நீட் தேர்வு பயிற்சி மையங்களுக்கு சிபிசிஐடி போலீஸார் நோட்டீஸ்!

தமிழகத்தில் உள்ள அனைத்து நீட் தேர்வு பயிற்சி மையங்களுக்கும் சிபிசிஐடி போலீஸார் நோட்டீஸ் அனுப்புயுள்ளனர். 
கோப்புப்படம்
கோப்புப்படம்


சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து நீட் தேர்வு பயிற்சி மையங்களுக்கும் சிபிசிஐடி போலீஸார் நோட்டீஸ் அனுப்புயுள்ளனர். 

தேனி மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். முதலாமாண்டு படித்து வந்த உதித் சூர்யா, நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பதாக அந்தக் கல்லூரிக்கு அண்மையில் மின்னஞ்சல் மூலமாக புகார் வந்தது. அந்த புகாரின் அடிப்படையில் கல்லூரி நிர்வாகம் விசாரணை செய்தது. இதில், ஆள் மாறாட்டம் செய்து உதித் சூர்யா நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பது உறுதி செய்யப்பட்டது.

இவ் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக காவல்துறையின் சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபி ஜே.கே.திரிபாதி உத்தரவிட்டார். தேனி மாவட்ட காவல்துறையின் தனிப்படையினர் ஆந்திர மாநிலம் திருப்பதியில் தலைமறைவாக இருந்த உதித் சூர்யா, அவரது தந்தை வெங்கடேசன் ஆகியோரை கடந்த புதன்கிழமை கைது செய்தனர்.

இருவரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில், ஏற்கெனவே பல மாணவர்கள் இதேபோல ஆள் மாறாட்டம் செய்து எம்.பி.பி.எஸ். படித்து வருவதும், இதற்காக சில தரகர்கள் கேரளம், மகாராஷ்டிரம் மாநிலங்களில் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து சிபிசிஐடி அதிகாரிகள், ஆள் மாறாட்டம் செய்த மாணவர்கள் குறித்தும், தரகர்கள் குறித்தும் விசாரணையை தொடங்கி உள்ளனர். 

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து நீட் தேர்வு பயிற்சி மையங்களுக்கும் சிபிசிஐடி போலீஸார் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். அதில் நீட் தேர்வு பயிற்சி மையங்களில் தேர்ச்சி பெற்றவர்கள் பட்டியலை அனுப்பி வைக்க உத்தரவிட்டுள்ளனர். 

மேலும், உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள தேசிய தேர்வு முகமைக்கும் கடிதம் எழுதியுள்ள சிபிசிஐடி போலீஸார், தமிழகத்தில் இருந்து நீட் தேர்வுக்காக விண்ணப்பித்தவர்களின் விபரங்களை அனுப்பி வைக்குமாறும், ஒரே பெயர், முகவரியில் ஒன்றுக்கும் மேற்பட்ட தேர்வு மையங்களில் தேர்வு எழுதிய மாணவர்களின் விவரங்களையும் அனுப்பி வைக்குமாறு அந்த கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com