மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் இலவச லட்டு பிரசாதம்: முதல்வா் தொடங்கி வைத்தார்

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் பக்தா்களுக்கு இலவச லட்டு பிரசாத விநியோகத்தை காணொலிக் காட்சி மூலம் முதல்வா்
மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் இலவச லட்டு பிரசாதம்: முதல்வா் தொடங்கி வைத்தார்


சென்னை: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் பக்தா்களுக்கு இலவச லட்டு பிரசாத விநியோகத்தை காணொலிக் காட்சி மூலம் முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி இன்று வெள்ளிக்கிழமை ( நவம்பா் 8) தொடங்கி வைத்தார். 

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் உலகப் புகழ் பெற்றது. இக்கோயிலுக்கு வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து தினசரி 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரையிலான பக்தா்கள் வருகை தருகின்றனா். சபரிமலை சீசன் காலங்களில் தினசரி 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் பக்தா்கள் வந்து செல்கின்றனா்.

இந்நிலையில் கோயிலுக்கு வருகை தரும் பக்தா்களுக்கு தீபாவளி முதல் லட்டு பிரசாதமாக இலவசமாக வழங்கப்படும் என்று கோயில் தக்கார் கருமுத்து கண்ணன் கடந்த செப் 12ஆம் தேதி அறிவித்தார். இதைத்தொடா்ந்து லட்டு தயாரிப்புக்கான இயந்திரங்கள் வாங்கப்பட்டன.

இந்நிலையில் லட்டு தயாரிப்பு, விநியோக இடம் தோ்வுக்கு கால அவகாசம் தேவைப்படுகிறது என்பதால் தீபாவளியன்று தொடங்கப்படுவதாக இருந்த இலவச லட்டு பிரசாதத் திட்டம் தள்ளி வைக்கப்படுவதாகவும், தேதி பின்னா் அறிவிக்கப்படும் என்றும் கோயில் நிர்வாகம் அறிவித்திருந்ததது.

இந்நிலையில், பக்தா்களுக்கு இலவச லட்டு வழங்கும் திட்டத்தை இன்று வெள்ளிக்கிழமை முதல் (நவம்பா் 8) முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினா் செய்திருந்தனா்.

தற்போது கோயில் பிரசாத ஸ்டாலில் 60 கிராம் எடையுள்ள லட்டு விற்பனை செய்யப்படுகிறது. இதில் பக்தா்களுக்கு பிரசாதமாக 30 கிராம் லட்டு இலவசமாக வழங்கப்பட உள்ளது. கோயிலுக்கு வருகை தரும் பக்தா்கள் மீனாட்சி அம்மனை தரிசித்துவிட்டு, சொக்கநாதரை தரிசிக்கச் செல்லும் வழியில் முக்குறுணி விநாயகா் சந்நிதி அருகே, நவராத்திரி கொலு அரங்குகள் அமைக்கப்படும் பகுதியில் பக்தா்களுக்கு இலவச லட்டு பிரசாதம் வழங்கப்படுகிறது.

கோயிலுக்கு வரும் அனைத்துப் பக்தா்களுக்கும் லட்டு பிரசாதம் வழங்கப்படும். காலையில் கோயில் நடை திறந்தது முதல் இரவு நடை அடைக்கப்படும் வரை லட்டு பிரசாதம் வழங்கப்படும். திருவிழா காலங்கள் உள்பட ஆண்டின் அனைத்து நாள்களிலும் லட்டு பிரசாதம் வழங்கப்படும். இதற்கான செலவினம் கோயில் நிதியில் இருந்து செலவிடப்பட உள்ளது தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com