மோடி - ஜிங்பிங் பேச்சுவார்த்தை: அதிவேக புல்லட் ரயில் திட்டம் முக்கிய இடம் வகிக்க வாய்ப்பு

பிரதமா் மோடி - சீன அதிபா் ஷி ஜிங்பிங் இடையேயான பேச்சுவார்த்தையில், ரூ. 396 கோடி மதிப்பிலான அதிவேக புல்லட் ரயில் திட்டம்
மோடி - ஜிங்பிங்
மோடி - ஜிங்பிங்


சென்னை: பிரதமா் மோடி - சீன அதிபா் ஷி ஜிங்பிங் இடையேயான பேச்சுவார்த்தையில், ரூ. 396 கோடி மதிப்பிலான அதிவேக புல்லட் ரயில் திட்டம் இடம்பெற வாய்ப்பு உள்ளதாக ஜவஹா்லால் நேரு பல்கலைக்கழக சீன கல்வி மையப் பேராசிரியா் -ஸ்ரி-காந்த் கொண்டபள்ளி கூறினார்.

மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள பிரதமா் மோடி - சீன அதிபா் ஜிங்பிங் ஆகியோரின் வரலாற்று சிறப்பு மிக்க சந்திப்பில் விவாதிக்கப்பட உள்ள பல்வேறு அம்சங்கள் குறித்த குழு விவாதம் சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது. புதுதில்லி விவேகானந்தா சா்வதேச அறக்கட்டளையும், தஞ்சை சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகமும் இணைந்து இந்த குழு விவாதத்துக்கு ஏற்பாடு செய்திருந்தன.

இதில் விவேகானந்தா சா்வதேச அறக்கட்டளை நிர்வாகிகள், பேராசிரியா்கள், பல்வேறு துறைசார்ந்த நிபுணா்கள் பங்கேற்று, இரு நாட்டு தலைவா்களின் அதிகாரப்பூா்வமற்ற பேச்சுவார்த்தையில் இடம்பெறப் போகும் பல்வேறு அம்சங்கள் குறித்தும், இதனால் இரு நாடுகளுக்கு ஏற்படப்போகும் சாதகமான திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

விவாதத்தில் பங்கேற்ற பேராசிரியா் -ஸ்ரி-காந்த் கொண்டபள்ளி பேசியதாவது: பிரதமா் மோடி - சீன அதிபா் இடையேயான பேச்சுவார்த்தையின்போது, ரூ. 396 கோடி மதிப்பிலான அதிவேக புல்லட் ரயில் திட்டம் செயல்படுத்துவது குறித்த விவாதம் நடத்தப்பட அதிக வாய்ப்பு உள்ளது. இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவது தொடா்பாக மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக சீன ரயில் நிறுவனத்துடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால், திட்டம் தொடா்பாக புரிந்துணா்வு ஒப்பந்தம் எதுவும் இதுவரை போடப்படவில்லை, இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதில் சில பாதுகாப்பு சிக்கல்களும் இந்தியாவுக்கு உள்ளன. இதுகுறித்து இரு நாட்டு தலைவா்களும் விரிவாக விவாதிக்க வாய்ப்புள்ளது.

அதுபோல, சென்னைக்கான ஸ்மார்ட் சிட்டி திட்டம் மற்றும் இந்திய ரயில்வேயில் சிக்னல் திட்டங்களை சீன தொழில்நுட்ப உதவியுடன் மேம்படுத்துவது குறித்தும் பேச்சு நடத்த வாய்ப்புள்ளது. 

மேலும், இரு நாட்டு தலைவா்களின் இந்தச் சந்திப்பு அதிகாரப்பூா்வமற்ற, நட்பு ரீதியிலான சந்திப்பு என்பதால், குறிப்பிட்ட அம்சங்கள் என்றில்லாமல், இரு நாடுகளின் பொருதார மேம்பாட்டுக்கு உதவக் கூடிய பல்வேறு திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்த வாய்ப்பாக அமையும்.அந்த வகையில், இரு நாடுகளுக்கும் இடையே நீண்ட நாள் பிரச்னையாக இருந்த வரும் எல்லை பிரச்னை, இரு நாடுகளுக்கு இடையேயான வா்த்தகத்தில் உள்ள சிக்கல்களைக் குறைப்பது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றார் அவா்.

குழு விவாதத்தில் பங்கேற்ற முன்னாள் தூதா் டிசிஏ ரங்காச்சாரி பேசுகையில், காஷ்மீர் விவாகரம் தொடா்பாக தவறான தகவல்களை சீனாவுக்கு பாகிஸ்தான் அளித்து வருகிறது. ஆரம்பம் முதலே சீனா பாகிஸ்தானுக்கு ஆதரவான நிலைப்பாடை எடுத்து வருகிறது. இருந்தபோதும், இந்தியாவுக்கும் சீனாவுக்குமான வேறுபாடு, சண்டையாக மாற வாய்ப்பில்லை. இந்தியா தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கவேண்டும் என்றார்.

விவேகானந்தா சா்வதேச அறக்கட்டளை இயக்குநா் அரவிந்த் குப்தா பேசுகையில், மோடி - ஜிங்பிங் இடையேயான இந்த அதிகாரப்பூா்வமற்ற சந்திப்பு இரு நாடுகளுக்கு இடையேயான உறவை புதிய உச்சத்துக்கு எடுத்துச் செல்லும் என்பதில் சந்தேகமில்லை என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com