கண்ணீர் தற்காலிகமானது, எங்கள் சிவன் மீண்டும் வெற்றி பெறுவார் - சிவனின் மாமா உருக்கமான பேட்டி

கடின உழைப்பு, நேர்மை மற்றும் தன்னம்பிக்கை ஆகியவற்றால் அறியப்பட்ட அவர் இதை ஒரு தோல்வியாக இல்லாமல் ஒரு சவாலாக எடுத்துக்கொள்வார்
இஸ்ரோ தலைவர் டாக்டர் கே. சிவன் தனது குடும்பத்துடன் இருக்கும் காட்சி
இஸ்ரோ தலைவர் டாக்டர் கே. சிவன் தனது குடும்பத்துடன் இருக்கும் காட்சி

 
"சிவனின் கண்ணீர் தற்காலிகமானது. கடின உழைப்பு, நேர்மை மற்றும் தன்னம்பிக்கை ஆகியவற்றால் அறியப்பட்ட அவர் இதை ஒரு தோல்வியாக இல்லாமல் ஒரு சவாலாக எடுத்துக்கொள்வார்" என்று 80 வயதான அவரது மாமா சண்முகவேல் உருக்கமாக கூறினார்.

இஸ்ரோ தலைவர் டாக்டர் கே. சிவன் தனது குடும்பத்துடன் இருக்கும் காட்சி

62 வயதான இஸ்ரோ தலைவரான சிவன் 1957 ஆம் ஆண்டு கன்னியாகுமரியில் உள்ள சரக்கல்வளையில் ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்தார். ஆரம்பக் கல்வியை சரக்கல்வளையில் உள்ள அரசுப் பள்ளியிலும், பின்னர் வல்லங்குமாரவிலை அரசுப் பள்ளியில் பயின்று தனது பள்ளிப்படிப்பை முடித்தார். விவசாயத்தை தொழிலாக குடும்பத்தில் மூன்று வேளை சாப்பாட்டிற்கே கஷ்டப்பட்ட நிலையில், சகோதர்கள் சிறுவயதிலே வேலைக்குச் சென்று விட்டதால். சிவன் மட்டுமே தனது பள்ளிப்படிப்பை தமிழ்வழியிலேயே முடித்தார். அடுத்து பொறியியல் படிப்பையே கனவாகக் கொண்டிருந்த சிவனிடம், அவரது தந்தை பி.எஸ்சி., மட்டுமே படிக்க வைக்க முடியும் என்று தந்தை கூறியதால் மனமுடைந்து சிவன், பின்னர், குடும்ப சூழலை உணர்ந்து நாகர்கோயிலிலுள்ள தென் திருவாங்கூர் இந்து கல்லூரியில் சேர்ந்து பி.எஸ்சி சேர்ந்தார். மாந்தோப்பு வைத்திருந்த தந்தையின் தோட்ட வேளையில் உதவ வேண்டும் என்பதற்காகவே அருகில் உள்ள கல்லூரியில் சேர்ந்த சிவன், கல்லூரி விடுமுறை நாட்களில் தந்தையுடன் சேர்ந்து தோட்ட வேளையை செய்து ஆட்கள் கூலியை மிச்சப்படுத்தி வந்தார். 

கல்லூரிகளுக்கு செல்லும் வரை காலில் செருப்பு கூட அணியாமலும், பேன்ட் இல்லாததால் பெரும்பாலும் வேஷ்டியிலேயே கல்லூரி நாட்களை கடந்து வந்த சிவன் கல்லூரி படிப்பை முடித்து பி.எஸ்சி பட்டம் பெற்றதும் சிவனை அழைத்த தந்தை, அவரது பொறியியல் கனவை சிதைத்ததை எண்ணி வருத்தப்பட்டதாகவும், பின் தன் தோட்டத்தை விற்று சென்னை தொழில்நுட்பக் கல்லூரியில் படிக்க வைத்தார். 

அதனைத்தொடர்ந்து பெங்களூருவில் உள்ள ஐ.ஐ.எஸ்.இ-யில் ஏரோஸ்பேஸ் பொறியியல் துறையில் மேற்படிப்பு முடித்தார். பின்னர் பல்வேறு பணி வாய்ப்புகள் மறுக்கப்பட்ட நிலையில், 1982 ஆம் ஆண்டு இஸ்ரோவில் ராக்கெட் வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டுப் பிரிவில் பணியில் சேர்ந்தார்.

பின்னர், மும்பை ஐஐடி-ல் முனைவர் பட்டம் பெற்றார். பின் தனது கடின உழைப்பால் படிப்படியாக பதவி உயர்வு பெற்ற சிவன், விக்ரம் சாராபாய் விண்வெளி மைய இயக்குநராகவும் பணியாற்றினார்.

நிலவின் மேற்பரப்பை ஆராய்ச்சி செய்வதற்காக, 2009 ஆம் ஆண்டு நிலவுக்கு சந்திராயன்-1 விண்கலம் அனுப்பிய 10 ஆண்டுகளுக்கு பிறகு, 2018-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இஸ்ரோவின் தலைவராகப் பொறுப்பேற்ற சிவனின் தலைமையின் கீழ், உலகில் எந்த நாடும் அனுப்பாத நிலவின் தென் துருவ பகுதிக்கு சந்திராயன் 2 கடந்த ஜூலை 22 ஆம் தேதி ஜிஎஸ்எல்வி ராக்கெட் உதவியுடன் விண்ணுக்கு அனுப்பியது இஸ்ரோ. லேண்டர், ரோவர் ஆகிய பகுதிகளைச் சுமந்து விண்ணில் பாந்த சந்திராயன்-2 விண்கலம், பூமியை நீள்வட்டப்பாதையில் சுற்றி, கடந்த 20 ஆம் தேதி நிலவின் சுற்றுப்பாதையில் நுழைந்தது. சில தினங்களுக்கு முன்பு ரோவருடன் கூடிய லேண்டர் விடுவிக்கப்பட்டு நிலவின் தரையை நோக்கி பயணித்தது. திட்டமிட்டப்படி ஆர்பிட்டர், நிலவில் இருந்து 100 கி.மீ. தொலைவில் அதன் சுற்றுவட்டப் பாதையில் பயணித்து, நிலவை படம் பிடித்து அனுப்பிய வண்ணம் இருந்து. 
48 நாட்கள் பயணத்துக்குப் பிறகு, கடந்த சனிக்கிழமை அதிகாலை 1.50 மணியளவில் லேண்டர் நிலவின் தென்துருவப் பகுதியில் தரையிறங்குவதாக இருந்தது. ஆனால், நிலவில் இருந்து 2.1 கி.மீ. உயரத்தில் விசைவீச்சு வளைவுப் பாதையில் இருந்து விலகிச் சென்றதோடு, தரை கட்டுப்பாட்டு மையத்துடன் கொண்டிருந்த சமிக்ஞைகளும் முழுமையாக துண்டிக்கப்பட்டது விஞ்ஞானிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அப்போது இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி, விஞ்ஞானிகள் தோல்விகளால் துவண்டுவிடாமல், அடுத்த முயற்சிகளில் ஈடுபடுமாறும், பணத்தை தங்கு தடையில்லாம் தொடருமாறும் கேட்டுக்கொண்டார். 

பின்னர் விஞ்ஞானிகளிடம் இருந்து விடைபெற்றுக்கொண்டு விடைபெற்றுக்கொண்டு மையத்தின் முன்வாசல் பகுதிக்கு படிக்கட்டுகளில் இறங்கி வந்த போது, அவரை வழியனுப்ப வந்த இஸ்ரோ தலைவர் கே.சிவனைக் கண்ட பிரதமர் மோடி சற்று நேரம் நின்றார். லேண்டரின் தொடர்பை இழந்ததால், நொறுங்கிப் போயிருந்த சிவன், பிரதமர் மோடியிடம் விடைகொடுக்க கை கொடுத்தவர், உணர்ச்சிவசப்பட்டு, தந்தையின் தோளில் முகம் புதைத்து கண்கலங்கும் பிள்ளையை போன்று பிரதமர் மோடின் தோளில் முகம் சாய்த்து தேம்பி அழத் தொடங்கினார். இதைக் கண்டு உணர்ச்சிப்பிழம்பான பிரதமர் மோடியும், ஒரு தந்தையைப் போன்று அவரை ஆரத்தழுவி சிவனின் முதுகில் தட்டியபடியே ஆறுதல்படுத்தினார்,

இந்தக் காட்சி அங்கு சுற்றி நின்றிருந்த விஞ்ஞானிகளை நெகிழச் செய்தது. கண்ணீர் வடிய நின்றிருந்த சிவன், விடைபெற்று காரில் ஏறிய பிரதமர் மோடிக்கு கைகூப்பி நன்றி கூறினார். அதன்பிறகு பிரதமர் மோடி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

பிரதமர் மோடியின் தோளில் முகம் சாய்த்து சிவன் கண்கலங்கி தேம்பி அழத் தொடங்கியதை கண்ட அவரது சொந்த ஊரிலிருந்த உறவினர்களும் ஒரு கனம் கவலைக்கொண்டு கலங்கி அழுதனர். ஆனால், சிவனின் திறமையை உணர்ந்த உறவினர்கள், சிவன் சோதனைகளில் இருந்து மீண்டு சாதனைகளை புரிந்து அனைவரின் பாராட்டையும் பெறுவார் என்று நம்பிக்கை தெரிவித்தனர். சிவன் படித்த ஆரம்பப்பள்ளி நுழைவாயிலில் அவரது பெயரைக் கொண்டுள்ளது மற்றும் கிராம மக்கள் அனைவரும் அவரது சாதனைகள் குறித்து பெருமையுடன் பேசி வருகின்றனர்.

இந்த நிலையில் இஸ்ரோ தலைவர் சிவனின் 80 வயதான மாமா ஏ.சண்முகவேல் கூறுகையில், "குழந்தை பருவத்திலிருந்தும், அவரது பள்ளி மற்றும் கல்லூரி நாட்களில் படிப்பில் நல்லவராக சிறந்து விளங்கியவர். யாருடைய உதவிகளின்றி தானே படித்துக்கொள்ளும் திறமை பெற்றவர். மேலும் சிறந்து விளங்குவற்கு அதிக வழிகாட்டுதல் தேவையில்லை. அவரது பள்ளி மற்றும் கல்லூரி நாட்களில் எழுதி வைத்துள்ள அவரது ஆவணங்கள் போதும் என்றவர், சந்திரயான் - 2 வெற்றியின் கொண்டத்திற்காக தேசமே காத்துக்கொண்டிருக்கும் போது, அவர் கலங்கியது விண்வெளித்துறையின் மீது அவருக்கு இருந்த அளவில்லா காதல் உணர்வை எங்களால் உணர முடிந்தது. "சிவனின் கண்ணீர் தற்காலிகமானது. எங்கள் சிவன் கடின உழைப்பு, நேர்மை மற்றும் தன்னம்பிக்கை ஆகியவற்றால் அறியப்பட்டவர். அவர் இதையொரு தோல்வியாக இல்லாமல் ஒரு சவாலாக எடுத்துக்கொள்வார்" என்று கூறினார்.

சிவனின் மனைவி மாலதியின் ஒத்துழைப்பை அடிக்கோடிட்டுக் காட்டி பேசிய 75 வயதான சண்முகவேலின் மனைவி தங்கம், தேசமே, ஏன் உலகமே இன்று சிவனின் சாதனை குறித்து பேசுவதற்கு, அவரது மனைவி மாலதி உறுதுணையே காரணம். அவர் குடும்பத்தை சிறப்பாக நிர்வகிப்பதன் மூலம் சிவனக்கு உந்துதலாகவும், அவருடைய வேலையில் கவனம் செலுத்த உதவி வருகிறார். உறவினர்களுடன் தொடர்பில் இருப்பதும், குடும்பத்தை கவனித்துக்கொள்வதும், கடிகாரத்தைச் சுற்றி வேலை செய்வதும் அவர்தான், அதனால் சிவன் தேசத்துக்கான சேவையில் முழுவதுமாக கவனம் செலுத்த முடிகிறது என்று கூறினார். 

சிவன் ஒரு பேட்டியில், குடும்பத்தில் வறுமை வாட்டியபோதும் தன் தந்தை ஒரு நாளும் தங்களை பட்டினி போட்டதில்லை என்றும், வயிறாற 3 வேளை உணவு வழங்குமளவு வசதியோடு தன்னை வளர்த்ததாகவும் தந்தையின் வளர்ப்பை சிவன் பெருமையாக குறிப்பிட்டதுண்டு. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com