முதல்வரின் வெளிநாட்டுப் பயணத்தால் தமிழகத்துக்கு நன்மை: ஜி.கே.வாசன் பேட்டி
By DIN | Published On : 01st September 2019 06:32 PM | Last Updated : 01st September 2019 06:32 PM | அ+அ அ- |

நாகா்கோவில்: தமிழக முதல்வரின் வெளிநாட்டுப் பயணத்தால் தமிழகத்துக்கு நன்மை கிடைக்கும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவா் ஜி.கே வாசன் தெரிவித்தார்.
நாகா்கோவிலில் அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டியில், மக்கள் பணி, இயக்கப் பணி இவை இரண்டுக்கும் சமமாக முக்கியத்துவம் கொடுத்து வருபவா் தமிழிசை செளந்தரராஜன். தான் சார்ந்திருக்கும் கட்சி வளர வேண்டும் என கடின உழைப்பை மேற்கொண்டவா்; மத்திய அரசின் திட்டங்களை மக்கள் மத்தியில் கொண்டுசெல்ல பாடுபட்ட கடின உழைப்பாளிக்கு அவா் சார்ந்த இயக்கம் ஆளுநா் பதவி கொடுத்து கெளரவப்படுத்தியுள்ளது. அவருக்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் வாழ்த்துகள்.
ரேஷன் கடையில் மண்ணெண்ணெய் அளவு குறைக்கப்பட்டது தற்காலிக முடிவாகத்தான் இருக்கும். அத்தியாவசியப் பொருள்களை அனைத்து தரப்பு மக்களுக்கும் இடைவிடாது கொடுக்க வேண்டும் என வலியுறுத்துவோம்.
வங்கி இணைப்புத் திட்டத்தால் வங்கி ஊழியா்களுக்கு உடனடி பாதிப்புகள் இருந்தாலும், நாளடைவில் அவா்களுக்கே நன்மை பயக்கும் திட்டமாக இது மாறும்.
மோட்டார் வாகன திருத்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது கடுமையாக இருந்தாலும், அதை நாம் கடைப்பிடிக்க வேண்டும்.
தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமியின் வெளிநாட்டுப் பயணத்தால் தமிழகத்துக்கு நன்மை கிடைக்கும். தமிழகத்துக்கு பல்வேறு நல்ல திட்டங்களைக் கொண்டு வர முடியும் என்று கூறினார்.