கரோனா: மருத்துவ, துப்புரவுப் பணியாளர்கள் உயிரிழந்தால் ரூ. 1 கோடி இழப்பீடு - கேஜரிவால்

தில்லியில் கரோனா பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றும் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் துப்புரவுப்  பணியாளர்கள்  உயிரிழந்தால் ரூ. 1 கோடி இழப்பீடு வழங்கப்படும்
கரோனா: மருத்துவ, துப்புரவுப் பணியாளர்கள் உயிரிழந்தால் ரூ. 1 கோடி இழப்பீடு - கேஜரிவால்

தில்லியில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்றும் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் துப்புரவுப் பணியாளர்கள் யாரேனும் உயிரிழக்க நேரிட்டால் அவர்களின் குடும்பத்துக்கு ரூ. 1 கோடி இழப்பீடு வழங்கப்படும் என தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் அறிவித்துள்ளார். 

நாடு முழுவதும் கரோனா நோய்த்தொற்று அதிகரித்து வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்தும் முயற்சியாக மக்களை வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என கேட்டுக்கொண்ட மத்திய, மாநில அரசுகள், வரும் 14 ஆம் தேதி வரை 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது. இருப்பினும் நோய்த்தொற்றால் பாதிப்போரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 

இந்த நிலையில், தில்லி முதல்வர் கேஜரிவால் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ஒரு போரின்போது, ​​ஒரு வீரர் தனது உயிரை பணயம் வைத்து நாட்டைப் பாதுகாக்கிறார், அவர்களுக்கு ஒட்டு மொத்த தேசமும்  கடன்பட்டிருக்கிறது. இன்று, நீங்கள் (சுகாதாரப் பணியாளர்கள்) செய்து வரும் வேலை ஒரு சிப்பாயின் வேலையைவிடக் குறைவாக இருந்தாலும், நீங்கள் இந்த நாட்டு மக்களைக் காப்பாற்ற உங்கள் உயிரைப் பணயம் வைத்து செயல்பட்டு வருகிறீர்கள்.

நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்தும் நடவடிக்கையில் ஏராளமான மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 

உயிர் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அவர்களுக்கு எதிர்பாராத விதமாக பாதிப்பு (உயிரிழப்பு) ஏற்பட்டால் அவர்களின் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப்படும். அவர்கள் தனியார் மருத்துவமனைகளைச் சேர்ந்தவர்களா அல்லது அரசுத் துறையைச் சேர்ந்தவர்களா என்பது முக்கியமல்ல என்று அவர் கூறினார்.

தில்லியில் உள்ள மருத்துவமனைகளில் பணியாற்றும் 3 மருத்துவர்கள் கரோனா பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் முதல்வர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தில்லியில் தற்போது 120 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,637 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சகத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 12 மணி நேரத்தில் வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 240 ஆக அதிகரித்துள்ளன. மேலும் கரோனாவால் உயிரிழந்தவர்களின் 38 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது. வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 132 பேர் குணப்படுத்தப்பட்டுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com