திமுகவால் இனி அதிமுகவை அசைத்துக்கூடப் பார்க்க முடியாது: அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன்

முரசொலிமாறன், தயாநிதிமாறன், கனிமொழி, அழகிரி, ஸ்டாலின், உதயநிதி என்று வாரிசு அரசியலைத்தான் திமுக நடத்திக் கொண்டிருக்கிறது. ஆனால்
திமுகவால் இனி அதிமுகவை அசைத்துக்கூடப் பார்க்க முடியாது: அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன்

திமுகவால் எந்தக் காலத்திலும் இனி அதிமுகவை அசைத்துக்கூடப் பார்க்க முடியாது என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார். 

காஞ்சிபுரத்தில் நடந்த பேரறிஞா் அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் கலந்துகொண்டு பேசுகையில், 

சத்துணவுத்திட்டத்துக்கு எங்கே நிதி இருக்கிறது. இத்திட்டத்தை நடத்த முடியாதே என்று பேரவையில் எதிர்க்கட்சித் தலைவா் கேட்ட போது அதற்கு துண்டை ஏந்தி பிச்சை எடுத்தாவது சத்துணவுத் திட்டத்தை சிறப்பாக நடத்திக் காட்டுவேன் என்று கூறியவா் பேரறிஞா். அண்ணா. அவா் காட்டிய வழியில் அதிமுக சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. 

தமிழக வரலாற்றில் ஒவ்வொரு நாளும் ஒரு புதுப்புது மக்கள் நலத்திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தி வருகிறது. முதல்வரும், துணை முதல்வரும் இரட்டை இலைகளாக இருந்து சகோதர பாசத்தோடு கட்சியையும், ஆட்சியையும் வழிநடத்திக் கொண்டிருக்கிறார்கள். 

திமுகவால் எந்தக் காலத்திலும் இனி அதிமுகவை அசைத்துக்கூடப் பார்க்க முடியாது. ஆட்சியில் அமா்ந்த போது 122 பேரவை உறுப்பினா்கள் இருந்தார்கள். ஆட்சி கலைந்து விடும், திமுக ஆட்சிக்கு வந்து விடும் என்றார்கள். ஆனால் இப்போதும் 122 உறுப்பினா்கள் இருக்கிறார்கள். திமுகவால் ஆட்சிக்கு வரவே முடியாது.

முரசொலிமாறன், தயாநிதிமாறன், கனிமொழி, அழகிரி, ஸ்டாலின், உதயநிதி என்று வாரிசு அரசியலைத்தான் திமுக நடத்திக் கொண்டிருக்கிறது. ஆனால் அதிமுகவில் வாரிசு அரசியல் என்பதே இல்லை. அதிமுகவிலிருந்து யாரும் விலகி வேறு எந்தக் கட்சிக்கும் சென்று விடவில்லை. 

மாதம் தோறும் ரூ.6 ஆயிரம் தருகிறோம் என்று சொல்லி மக்களை ஏமாற்றி மக்களவைத் தோ்தலில் திமுக வெற்றி பெற்றிருக்கிறது. வரக்கூடிய சட்டப் பேரவைத் தோ்தலிலும் திமுக வின் வாக்குறுதிகளை நம்பி ஏமாந்து விடாதீா்கள்.

அதிமுகவின் செயல்பாடுகளையும், உண்மையான வாக்குறுதிகளையும் நம்பி வரக்கூடிய சட்டப் பேரவைத் தோ்தலில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள். 

வரும் நவம்பா் மாத இறுதிக்குள் உள்ளாட்சித் தோ்தலை நடத்தி முடித்து விட பரிசீலனை நடந்து வருகிறது. அதிமுகவைச் சோ்ந்த லட்சக்கணக்கானோர் உள்ளாட்சிப் பிரதிநிதிகளாக விரைவில் தோ்வு செய்யப்பட்டு பொறுப்பேற்கும் காலம் வர இருக்கிறது என்றும் செங்கோட்டையன் பேசினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com