பேனர் விழுந்து உயிரிழந்த சுபஸ்ரீ பெற்றோருக்கு மு.க.ஸ்டாலின் ஆறுதல்

என்னைப் பொறுத்தவரையில் பேனர் கலாச்சாரம் தொடரக்கூடாது என்பதுதான் விருப்பம். சுபஸ்ரீயை இழந்து வாடிக் கொண்டிருக்கும் அவரது குடும்பத்தாருக்கு
சுபஸ்ரீயின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் தெரிவித்த பின் மு.க.ஸ்டாலின்
சுபஸ்ரீயின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் தெரிவித்த பின் மு.க.ஸ்டாலின்

சென்னையில் பேனர் விழுந்து விபத்தில் சிக்கி உயிரிழந்த சுபஸ்ரீயின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறினார்.

சென்னை அஸ்தினாபுரத்தைச் சேர்ந்த இளம்பெண் சுபஸ்ரீ, கடந்த வியாழக்கிழமை அன்று இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, பேனர் சரிந்து விழுந்ததில் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அப்போது அவர் மீது லாரி ஏறியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். பேனர் வைத்த அதிமுக அரசியல் கட்சி பிரமுகர் ஜெயகோபால் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் ஜெயகோபால் இன்னும் கைது செய்யப்படாத நிலையில், லாரி ஓட்டுநர், பேனர் அடித்தவர், என அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதன் விளைவாக அரசியல் கட்சித் தலைவர்கள் தாங்களாக முன்வந்து கட்சி நிகழ்ச்சிகளில் பேனர் வைக்கவேண்டாம் என அறிக்கை வெளியிட்டனர்.

இதனிடையே, சுபஸ்ரீயை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறிவருகின்றனர்.

இந்நிலையில், இன்று புதன்கிழமை காலை சுபஸ்ரீ இல்லத்திற்குச் சென்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சுபஸ்ரீக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் சுபஸ்ரீயின் தாய் தந்தைக்கு ஸ்டாலின் ஆறுதல் கூறினார். திமுக அறக்கட்டளை சார்பில் சுபஸ்ரீ குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவிக்கான காசோலையையும் வழங்கினார்.

பின்னர் ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசுகையில், சுபஸ்ரீயின் இழப்பு ஈடு செய்ய முடியாதது. சுபஸ்ரீயின் தந்தை ரவி, என்னிடத்தில் சொன்னது, “இதுவே கடைசியாக இருக்கட்டும் என்னுடைய மகள் சுபஸ்ரீ இந்த பேனர் கலாசாரத்தால் இழந்திருப்பது கடைசியாக இருக்கட்டும். இனியும் தொடரக்கூடாது. இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்திடவேண்டும்” என்று உணர்ச்சிகரமாக சொன்னது உள்ளபடியே மறக்க முடியாதது.

சுபஸ்ரீயை இழந்து வாடிக் கொண்டிருக்கும் அவரது பெற்றோரைச் சந்தித்து ஆறுதல் கூறி இருக்கிறேன். என்ன தான் ஆறுதல் கூறினாலும் அந்த இழப்பை ஈடு செய்யமுடியாது என்பது எங்களுக்கு நன்றாகத் தெரியும். ஆனாலும், முடிந்த வரையில் அவர்களை நாங்கள் ஆறுதல் படுத்தியுள்ளோம்.

உயர்நீதிமன்றம் தொடர்ந்து கண்டனத்தை தெரிவித்துக் கொண்டிருக்கிறது. ஆனால், நீதிமன்ற தடை உத்தரவை மீறி அவர்கள் தொடர்ந்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஏற்கெனவே கோவை மாவட்டத்தில் ரகு என்கிற ஒரு சகோதரர் பலி ஆனார். இப்போது சுபஸ்ரீ என்கிற ஒரு சகோதரி பலியாகி இருப்பது வேதனை அளிக்கிறது.

நேற்று முன்தினம் சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் நாங்களே முன்சென்று பிரமாண பத்திரம் தாக்கல் செய்திருக்கிறோம். நாங்கள் சட்டத்தை மீறி அனுமதி இல்லாமல் எங்கும் பேனர் வைக்கமாட்டோம் என்று சொல்லியிருக்கிறோம். நிகழ்ச்சி நடக்கக்கூடிய இடத்தில் அடையாளத்திற்கு ஒன்றிரண்டு இடங்களில் மாத்திரம் வைத்துவிட்டு அந்த நிகழ்ச்சியை நடத்தவேண்டும். அதை மீறி யாராவது வைத்தால் நாங்களே உரிய நடவடிக்கை எடுப்போம் என்று அறிவித்தது மட்டுமல்லாமல் நீதிமன்றத்திலும் தெரிவித்துள்ளோம்.

என்னைப் பொறுத்தவரையில் பேனர் கலாச்சாரம் தொடரக்கூடாது என்பதுதான் விருப்பம். சுபஸ்ரீயை இழந்து வாடிக் கொண்டிருக்கும் அவரது குடும்பத்தாருக்கு தி.மு.க அறக்கட்டளை சார்பில் ரூ.5 லட்சம் உதவித் தொகையை வழங்கியிருக்கிறோம். துன்பத்திற்கு ஆளாகி இருக்கும் அந்தக் குடும்பத்திற்கு திமுக துணைநிற்கும் என்று உறுதியாகக் கூறிக்கொள்கிறேன்.

பேனர் வைத்த அதிமுக-வினர் இன்னும் கைது செய்யப்படாதது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த ஸ்டாலின், “ அரசு நினைத்தால் அடுத்த வினாடியே கூட அவர் கைது செய்யப்படலாம். அப்படியான நாடகத்தை இந்த காவல்துறையும் அரசும் நடத்தி வருகிறது” எனத் தெரிவித்தவர், இந்த பிரச்னையை அரசியலாக்க விரும்பவில்லை என்று கூறினார்.

திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேற்று சுபஸ்ரீயின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், பேனர் கலாச்சாரத்தை திமுக இனி எப்போதும் பின்பற்றாது எனவும் கூறியது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com