வன்னியர்கள் என்ன கறிவேப்பிலையா? - திமுகவுக்கு ராமதாஸ் கேள்வி

தேர்தலின் போது கொண்டாடவும், தேர்தல் முடிந்தவுடன் தூக்கி எறிவதற்கு வன்னியர்கள் கறிவேப்பிலையும் அல்ல என்பதை காலமும், மக்கள்
பாமக நிறுவனர் ராமதாஸ்
பாமக நிறுவனர் ராமதாஸ்


சென்னை: தேர்தலின் போது கொண்டாடவும், தேர்தல் முடிந்தவுடன் தூக்கி எறிவதற்கு வன்னியர்கள் கறிவேப்பிலையும் அல்ல என்பதை காலமும், மக்கள் தீர்ப்பும் மு.க.ஸ்டாலினுக்கு உணர்த்தும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். 
   
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கப்படும், மறைந்த முன்னாள் அமைச்சர் ஏ.கோவிந்தசாமிக்கு மணிமண்டபமும் அமைக்கப்படும் என்பது உள்ளிட்ட ஏராளமான வெற்று வாக்குறுதிகளை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அள்ளி வீசியிருக்கிறார்.

விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் தோல்வியடைவது மட்டுமின்றி, வைப்புத் தொகை கூட வாங்க முடியாதோ என்ற அச்சம் தான் அவரை இந்த நிலைக்கு தள்ளியிருக்கிறது. மக்களவைத் தேர்தலில் நகைக்கடனை தள்ளுபடி செய்வோம் என்பது உள்ளிட்ட புரட்டான வாக்குறுதிகளை வழங்கி, ஏழை மக்களை ஏமாற்றி கடனாளிகள் ஆக்கிய ஸ்டாலின், இப்போது விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வன்னியர்களின் வாக்குகளை சுரண்டும் நோக்குடன் பொய் வாக்குறுதிகளை வீசியுள்ளார்.

வன்னியர்கள் என்றாலே எட்டிக்காயாக கசக்கும் ஸ்டாலினுக்கு இப்போது வன்னியர்கள் வெல்லக்கட்டியாக இனிக்கிறார்கள் போலிருக்கிறது. வன்னியர்கள் உள்ளிட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கு 20 சதவீத இட ஒதுக்கீட்டை திமுக தான் வழங்கியதாகவும், மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அதில் வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்கப்போவதாகவும் ஸ்டாலின் கூறியிருக்கிறார். 1989-ம் ஆண்டில் வன்னியர்களுக்கு திமுக அரசு இடஒதுக்கீட்டை எளிதாக தூக்கிக் கொடுத்து விடவில்லை.

ஒருங்கிணைத்து 9 ஆண்டுகள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி, தொடர் சாலைமறியல் போராட்டத்தின் போது 21 சொந்தங்களின் இன்னுயிரை தியாகம் செய்து பெற்றது தான் 20 சதவீதம் இட ஒதுக்கீடு ஆகும்.

அப்போதும் அந்த இட ஒதுக்கீட்டை கலைஞர் மனமுவந்து தரவில்லை. வன்னியர்களுக்கு இன்னும் கூடுதலான இட ஒதுக்கீடு கிடைத்து விடக்கூடாது என்ற கெட்ட நோக்கத்திலும், வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு தருவதைத் தவிர வேறு வழியில்லை என்ற கட்டாயத்தின் பேரிலும் தான் இடஒதுக்கீட்டை கலைஞர் வழங்கினார். வன்னியர்களின் தொடர்சாலை மறியல் போராட்டத்திற்கு பிறகு 25.11.1987 அன்று என்னையும், பிற சமுதாயத் தலைவர்களையும் அழைத்துப் பேசிய அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர் வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க ஒப்புக்கொண்டார்.

திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ‘ஏ.ஜி’ என்று அழைக்கப்பட்ட ஏ.கோவிந்தசாமிக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என்று ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதை விட கடைந்தெடுத்த சந்தர்ப்பவாதம் எதுவும் இருக்க முடியாது. ‘ஏ.ஜி’யின் நூற்றாண்டு விழாவை அவரது புதல்வர் ஏ.ஜி.சம்பத் மட்டும் தானே அவரது சொந்த ஏற்பாட்டில் நடத்தினார். குறைந்தபட்சம் அந்த விழாவுக்கு திமுக தலைமைக் கழக நிர்வாகிகள் யாரையாவது ஸ்டாலின் அனுப்பியிருக்கலாமே... அதைக் கூட செய்யாதது ஏன்?

முழுக்க முழுக்க வன்னியர்களுக்கு எதிராக செயல்பட்டு வரும் ஸ்டாலின், இப்போது திடீரென தம்மை வன்னியர்களின் தோழன் என்று கூறிக்கொண்டால் அதை நம்பி ஏமாற வன்னியர்கள் ஒன்றும் அப்பாவி திமுக தொண்டர்கள் அல்ல. தேர்தலின் போது கொண்டாடவும், தேர்தல் முடிந்தவுடன் தூக்கி எறிவதற்கு வன்னியர்கள் கறிவேப்பிலையும் அல்ல என்பதை காலமும், மக்கள் தீர்ப்பும் மு.க.ஸ்டாலினுக்கு உணர்த்தும்.

தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தச் செய்வதன் மூலம் வன்னியர்களுக்கான தனி இட ஒதுக்கீட்டை 2021 தேர்தலுக்கு முன்பாகவே வென்றெடுக்கும் சக்தி பாமகவுக்கு உண்டு. மற்றபடி, 2021 தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்து விடலாம் என்று மு.க.ஸ்டாலின் கனவு கண்டு கொண்டிருந்தால் அது பலிக்காது என்று கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com