இரவு முழுவதும் கொட்டித்தீர்த்த கனமழையால் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்ததா? 

நாடு முழுவதும் நிலத்தடி நீர் அளவு குறைந்து கடும் வறட்சி நிலவி வருகிறது. நாட்டின் பல பகுதியிலும் தண்ணீரின்றி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி
இரவு முழுவதும் கொட்டித்தீர்த்த கனமழையால் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்ததா? 


வளிமண்டல மேலடுக்கில் ஏற்பட்ட வெப்ப சலனம் மற்றும் பருவ மழை காரணமாக தமிழகத்தில் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்திருந்த நிலையில், சென்னையில் நேற்று இரவு முழுவதும் விடிய, விடிய இடிமின்னலுடன் கனமழை மழை பெய்து வருகிறது. இதனிடையே, வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக மழை நீடிக்கும் எனத் தகவல் வெளியாகி உள்ளது. 

நாடு முழுவதும் நிலத்தடி நீர் அளவு குறைந்து கடும் வறட்சி நிலவி வருகிறது. நாட்டின் பல பகுதியிலும் தண்ணீரின்றி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மாநில அரசுகள் நீர் ஆதாரங்களை உருவாக்கவில்லை என பல மாநிலங்களில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். நிலத்தடி நீர் மட்டத்தைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க எதிர்க்கட்சிகள் மற்றும் ஜனநாயக அமைப்பினர் வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில், தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 31 மாவட்டங்களில் கடந்த ஓராண்டில் இருந்த நிலத்தடி நீர் மட்டம் குறித்து மாநில நிலத்தடி மற்றும் நீர் ஆதாரத் துறை ஆய்வு மேற்கொண்டு, அந்த ஆய்வின் அதிர்ச்சி முடிவுகளை வெளியிட்டிருந்தது. 

அதாவது, தமிழகத்தில் எதிர்காலத்தில் நிலத்தடி நீர் தட்டுப்பாடு அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும், கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்டு முதல் 2019 ஆகஸ்ட் வரை தமிழகத்தில் நிலத்தடி நீர் மட்டம் ஏற்ற இறக்கத்தில் உள்ளதாகவும், இந்த நிலை நிடிக்குமாயின் நிச்சயம் நிலத்தடி நீர் குறையும் அபாயம் உள்ளதாக தெரிவித்திருந்தது. 

அதுமட்டுமல்லாமல், தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் நாகை, திருப்பூர், ராமநாதபுரம் மற்றும் தேனி ஆகிய நான்கு மாவட்டங்களில் மட்டும் தான் நிடித்தடி நீர் மட்டம் இந்த ஒரு ஆண்டில் உயர்ந்துள்ளது என்றும், அதில் நாகையில் 0.32 மீட்டரும், திருப்பூரில் 0.26 மீட்டரும், ராமநாதபுரம் மற்றும் தேனியில் 0.04 மீட்டரும் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

இது மிகக்குறைந்த அளவு என்றும் மேலும் இந்த அளவு குறைய வாய்ப்புள்ளதாக தெரிவித்திருந்தது. நிலத்தடி நீர்மட்டம் மிகக் குறைந்த அளவில் இருக்கும் மாவட்டமாக பெரம்பலூர் மாவட்டத்தை அறிவித்திருந்தது. 

பெரம்பலூரில் 11.07 மீட்டராக இருந்த நிலத்தடி நீர் மட்டம் கடந்த ஓராண்டில் மட்டும் 3.58 ஆக குறைந்துள்ளது. அதனையடுத்து கன்னியாகுமரி மாவட்டத்தில் 10.15 மீட்டராக இருந்த நிலத்தடி நீர் 2.84 மீட்டர் அளவுக்கு குறைந்து 7.31 மீட்டராக உள்ளதாக அந்த ஆய்வு அறிக்கையில் தெரிவித்திருந்தது. 

இந்த நிலையில் தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை காலத்தில் கடந்த ஜூன் 1 முதல் ஜூலை 25 வரை 81 மி.மீ மழை பெய்துள்ளது. வட தமிழகத்தில் வெப்ப சலனம் காரணமாக 60 மி.மீ மழைம பெய்துள்ளது. இது நிலத்தடி நீர்மட்டம் உயர வழிவகுத்தது.

கேரளா, கர்நாடக மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் தமிழகத்தில் வளி மண்டலத்தின் கீழ் அடுக்கில் நிலவும் சுழற்சி காரணமாக தொடர்ந்து பெய்து வந்த மிதமான மழையாலும் நிலத்தடி நீர்மட்டம் சற்று உயர்ந்தது. 

இதனால் தண்ணீர் இல்லாமல் கிடந்த ஆழ்குழாய் கிணறுகளில் இப்போது தண்ணீர் வரத் தொடங்கி உள்ளதால், தாம்பரம், குரோம்பேட்டை, மேடவாக்கம், பல்லாவரம், கே.கே.நகர், வடபழனி பகுதிகளில் நிலத்தடிநீர் மட்டம் 5 அடிக்கு மேல் உயர்ந்துள்ள தற்போது ‘போர்வெல்’ மூலம் தண்ணீர் அதிகம் கிடைத்து வருகிறது. 

இந்நிலையில், வளிமண்டல மேலடுக்கில் ஏற்பட்ட வெப்ப சலனம் மற்றும் பருவ மழை காரணமாக தமிழகத்தில் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்திருந்த நிலையில், சென்னையில் நேற்று இரவு முழுவதும் விடிய, விடிய கனமழை பெய்தது. தமிழகம் மற்றும் புதுவையில் பல இடங்களில் கனமழை பெய்தது. விடிய விடிய விடாது பெய்த கனமழையால் ஊரெங்கும் குளிர்ச்சி நிலவுகிறது. இரவு மட்டும் 58 மில்லி மீட்டர் வரை மழை பதிவாகி உள்ளதாகவும், திருவள்ளூரில் ஒரே நாளில் 21 மி.மீட்டரும், பூண்டியில் 20 மி.மீ. மழை பதிவாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனிடையே திருவள்ளூர், காஞ்சிபுரம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், சேலம் ஆகிய 6 மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

விடிய விடிய விடாது பெய்த கனமழையால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. ஊரெங்கும் குளிர்ச்சி நிலவுகிறது. இந்த மழையால் நிலத்தடி நீர் மட்டம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 6 மாதத்திற்கு மேலாக நிலவிய கடும் வெப்பம் காரணமாக மழை நீர் அனைத்தையும் வறண்ட நிலையில் உள்ள பகுதிகள் அப்படியே உறிஞ்சியது. இதனால் மழைநீர் வேகமாக வந்தாலும் அடுத்த சில நிமிடங்களில் தரைக்குள் சென்றதை பார்க்க முடிந்தது. 

சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகள் வறண்ட நிலையில் காணப்பட்டாலும், இரவு பெய்ததுபோன்று இன்னும் சில நாட்கள் தொடர்ந்து மழை பெய்தால்தான் ஏரிகளுக்கு தண்ணீர் வர வாய்ப்புள்ளது. காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் வேகமாக உயர வாய்ப்புள்ளது. இதுபோன்ற தருணங்களில் குடியிருப்பு வாழ் மக்கள் தங்களது வீடுகளில் மழை நீர் சேமிப்பு திட்டத்தை முழுமனதுடன் நிறைவேற்றினால் நிறைந்த பலனை பெற முடியும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com