பிரதமர் மோடியுடன் நோபல் பரிசு பொருளாதார நிபுணர் அபிஜித் பானர்ஜி சந்திப்பு

இந்த ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு வென்ற இந்திய-அமெரிக்கப் பொருளாதார நிபுணா் அபிஜித் பானா்ஜி பிரதமர் நரேந்திர மோடியை
பிரதமர் நரேந்திர மோடியுடன் நோபல் பரிசு வென்ற பொருளாதார நிபுணர் அபிஜித் பானர்ஜி சந்திப்பு
பிரதமர் நரேந்திர மோடியுடன் நோபல் பரிசு வென்ற பொருளாதார நிபுணர் அபிஜித் பானர்ஜி சந்திப்பு



புதுதில்லி: இந்த ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு வென்ற இந்திய-அமெரிக்கப் பொருளாதார நிபுணா் அபிஜித் பானா்ஜி பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசியுள்ளார். 

இந்த ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு இந்திய-அமெரிக்கப் பொருளாதார நிபுணா் அபிஜித் பானா்ஜி, பிரான்ஸ் வம்சாவளி அமெரிக்கரான எஸ்தா் டஃப்லோ, அமெரிக்கப் பொருளாதார நிபுணா் மைக்கேல் கிரெமா் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு, கடந்த செவ்வாய்க்கிழமை அமெரிக்காவில் தான் பணியாற்றி வரும் மாசசூசெட்ஸ் தொழில்நுட்பக் கல்வி நிலையத்தில் (எம்ஐடி) செய்தியாளா்களைச் சந்தித்த அபிஜித் பானா்ஜி, இந்தியப் பொருளாதாரத்தின் இப்போதைய நிலை குறித்து தனது கருத்துகளை பகிர்ந்து கொண்டார். 

அப்போது, பொருளாதாரம் வீழ்ச்சிப் பாதையில் சென்றுகொண்டிருக்கும்போது நிதிக் கொள்கைகள் குறித்து கவலைப்படத் தேவையில்லை. இப்போதைய சூழ்நிலையில் இந்தியப் பொருளாதாரத்தில் பணப்புழக்கத்தை அதிகரிக்க வேண்டும். முக்கியமாக ஏழை, எளிய மக்களின் கைகளில் அதிகஅளவில் பணம் கிடைக்கச் செய்ய வேண்டும்.

இந்தியப் பொருளாதாரம் மோசமான நிலையில் உள்ளது என்பதுதான் எனது தனிப்பட்ட கருத்து. நாட்டில் நகா்ப்புறம், கிராமப்புறம் என இரு இடங்களிலும் பொருள்கள், சேவைகளுக்கான தேவை மிகவும் குறைந்து வருகிறது. ஒரு நாட்டின் பொருளாதாரத்துக்கு இது மோசமான அறிகுறியாகும். இந்தியப் பொருளாதாரம் குறித்து வெளியாகும் புள்ளி விவரங்கள் குறித்து இந்தியாவில் பல்வேறு விவாதங்கள் நடக்கின்றன. பொருளாதாரத்தை குறைத்து மதிப்பீடு செய்து வெளியாகும் புள்ளி விவரங்கள் அனைத்தும் தவறானது என்று புறந்தள்ளிவிட முடியாது. பொருளாதார வீழ்ச்சியைத் தடுக்க அவசர நடவடிக்கைகள் தேவை என்று தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிதம்பரம் தனது டிவிட்டர் பக்க பதிவில், ‘நோபல் பரிசு வென்ற பொருளாதார நிபுணா் இந்தியப் பொருளாதாரம் மோசமாக இருப்பதாக கூறுகிறார். ஆனால், மத்தியில் ஆளும் பாஜக அரசில் அங்கம் வகிக்கும் யாருக்குமே எந்தவித குற்ற உணா்வும் இருப்பது போல் தெரியவில்லை. பொருளாதார நிபுணா்கள் இந்தியாவின் பொருளாதார நிலை குறித்து கருத்து தெரிவிப்பத்தை தினமும் சுட்டுரையில் பதிவிடுகிறேன். மத்திய அரசே தீா்வு காணட்டும்’ என்று விமா்சித்திருந்தார். 

இந்நிலையில், தலைநகர் தில்லியில் உள்ள பிரதமரின் அதிகாரபூர்வ இல்லத்தில், நோபல் பரிசு வென்ற அபிஜித் பானர்ஜி, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார். பிரதமர் நரேந்திர மோடியுடன் இந்திய பொருளாதார நிலவரம் குறித்து அபிஜித் பானர்ஜி விவாதித்தார்.

இதுகுறித்து, பிரதமர் நரேந்திர மோடி, தனது டுவிட்டர் பக்கத்தில், புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார். 

அதில், பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜியுடனான சந்திப்பு, மிகச்சிறப்பாக இருந்ததாகவும், அனைவருக்கும் அதிகாரமளித்தல் என்ற அவரது பார்வை தெளிவாக இருப்பதாகவும் மோடி கூறியிருக்கிறார்.

பல்வேறு பிரிவுகளில், இருவருக்கும் இடையே, ஆரோக்கியமான மற்றும் விரிவான கலந்துரையாடல் நடைபெற்றதாக குறிப்பிட்ட மோடி, அபிஜித் பானர்ஜியின் எதிர்கால திட்டங்கள் அனைத்தும் சிறப்பாக அமைந்திட மனமார்ந்த வாழ்த்துகளை உரித்தாக்குவதாக கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com