சந்திரயான்- 2: ஆர்பிட்டரின் சுற்றுவட்டப் பாதையை குறைக்க இஸ்ரோ திட்டம்

உலகிலேயே முதல் நாடாக, நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-2 விண்கலத்தை இஸ்ரோ கடந்த ஜூலை 22-ஆம் தேதி விண்ணுக்கு அனுப்பியது.
சந்திரயான்- 2: ஆர்பிட்டரின் சுற்றுவட்டப் பாதையை குறைக்க இஸ்ரோ திட்டம்


சந்திரயான்- 2 விண்கலத்தின் ஆர்பிட்டர் சுற்றுவட்டப் பாதையை குறைக்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. 

உலகிலேயே முதல் நாடாக, நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-2 விண்கலத்தை இஸ்ரோ கடந்த ஜூலை 22-ஆம் தேதி விண்ணுக்கு அனுப்பியது.

புவி சுற்றுவட்டப் பாதையிலிருந்து விலகி, நிலவைச் சென்றடைந்த விண்கலத்திலிருந்து, விக்ரம் லேண்டர் பகுதி  செப்டம்பர் 2-ஆம் தேதி வெற்றிகரமாகப் பிரித்து விடப்பட்டது. இதிலிருந்து பிரிந்த ஆர்பிட்டர், நிலவின் பரப்பிலிருந்து 100 கி.மீ. தொலைவில் தொடர்ந்து நிலவை நீள்வட்டப் பாதையில் சுற்றி வந்து ஆய்வு செய்துகொண்டிருக்கிறது. இந்த நிலையில், பிரிந்த லேண்டர் பகுதியை 100 கி.மீ. தொலைவிலிருந்து படிப்படியாக குறைத்து நிலவின் பரப்பிலிருந்து 35 கி.மீ. தொலைவுக்கு விஞ்ஞானிகள் கொண்டு வந்தனர்.

லேண்டர் நிலவுக்கு மிக அருகே வந்ததைத் தொடர்ந்து, திட்டமிட்டபடி சனிக்கிழமை (செப் 7) அதிகாலை 1.30 மணியளவில் அதை நிலவின் தென் துருவத்தில் தரையிறக்குவதற்கான முயற்சியை தொடங்கிய விஞ்ஞானிகள் 
லேண்டரை தரையிறக்குவதற்கான கட்டளையை தரைக் கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடி விஞ்ஞானிகள் பிறப்பித்தனர். 

அதனைத் தொடர்ந்து, லேண்டர் நிலவில் தரையிறங்க ஆரம்பித்தது. ஒவ்வொரு நிலையாகத் தாண்டி, நிலவின் பரப்பிலிருந்து 2.1 கி.மீ. தொலைவு வரை லேண்டர் வந்தபோது, அதற்கும் கட்டுப்பாட்டு அறைக்குமான தொடர்புத் துண்டிக்கப்பட்டது. இதனால் லேண்டர் எங்கிருக்கிறது என்பதே தெரியாமல் போனது.

நிலவில் காணாமல் போன லேண்டரை கண்டறிய முடியுமா, அதனுடன் மீண்டும் தொடர்பை ஏற்படுத்த முடியுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

இந்நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை விக்ரம் லேண்டரை நிலவை சுற்றிவரும் ஆர்பிட்டர் படம் எடுத்து அனுப்பியுள்ளதை அடுத்து லேண்டர் இருக்குமிடம் தெரிய வந்திருப்பது இஸ்ரோ விஞ்ஞானிகளிடையே மட்டுமின்றி, இந்திய மக்களிடையேயும் நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. 

இந்த நிலையில் ஆர்பிட்டரின் சுற்றுவட்டப்பாதையை குறைக்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. தற்போது நிலவில் இருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் சுற்றிவரும் ஆர்பிட்டரை 50 கிலோ மீட்டர் அருகில் கொண்டு சென்று லேண்டரின் இருப்பிடத்தை துல்லியமாக கண்டறிய திட்டமிடப்பட்டுள்ளது. 

இதன் மூலம் விக்ரம் லேண்டரின் இருப்பிடத்தை மிகவும் துல்லியமாக படம் எடுத்து அனுப்ப வசதியாக இருக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது. அத்துடன் லேண்டரில் இருந்து சிக்னல் வெளியானால், அதை கண்டறியவும் நிலவின் அருகே ஆர்பிட்டர் கொண்டு செல்லப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com