சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் வழக்கம் போல் பள்ளிகள் இயங்கும்: ஆட்சியர்கள் அறிவிப்பு
By DIN | Published On : 19th September 2019 08:30 AM | Last Updated : 19th September 2019 08:30 AM | அ+அ அ- |

கோப்புப்படம்
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் வழக்கம் போல் பள்ளிகள் இயங்கும் என மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.
வளிமண்டல மேலடுக்கில் ஏற்பட்ட வெப்ப சலனம் மற்றும் பருவ மழை காரணமாக தமிழகத்தில் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்திருந்த நிலையில், நேற்று இரவு முதல் சென்னை மற்றும் திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்கள் உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இடிமின்னலுடன் விடிய, விடிய கனமழை பெய்து வருகிறது.
சென்னையில் எழும்பூர், திருவல்லிக்கேணி, சைதாப்பேட்டை, அடையார், திருவான்மியூர், கிண்டி, மீனம்பாக்கம் போன்ற இடங்களில் இன்று வியாழக்கிழமை காலையிலும் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. நேற்று இரவு மட்டும் 58 மில்லி மீட்டர் வரை மழை பதிவானதாக தனியார் வானிலை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, திருவள்ளூர், காஞ்சிபுரம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், சேலம் ஆகிய 6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
விடிய விடிய கனமழை பெய்துவரும் நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் வழக்கம் போல் பள்ளிகள் இயங்கும் என மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.
கனமழை பெய்து வந்தாலும் காலாண்டு தேர்வு நடைபெற்று வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படவில்லை என்று ஆட்சிரியர்கள் தெரிவித்துள்ளனர்.