இந்திரா காந்தி 102-வது பிறந்தநாள்: சோனியா, மன்மோகன் மரியாதை

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 102 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு தில்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் இடைக்காலத்
இந்திரா காந்தி 102-வது பிறந்தநாள்: சோனியா, மன்மோகன் மரியாதை



புதுதில்லி: முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 102 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு தில்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். 

நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் ஒரே மகளான இந்திராகாந்தி 1917-ஆம் ஆண்டு நவம்பர் 19 ஆம் தேதி பிறந்தார். இவர் பிரதமராக இருந்த லால் பகதூர் சாஸ்திரியின் மரணத்திற்கு பின்னர் 1966-ஆம் ஆண்டு நாட்டின் மூன்றாவது பிரதமராகப் பதவியேற்றார். பிரதமராக பொறுப்பேற்ற பின்னர் நாட்டில் பாகிஸ்தான் போர் வெற்றி, அணு ஆயுத திட்டங்கள், பசுமை புரட்சி என பல்வேறு அதிரடி நடவடிக்கைளை கொண்டுவந்ததன் மூலம் இந்தியாவின் இரும்பு பெண்மணி என போற்றப்பட்டவர் 1984ஆம் ஆண்டு அக்டோபர் 31- ஆம் தேதி அவரது பாதுகாவலர்களாக இருந்த இரண்டு சீக்கியர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். 

இந்நிலையில்,  முன்னாள் பிரதமரான இந்திரா காந்தியின் 102 ஆவது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. 

இதையொட்டி தில்லியில் சக்தி ஸ்தலத்தில் உள்ள அவரது நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு அழகுபடுத்தப்பட்டது. நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இவரைத் தொடர்ந்து இந்திராவின் பேரனும், காங்கிரஸ் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி எம்.பி மலர் மரியாதை செலுத்தினார். 

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் குடியரசுத் தலைவர் பிணராப் முகர்ஜி, முன்னாள் குடியரசு துணைத் தலைவர் அமீத் அன்சாரி உள்ளிட்ட பல தலைவர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். 

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தனது டிவிட்டர் பக்க பதிவில், நமது முன்னாள் பிரதமரான இந்திரா காந்தியின் பிறந்த தினமான இன்று அவருக்கு மரியாதை செலுத்துகிறேன் என தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com