காந்திஜி எப்படி தற்கொலை செய்துகொண்டார்?- குஜராத் பள்ளித் தேர்வு கேள்வித்தாளால் மாணவர்கள் அதிர்ச்சி

தேசப்பிதா மகாத்மா காந்தி எப்படி தற்கொலை செய்துகொண்டார் என்று குஜராத் மாநிலத்திலுள்ள பள்ளியின் தேர்வுத் தாளில் கேள்வி
தேசிய காந்தி அருங்காட்சியகம்
தேசிய காந்தி அருங்காட்சியகம்

அகமதாபாத்: தேசப்பிதா மகாத்மா காந்தி எப்படி தற்கொலை செய்துகொண்டார் என்று குஜராத் மாநிலத்திலுள்ள பள்ளியின் தேர்வுத் தாளில் கேள்வி கேட்கப்பட்டுள்ள சம்பவம் குஜராத் கல்வி அதிகாரிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. இந்த சம்பவம் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் தேசப்பிதா என்றழைக்கப்படும் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி, 1948 ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் தேதி கோட்சேவால் சுட்டுக் கொல்லப்பட்டார். அந்த சம்பவம் சுதந்திர இந்திய வரலாற்றின் மிகப்பெரும் சோக சம்பவமாக கருதப்படுகிறது.

காந்தியின் மரணம் குறித்த வரலாறு நாடு முழுவதும் அறியப்பட்டுள்ள நிலையில், குஜராத் மாநிலம் காந்தி நகர் பகுதியில் ஷஃபாலம் ஷாலா விகாஷ் சங்குல் என்ற அமைப்பால் நடத்தப்படும் அரசு உதவி பெற்ற தனியார் பள்ளியில் நேற்று சனிக்கிழமை பள்ளித் தேர்வு நடைபெற்றுள்ளது.

அப்போது, 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கேள்வித் தாளில், ‘காந்தி எப்படி தற்கொலை செய்துகொண்டார்?’ என்ற கேள்வி இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அதேபள்ளியில் 12 ஆம் வகுப்பில், ‘உங்கள் பகுதியில் அதிகரிக்கும் மதுவிற்பனையால் தொந்தரவுகள் அதிகரிப்பது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு புகார் கடிதம் எழுதுக?’ என்ற கேள்வியும் இடம்பெற்றுள்ளது.

வறண்ட குஜராத் மாநிலம் முழுவதும் மது விற்பனை தடை செய்யப்பட்டுள்ள நிலையில், இந்தக் கேள்வியும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கல்வி அதிகாரிகளையும் எரிச்சல் அடையச் செய்துள்ளது. 

இதுகுறித்து காந்தி நகர் மாவட்ட கல்வி அதிகாரி தெரிவித்தாவது: சனிக்கிழமையன்று நடைபெற்ற மாத உள் மதிப்பீட்டுத் தேர்வுக்காக, அந்த பள்ளியியே அவர்களே கேள்விகள் தயாரித்து தேர்வு நடத்தப்படுகின்றன. இந்த பள்ளிகளின் நிர்வாகத்தால் கேள்வித்தாள்கள் தாயாரிக்கப்பட்டு நடத்தப்பட்ட 9 மற்றும் 12 ஆம் வகுப்பு கேள்வித்தாளில் இதுபோன்ற சர்ச்சையான கேள்விகள் இடம்பெற்றுள்ளன. இந்த கேள்விகள் மிகவும் ஆட்சேபிக்கத்தக்கவை. இதுகுறித்து உரிய விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணை அறிக்கை வந்தது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 

மேலும் பள்ளியின் நிர்வாகத்தால் தயாரிக்கப்பட்ட கேள்வித்தாள் என்பதால், மாநில கல்வித்துறைக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று மாவட்ட கல்வி அதிகாரி கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com