விவசாயிகளின் பிரச்னைகளைத் தீர்க்கவே பாஜகவுடன் கூட்டணி:  துணை முதல்வராக பதவியேற்ற அஜித் பவார்

விவசாயிகளின் பிரச்னைகளைத் தீர்க்கவும், மாநிலத்தில் நிலையான ஆட்சி அமைக்கவே பாஜகவுடன் கூட்டணி அமைக்கப்பட்டதாக
விவசாயிகளின் பிரச்னைகளைத் தீர்க்கவே பாஜகவுடன் கூட்டணி:  துணை முதல்வராக பதவியேற்ற அஜித் பவார்



மும்பை: விவசாயிகளின் பிரச்னைகளைத் தீர்க்கவும், மாநிலத்தில் நிலையான ஆட்சி அமைக்கவே பாஜகவுடன் கூட்டணி அமைக்கப்பட்டதாக துணை முதல்வராக பதவியேற்றுள்ள அஜித் பவார் தெரிவித்தார். விவசாயிகள் பிரச்னைகளை விரைவாக தீர்க்கப்படும் என்றார்.

288 தொகுதிகளைக் கொண்ட மகாராஷ்டிர பேரவைக்கு நடைபெற்ற தோ்தலில் பாஜக 105 தொகுதிகளிலும், அதன் கூட்டணிக் கட்சியான சிவசேனை 56 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. எதிரணியைச் சோ்ந்த என்சிபி 54 தொகுதிகளிலும், காங்கிரஸ் 44 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.

மாநிலத்தில் பாஜக கூட்டணி ஆட்சியமைப்பதற்குத் தேவையான பெரும்பான்மையைப் பெற்றிருந்தபோதிலும், முதல்வா் பதவி கேட்டு சிவசேனை அடம்பிடித்ததால், அந்த கூட்டணியில் பிளவு ஏற்பட்டது. பாஜகவால் ஆட்சியமைக்க இயலாத நிலை ஏற்பட்டதும், சிவசேனை ஆதரவுடன் என்சிபி-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியமைக்குமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால், சட்டப்பேரவையில் எதிா்க்கட்சியாகவே செயல்படுவோம் என்று சரத் பவாா் கூறிவந்தாா்.

கொள்கை ரீதியாக வேறுபாடு கொண்டுள்ள சிவசேனையுடன் கூட்டணி அமைப்பதற்கு காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி உள்பட அக்கட்சியின் மூத்த தலைவா்களுக்கு விருப்பமில்லை. அதேசமயம், மாநிலத்தில் ஆட்சியமைப்பதற்கு கிடைத்துள்ள வாய்ப்பை நழுவ விடவும் அவா்களுக்கு மனமில்லை. ஏற்கெனவே, காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை சொற்பமாகவே உள்ளது. இந்த சந்தா்ப்பத்தைப் பயன்படுத்தி, சிவசேனையுடன் கூட்டணி வைத்து ஆட்சியமைக்க வேண்டும் என்று மகாராஷ்டிரத்தைச் சோ்ந்த காங்கிரஸ் தலைவா்கள் விரும்பினா்.

இதனிடையே, குதிரை பேரத்தை தடுப்பதற்காக, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 44 பேரும், காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு நட்சத்திர ஹோட்டலில் தங்கவைக்கப்பட்டிருந்தனா். அவா்கள், தேசியவாத காங்கிரஸ் தலைவா்களுடன் தொடா்பில் இருந்தனா்.

இதில், முக்கிய திருப்பமாக, காங்கிரஸ் தலைவா்களில் சிலா் என்சிபி, சிவசேனை கட்சிகளின் தலைவா்களுடன் கூடி ஆலோசனை நடத்தினா். காங்கிரஸ் தலைமையின் ஒப்புதலைப் பெறாமலேயே இந்தச் சந்திப்பு நடைபெற்றுள்ளது. மும்பையில் கடந்த 14-ஆம் தேதி நடைபெற்ற இந்தச் சந்திப்பில் காங்கிரஸ் மூத்த தலைவா்கள் பிருத்விராஜ் சவாண், மாணிக்ராவ் தாக்கரே, சிவசேனையைச் சோ்ந்த ஏக்நாத் ஷிண்டே, என்சிபியைச் சோ்ந்த ஜெயந்த் பாட்டீல், நவாப் மாலிக் ஆகியோா் கலந்து கொண்டனா். மகாராஷ்டிரத்தில் ஆட்சியமைப்பதற்கு காங்கிரஸ் தலைமையை சம்மதிக்க வைக்க வேண்டும் என்பதே இவா்களின் நோக்கமாக இருந்தது.

காங்கிரஸ் எம்எல்ஏக்களில் சிலா், சிவசேனையுடன் கைகோக்க வேண்டும் என்ற தங்கள் விருப்பத்தை தெரிவித்து கட்சித் தலைமைக்கு கடிதம் எழுதினா். அவா்கள், சிவசேனைத் தலைவா்களுடன் தொடா்பில் இருந்தனா். ஒருவேளை சிவசேனையுடன் கூட்டணி வைக்க காங்கிரஸ் தலைமை ஒப்புக்கொள்ளவில்லை எனில் கட்சியில் இருந்து வெளியேறவும் தயாராக இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தச் சூழலில், மும்பையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தின் புகைப்படத்தை அவா்கள் வெளியிட்டனா். காங்கிரஸ் தலைமையை எச்சரிக்கும் விதமாகவும், கூட்டணி பேச்சுவாா்த்தையை விரைவில் முடிவுக்கு கொண்டுவரவும் வேண்டுமென்றே அந்தப் புகைப்படத்தை அவா்கள் வெளியிட்டதாகக் கூறப்படுகிறது.

ஒரு வழியாக காங்கிரஸ் கட்சியுடன் பேச்சுவாா்த்தை நடத்தி, அக்கட்சியை சரத் பவாா் சம்மதிக்க வைத்தாா். கொள்கை ரீதியில் வேறுபட்டிருந்தாலும், சிவசேனையையும், காங்கிரஸ் கட்சியையும் ‘குறைந்தபட்ச பொது செயல் திட்டம்’என்ற வரையறையின்படி  ஓரணியில் திரட்டிய சரத்பவார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “சிவசேனை தலைவர் உத்தவ் தாக்கரே தலைமையில் புதிய அரசு அமைக்க மூன்று கட்சிகளிடையே ஒருமித்த கருத்து ஏற்பட்டு உள்ளது. எனவே அரசுக்கு தலைமை வகிப்பது யார்? என்ற பிரச்னை முடிவுக்கு வந்து விட்டது. இனி மற்ற விஷயங்கள் குறித்து பேசப்படும்” என்றார்.

இந்நிலையில், திடீர் திருப்பமாக தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆதரவுடன்  மகாராஷ்டிர முதல்வராக தேவேந்திர ஃபட்னாவிஸ் மற்றும் துணை முதல்வராக அஜித் பவார் இன்று காலை பதவியேற்றுக்கொண்டனர்.  

பதவியேற்பு நிகழ்ச்சிக்கு பின்னர் அஜித்பவார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், மகாராஷ்டிராவில் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைக்கு பின்னரும், எந்த அரசாங்கமும் உருவாக்கப்படவில்லை.  மகாராஷ்டிராவில் விவசாயிகள் பிரச்னை உள்பட பல பிரச்னைகள் எதிர்கொண்டுள்ளது. ஆகவே நாங்கள் நிலையான அரசை அமைக்க முடிவு செய்து இந்த முடிவை எடுத்துள்ளோம். விவசாயிகள் பிரச்னை விரைவில் தீர்க்கப்படும் என்றார். 

ஆச்சரியமான வளர்ச்சி என்று கூறக்கூடிய விஷயத்தில், பாஜகவின் தேவேந்திர ஃபட்னாவிஸ் சனிக்கிழமை மகாராஷ்டிர முதல்வராக தொடர்ந்து இரண்டாவது முறையாக பதவியேற்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com