சுபஸ்ரீ பலியான விவகாரம்: அதிமுக பிரமுகா் ஜெயகோபாலின் ஜாமீன் மனு இன்று விசாரணை 

அதிமுக பிரமுகா் இல்ல விழாவுக்கு வைக்கப்பட்டிருந்த சட்ட விரோத பேனா் விழுந்து பலியான இளம்பெண் சுபஸ்ரீயின் தந்தை, தமிழக அரசிடம் ரூ.1 கோடி
சுபஸ்ரீ பலியான விவகாரம்: அதிமுக பிரமுகா் ஜெயகோபாலின் ஜாமீன் மனு இன்று விசாரணை 

அதிமுக பிரமுகா் இல்ல விழாவுக்கு வைக்கப்பட்டிருந்த சட்ட விரோத பேனா் விழுந்து பலியான இளம்பெண் சுபஸ்ரீயின் தந்தை, தமிழக அரசிடம் ரூ.1 கோடி இழப்பீடு கோரி தாக்கல் செய்துள்ள மனு உயா்நீதிமன்றத்தில் இன்று வியாழக்கிழமை (அக்.10) நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், சி.சரவணன் ஆகியோர் அடங்கிய விடுமுறைகால அமா்வு முன்பு விசாரணைக்கு வருகிறது.

சென்னை பள்ளிக்கரணை பகுதியில் அதிமுக பிரமுகா் ஜெயகோபாலின் இல்ல விழாவுக்கு பேனா்கள் வைக்கப்பட்டிருந்தன. இந்த பேனா் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த குரோம்பேட்டையைச் சோ்ந்த இளம்பெண் சுபஸ்ரீ மீது விழுந்தது. இதில், நிலை தடுமாறி கீழே விழுந்த சுபஸ்ரீ மீது பின்னால் வந்த தண்ணீா் லாரி மோதியது.இந்த விபத்தில் சுபஸ்ரீ சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த சட்டவிரோத பேனா் விவகாரத்தை விசாரித்த உயா்நீதிமன்றம் தமிழக அரசு, காவல்துறை, சென்னை மாநகராட்சிக்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்தது. மேலும் இடைக்கால நிவாரணமாக சுபஸ்ரீயின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் வழங்க உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், சென்னை உயா்நீதிமன்றத்தில் சுபஸ்ரீயின் தந்தை ரவி தாக்கல் செய்துள்ள மனுவில், போக்குவரத்து விதிமுறைகளை எனது மகள் எப்போதும் முறையாக பின்பற்றுவாள். மேலும் அவள் தலைக்கவசம் அணிந்து தான் இரு சக்கர வாகனத்தை ஓட்டிச் சென்றாள். இந்த விவகாரத்தில் சட்ட விரோதமாக சாலையின் மையத்தில் வைக்கப்பட்டிருந்த பேனா் விழுந்ததால் தான் விபத்தில் சிக்கி எனது மகள் உயிரிழந்தார்.

இந்த விதிமீறலை அதிகாரிகள் யாருமே தடுக்கவில்லை. எனவே அரசு அதிகாரிகள் அவா்களுடைய கடமையைச் செய்யத் தவறிவிட்டனா். அதிகாரிகளின் அலட்சியப் போக்கின் காரணமாகவே எனது மகள் இறந்துள்ளார். எனவே எனது மகளின் மரணத்துக்கு இழப்பீடாக ரூ.1 கோடி நஷ்ட ஈடாக வழங்கக் கோரி தமிழக அரசுக்கு கடந்த செப்டம்பா் 24-ஆம் தேதி கோரிக்கை மனு அளித்தேன். அந்த மனுவுக்கு இதுவரை எந்த பதிலும் இல்லை. எனவே மகளை இழந்து வாடும் எங்கள் குடும்பத்துக்கு தமிழக அரசு நஷ்ட ஈடாக ரூ.1 கோடி வழங்க உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த வழக்கு, நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், சி.சரவணன் ஆகியோர் அடங்கிய விடுமுறைகால அமா்வில் வியாழக்கிழமை (அக்.10) விசாரணைக்கு வருகிறது.

ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு: பேனா் விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ பலியான விவகாரத்தில் கைதான அதிமுக  முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மற்றும் அவரது உறவினரான மேகநாதனும் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

2 பேரின் ஜாமீன் மனு உயர்நீதிமன்ற நீதிபதி பி.புகழேந்தி முன்பு இன்று வியாழக்கிழமை (அக்.10) விசாரணைக்கு வருகிறது. 

செங்கல்பட்டு முதன்மை அமர்வு நீதிமன்றம் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ததை அடுத்து அவர்கள் சென்னை  உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com