாதம் என தொடர்ந்து பின்பற்றுங்கள். இந்த ஒரு மணி நேரத்தில், எந்த மின்சாதனங்களையும் பயன்படுத்த வேண்டாம்.

இதை பின்பற்றுவோர், www.gadgetfreehour.com என்ற இணையதளத்தை பார்வையிட்டு, கூடுதல் தகவல்களை பெற்று அதில் குழந்தைகளோடு நேரம் செலவிடுவது தொடர்பான அறிவுரைகள் வழங்கப்பட்டு இருப்பதாகவும், அன்றைய தினத்தில் அந்த இணையதளத்தை சென்று பார்க்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதில் கொடுக்கப்பட்டு இருக்கும் அறிவுரைகளுக்கு பதில் அளிக்கவும் பெற்றோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறு பதில் அளிக்கும் பெற்றோருக்கு சான்றிதழும் வழங்கப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த அறிவுரை, கல்வியாளர்கள், பெற்றோர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com