கோவையில் 2 இடங்களில் என்ஐஏ அதிரடி சோதனை

கோவையில் கடந்த ஆண்டு இந்து இயக்கத் தலைவர்கள் சிலரைக் கொலை செய்ய திட்டம் தீட்டியதாக முஸ்லிம் இளைஞர்கள் சிலர் கைது
கோப்புப் படம்
கோப்புப் படம்


கோவையில் 2 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் இன்று வியாழக்கிழமை (அக்.31) அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 

கோவையில் கடந்த ஆண்டு இந்து இயக்கத் தலைவர்கள் சிலரைக் கொலை செய்ய திட்டம் தீட்டியதாக முஸ்லிம் இளைஞர்கள் சிலர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் சமூக வலைதளங்கள் மூலம் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இளைஞர்களுடன் கருத்துகளையும், தகவல்களையும் பரிமாறியது தெரியவந்தது. இதில் சில இளைஞர்கள் இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர்களுடன் தொடர்பில் இருப்பதும் விசாரணையில் வெளிவந்தது. 

இதைத் தொடர்ந்து சமூகவலைதளங்களில் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக கருத்து பதிவிடுவோரை என்ஐஏ கண்காணித்து, கடந்த ஜூன் மாதம் முகமது அசாருதீன், ஷேக் ஹிதாயத்துல்லா ஆகிய இருவரையும் கைது செய்தது. கைது செய்யப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களின் வீடுகளில் என்ஐஏ கடந்த ஆகஸ்ட் 29 ஆம் தேதி சோதனை நடத்தியது. அதன்படி கோவை, உக்கடம், ஜி.எம். நகரைச் சேர்ந்த உமர் ஃபரூக், வின்சென்ட் சாலையைச் சேர்ந்த ஷனோஃபர் அலி, சமீஷா முபின், பிலால் எஸ்டேட் பகுதியைச் சேர்ந்த முகமது யாசீர், பள்ளி வீதியைச் சேர்ந்த சதாம் உசேன் ஆகியோரது வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் 5 குழுக்களாகப் பிரிந்து சோதனை நடத்தினர். காலை 5.30 மணிக்குத் தொடங்கிய இச்சோதனை பகல் 11 மணி வரை தொடர்ந்தது. இதில் ஐந்து பேரின் வீடுகளில் இருந்து சில முக்கிய ஆவணங்களை என்ஐஏ கைப்பற்றியது.  

இதையடுத்து, அவர்களை ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அவர்களில் முகமது யாசீர், சதாம் உசேன் ஆகிய இருவரையும் கொச்சியில் உள்ள என்ஐஏ அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை ஆஜராகுமாறு என்ஐஏ தரப்பில் இருந்து நோட்டீஸ் அனுப்பியது. 

இந்நிலையில், கோவையில் 2 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் இன்று வியாழக்கிழமை (அக்.31) அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 

லாரிபேட்டையில் உள்ள சௌருதீன், ஜி.எம்.நகரில் நிஷார் ஆகியோர் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாகச் செயல்பட்டதாகவும், அந்த அமைப்பில் இணையும் வகையில் இளைஞர்களை மூளைச் சலவை செய்ததாகவும் கூறி கோவையைச் சேர்ந்த 6 பேர் மீது கடந்த மே 30-ஆம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில் சிலர், இலங்கை குண்டுவெடிப்புக்குக் காரணமாக இருந்த ஜக்ரன் ஹசீம் என்பவரது விடியோ பதிவுகளை சமூகவலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். இந்த ஆறு பேரின் வீடுகளில் கடந்த ஜூன் 12-ஆம் தேதி என்ஐஏ சோதனையிட்டது. முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com