இந்தியா-சீன ராஜதந்திர தொடர்புகளை அதிகரிக்க இரு நாட்டு தலைவர்களும் ஒப்புதல்: விஜய் கோகலே

இந்தியா - சீன நாடுகள் இடையேயான ராஜதந்திர தொடர்புகளை மேலும் அதிகரிக்க இரு நாட்டு தலைவர்களும் பேசியதாக இந்திய
இந்தியா-சீன ராஜதந்திர தொடர்புகளை அதிகரிக்க இரு நாட்டு தலைவர்களும் ஒப்புதல்: விஜய் கோகலே


சென்னை: இந்தியா - சீன நாடுகள் இடையேயான ராஜதந்திர தொடர்புகளை மேலும் அதிகரிக்க இரு நாட்டு தலைவர்களும் பேசியதாக இந்திய வெளியுறவுத்துறை செயலர் விஜய் கோகலே தெரிவித்தார். 

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் சீன அதிபா் ஷி ஜின்பிங், பிரதமா் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை மாலை சந்தித்துப் பேசினா். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த நிகழ்வின்போது சீனா மற்றும் இந்தியா இடையிலான கலை மற்றும் கலாசார அம்சங்கள் குறித்து இரு நாட்டுத் தலைவா்களும் கருத்துகளை பரிமாறிக் கொண்டனா்.

இதனைத்தொடர்ந்து இன்று சனிக்கிழமை கோவளத்தில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் காலை 10 மணி முதல் 11.45 மணி வரை இருதரப்புக்கும் இடையே வர்த்தகம், பாதுகாப்பு, பயங்கரவாத ஒழிப்பு உள்ளிட்ட முக்கிய பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. 

இருநாட்டு தலைவர்களிடையே நடந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர், இந்திய வெளியுறவுத்துறை செயலர் விஜய் கோகலே செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்தியா - சீனா உறவில் இருநாட்டு மக்களையும் கொண்டு வருவது பற்றியும் தலைவர்கள் பேசினர். சில பிரச்னைகளில் இரு நாடுகளும் தங்களது நிலைப்பாட்டில் தெளிவாக இருக்கின்றன.  பாதுகாப்புத் துறையில் இந்தியா - சீனா ஒத்துழைப்பை அதிகரிப்பது பற்றியும் அதிபர் ஜின்பிங் - பிரதமர் மோடி பேசினர். 

பயங்கரவாத, அடிப்படைவாத சவால்களை எதிர்கொள்வது முக்கியம் என்பதை இருவரும் ஒப்புக்கொண்டனர்.  பாதுகாப்பு குறித்து அடுத்தகட்ட பேச்சுவார்த்தை இருக்கும் என்றார்.

இம்ரான் கானின் சீன பயணம் குறித்து சீன அதிபர் ஷி ஜின்பிங் பேசினாலும் அதுகுறித்து விரிவாக அலோசிக்கப்படவில்லை. ஜம்மு-காஷ்மீர் பிரச்னை உள்நாட்டு விவகாரம் என்பதில் இந்தியா தெளிவாக இருக்கிறது. எனவே, ஜம்மு-காஷ்மீர் விவகாரம் குறித்து இரு நாட்டுத் தலைவர்களும் விவாதிக்கவில்லை. எல்லை பிரச்னை தொடர்பாக சிறப்பு பிரதிநிதிகள் அளவில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இந்தியா- சீனா இடையேயான வர்த்தக பற்றாக்குறையை விவாதிக்க உயர்மட்டக்குழு அமைக்கப்படும். உற்பத்தித்துறையில் கூட்டுறவை மேம்படுத்த உயர்மட்டக்குழு ஆலோசிப்பார்கள். அந்த குழுவில் சீன துணை அதிபர், இந்திய நிதியமைச்சர் இடம் பெறுவார்கள். பிராந்திய வர்த்தக ஒப்பந்தம் பற்றி பொதுமக்கள் கருத்துகளை அறிய இருநாட்டுத் தலைவர்களும் ஒப்புதல் அளித்துள்ளனர். வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தையில் சாதகம் ஏற்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பத்துறையில் முதலீடுகளை வரவேற்றுள்ளோம். இரு நாடுகளின் சந்தையை விரிவுப்படுத்துவது குறித்து தலைவர்கள் பேசியதாக தெரிவித்தார். 

மேலும், இரு நாடுகள் இடையேயான ராஜதந்திர தொடர்புகளை மேலும் அதிகரிக்க இரு நாட்டு தலைவர்களும் ஒப்புதல் தெரிவித்துள்ளதாகவும், இந்தியா, சீனா தரப்பு சிறப்புப் பிரதிநிதிகள் மீண்டும் சந்தித்துப் பேச உள்ளனர். சென்னையில் சீனாவின் துணை தூதரகம் அமைப்பது குறித்து ஏற்கனவே முடிவு செய்ததால், துணை தூதரகம் குறித்து விவாதிக்கவில்லை.

சீனாவில் உள்ள தமிழ் ஆலயங்கள் குறித்து ஆய்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியா - சீனா உறவில் இருநாட்டு மக்களையும் கொண்டு வருவது பற்றியும் பேசிய தலைவர்கள், இந்தியா, சீனா ஆகிய இருநாட்டு தலைவர்களிடையே முறைசாரா பேச்சுவார்த்தைகள் தொடர சீன அதிபர் விருப்பம் தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு சீனாவுக்கு வர அதிபர் ஷி ஜின்பிங் முன்வைத்த அழைப்பை பிரதமர் மோடியும் ஏற்றுக்கொண்டதாக கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com