சாதிகள் இல்லையடி பாத்திமா - 1

பற்றிக் கொண்டால் பல உயிர்களைக் காவு வாங்கும் சாதிக் கலவரங்கள் தமிழகத்தின் சாபக்கேடு.
சாதிகள் இல்லையடி பாத்திமா - 1

பற்றிக் கொண்டால் பல உயிர்களைக் காவு வாங்கும் சாதிக் கலவரங்கள் தமிழகத்தின் சாபக்கேடு என்றால் அது மிகையாகாது. 


தமிழகம் என்பது பலநூறு சாதிகளைக் கொண்ட பெரும்பரப்பு. நம் மக்களின் வரலாற்றையும், பண்பாட்டையும், வாழ்க்கையையும், சாதிகளையும் பற்றி அறியாமல் புரிந்துகொள்வது என்பது சாத்தியமல்லாத ஒன்று. ஆனால் இந்த அரைநூற்றாண்டு அறிவியக்கத்தில் நம் சாதிகளைப்பற்றி குறிப்பிடும்படியான ஆய்வுகள் என எதுவுமே வரவில்லை என்பதே பலரது கருத்து. சொல்லப்போனால் நம்மை ஆளவந்த வெள்ளையர்கள் அக்காலத்தில் பதிவுசெய்தவற்றை நம்பியே நம் ஆட்சி நிர்வாகம் நடந்துவருகிறது என்பது ஓர் எழுதப்படாத உண்மை.

அரசியல் செயல்பாடுகள் அனைத்தும் தலித் மக்கள் பொதுவெளியில் புழங்குவதற்கான சூழலை உருவாக்கியிருக்கின்றனவே ஒழிய உண்மையான சாதி ஒழிப்பை நோக்கி நகரவில்லை. சாதி மாறி காதலித்துத் திருமணம் செய்துகொண்டதற்காக ஒரு இளைஞன் நடு ரோட்டில் உலகமே பார்த்துக்கொண்டிருக்க வெட்டப்படுகிறான் என்கிறபோது, கோயில் நுழைவு உரிமையைக் கேட்டதற்காகக் கொல்லப்படும்போது, உட்சாதிகளுக்குள்ளேயே சொந்த தலித் சகோதரர் தெருவில் நுழையாமலிருக்க சுவர் எழுப்பிக்கொள்ளும்போது நமது மனநிலையில் என்ன பெரிய மாற்றம் நிகழ்ந்துவிட்டதாகச் சொல்ல முடியும்? 

இந்தியா குறிப்பாக தமிழகத்தில் வாழும் எவருக்கும் தெரியும் பலர் இருக்கும் அவையில் குச்சி அப்பளங்களை கை விரல்களில் கோர்த்துக்கொண்டு ஹைஃபை (hi-fi) போடுவதைபோல மிக மிக ஜாக்கிரதையாகவே சாதியைப் பற்றி பேச முடியும் என்று. சாதியைப் பற்றி பேசுவதில் எப்படி விளைவுகள் உள்ளதோ அதேபோல் சாதியைப் பற்றி பேசாமல் இருப்பதிலும் சில விளைவுகள் உள்ளது.  

பெரும்பாலானவர்கள் தங்கள் சாதியின் உண்மையான வரலாறோ, தொடர்ச்சியோ, தெரியாமல் செவிவழியாக வரும் பெருமிதக்கற்பனைகளை மட்டுமே அகத்தே கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்பதே சாதியைப்பற்றி பேசாமலிருப்பதன் விளைவு. குறிப்பாக அவர்கள் அதை எங்கும் விவாதிப்பதில்லை. ஆகவே எங்கும் அது மறுபரிசீலனைக்கும் ஆளாவதுமில்லை. இது ‘உயர்’சாதி முதல் ‘தாழ்த்தப்பட்ட’ சாதி வரை எல்லாருக்கும் பொருந்தும். தனது சாதியின் பெயரை எந்த விதமான குற்றஉணர்வும் இன்றி பனியன்களிலும், வண்டிகளின் பின்னால் ‘டா’ சேர்த்துப் போட்டுக்கொள்கிற வன்மம் இந்தக் காலத்தில் உருவாகியது தான் என்றால் மறுக்க முடியுமா? கடந்த இருபதாண்டுகளில் சாதியம் இன்னும் கூர்மையடைந்திருக்கிறது. 

ஒரே வழிபாட்டிடம், ஒரே வாழிடம், ஒரே புதைகாடு, ஒரே சமுதாயக்கூடம் என்றெல்லாம் நாம் படிப்படியாக, ஆனால் சமரசமின்றி முன்னேறிப்போக வேண்டும். சாதியின் கடுமைக்கு முதன்மையான காரணம், அது இந்தியாவில் பின்பற்றப்படும் பெருமிதத்தோடு, இந்தியரின் சமய வழிபாடு, திருமணம் மற்றும் இறப்புச் சடங்குகளோடு பிணைக்கப்பட்டிருப்பதுதான். அங்குதான் சாதியின் அசுரபலம் ஒளிந்திருக்கிறது. தமிழ்நாட்டில் 30% பிற்படுத்தப்பட்டவர்களுக்கு, 20% மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு, 18% பட்டியலினத்தோர்களுக்கு, 1% பழங்குடியினருகளுக்கு என்று இடஒதுக்கீடு இருக்கிறது. அதேபோல் இடஒதுக்கீட்டுக்கு அப்பாற்பட்டு 31% இடங்கள் இருக்கின்றது. இதில் தலித்துகளுக்கான 18% ஒதுக்கீட்டை மட்டும் சுட்டிக் காட்டி ஒட்டுமொத்த இடஒதுக்கீட்டையும் தலித்துகளோடு இணைத்துப் பேசுவதற்கான காரணம் என்ன?

வெளியிலிருந்து வந்து இங்கே காலூன்றிய மதங்கள் கூட சாதியைப் பற்றி பேசவில்லை. ஆனால் அம்மதங்களுக்கு மாறிச்சென்று அவற்றை பின்பற்றுபவர்களின் சாதிய மனம் மாறாததால் அங்கும் சாதியம் ஊடுருவியிருக்கிறது. இங்கு சாதியை ஒழிக்க வேண்டும் என்று  பேசுகிற பல அமைப்புகள் மீண்டும் மீண்டும் சாதி ஒழிப்பை தலித்துகளின் மத்தியிலேயே பேசிவருகின்றன. உண்மையில் சாதி ஒழிப்பைப் பற்றி முதன்மையாக தலித் அல்லாதவர்களிடம் பேச வேண்டும். இப்படிப்பட்ட சாதியை ஒழிக்க அனைத்துத் தளங்களிலுமான உரையாடல்கள் மட்டுமின்றி உறுதியான நீண்டகால நடவடிக்கைகளும் தேவை. காந்தியின் கதர் ஆடைக்கும், அம்பேத்கரின் கோர்ட் சூட்டிற்கும் உள்ள ஒற்றுமை இதன் பின்னால் உள்ள உண்மை எத்தனை பேருக்குத் தெரியும்? ஆனால் இன்றும் அதைப்பற்றிய விவாதங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அர்ஜூன் ரெட்டி திரைப்படத்தில் பேச முடிந்த சாதியத்தை, ஆதித்தியா வர்மா திரைப்படத்தில் பேச முடியாமல் போனதற்கான காரணம் என்ன? சமிபத்தில் கூட, சென்னை ஐஐடியில்  எம்ஏ படித்து வந்த மாணவி பாத்திமா லத்தீஃப் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை நாம் அனைவரும் அறிவோம். மாணவியின் இந்த முடிவிற்கு படிப்பில் ஏற்பட்ட அழுத்தம் என்று ஒரு தரப்பினர் கூற மற்றொரு தரப்பினரோ அதில் மர்மம் உள்ளது, சாதியம் உள்ளது என்று கூறிவருகின்றனர். இதில் எது உண்மை என்பதை இறுதித் தீர்ப்பு வந்த பிறகே நாம் அறிய முடியும். எது எப்படியோ இன்றும் கல்லூரி, சினிமா, தொழில், திருமணம் என பல இடங்களில் பல வித்தியாசமான வடிவங்களில் அளவுக்கு அதிகமாக கொட்டிக்கிடக்கும் சாதியத்தை நம்மில் பலரும் கண்டும் காணாமலும் செல்கிறோம் என்பதுதான் எழுதப்படாத உண்மை.   


சாதிகள் இல்லையடி பாப்பா; – குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்;
நீதி, உயர்ந்தமதி, கல்வி – அன்பு
நிறைய உடையவர்கள் மேலோர்.
                         - பாரதியார்.

இன்னும் வார்த்தை மற்றும் எழுத்து வடிவில் மட்டுமே இருக்கும் இந்த பாரதியின் பாடலை நாம் எத்தனை பேர் இன்று பின்பற்றுகிறோம் என்றால் அது கேள்விக் குறிதான்.                                                                                         

 - சாதியம் தொடரும்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com