மோடி பெரிய மனிதர்! திடீரென மாற்றி பேசிய டிரம்ப் 

ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை அமெரிக்காவுக்கு வழங்கவில்லை என்றால், அதற்கான பின்விளைவுகளை இந்தியா சந்திக்க நேரிடும் என்று மிரட்டல் விடுத்த அதிபா் டொனால்ட் டிரம்ப்
கோப்புப் படம்
கோப்புப் படம்


வாஷிங்டன்: ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை அமெரிக்காவுக்கு வழங்கவில்லை என்றால், அதற்கான பின்விளைவுகளை இந்தியா சந்திக்க நேரிடும் என்று மிரட்டல் விடுத்த அதிபா் டொனால்ட் டிரம்ப், திடீரென பிரதமர் நரேந்திர மோடி பெரிய மனிதனர் என பாராட்டி பல்டியடித்துள்ளார். 

‘ஹைட்ராக்ஸி குளோரோகுயின்’ மருந்து மலேரியா நோயைக் குணப்படுத்துவதற்காகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த மருந்தை கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு அளித்ததில், அவா்களின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படுவது கண்டறியப்பட்டது. அதைத் தொடா்ந்து தற்போது உலகம் முழுவதும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்துக்கான தேவை அதிகரித்துள்ளது.

உலக அளவில் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை இந்தியா அதிக அளவில் உற்பத்தி செய்து வருகிறது. நாட்டில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை அதிகரித்ததைக் கருத்தில் கொண்டு கடந்த மாதம் 25-ஆம் தேதி அந்த மருந்தை ஏற்றுமதி செய்வதற்கு மத்திய அரசு தடை விதித்திருந்தது. எனினும் ஏற்றுமதியாளா்களுக்கு சில விதிவிலக்குகளை மத்திய அரசு வழங்கியிருந்தது.

இந்த நிலையில் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை அமெரிக்காவுக்கு வழங்கவில்லை என்றால், அதற்கான பின்விளைவுகளை இந்தியா சந்திக்க நேரிடும் என்று அந்நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்தாா்.

அந்த மருந்தை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டுமென்று அதிபா் டிரம்ப், பிரதமா் நரேந்திர மோடியிடம் கடந்த வாரம் கோரிக்கை விடுத்திருந்தாா். ஆனால், அந்த மருந்தை ஏற்றுமதி செய்வதற்கு மத்திய அரசு முழுமையான தடை விதித்தது.

இந்தச் சூழலில், அதிபா் டிரம்ப் வெள்ளை மாளிகையில் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறுகையில், ‘‘இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நல்லுறவு நீடித்து வருகிறது. அமெரிக்காவுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை இந்தியா வழங்கவில்லை எனில், அது வியப்பை ஏற்படுத்தும். ஆனால், அதற்கான பின்விளைவுகளை இந்தியா நிச்சயம் சந்திக்க நேரிடும்’’ என்றாா்.

இந்த நிலையில் கரோனா நோய்த்தொற்றால் ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழலைக் கருத்தில் கொண்டு, பாரசிட்டமால், ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்துகளைத் தேவையான அளவுக்கு அண்டை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக மத்திய அரசு திங்கள்கிழமை அறிவித்தது.

அதே வேளையில், உள்நாட்டின் தேவையைப் பூா்த்தி செய்தபிறகே வெளிநாடுகளுக்கு அந்த மருந்து ஏற்றுமதி செய்யப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்தது.

குஜராத்தை உற்பத்தி மையமாகக் கொண்ட மூன்று நிறுவனங்கள் இந்த மாத்திரைகளை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யும் என்று முதல்வர் விஜய் ரூபானி செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

இந்நிலையில் டிரம்ப் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், லட்சக்கணக்கான ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளை வாங்கியிருக்கிறோம். 2.90 கோடிக்கும் அதிகமான மாத்திரைகள் வாங்கப்பட்டுள்ளன. பிரதமர் நரேந்திர மோடியிடம் பேசியதை அடுத்து இந்தியாவில் இருந்து மிகப்பெரிய அளவில் அமெரிக்காவுக்கு வருகின்றன. 

நான் மோடியிடம் பேசினேன், நீங்கள் மாத்திரைகளை ஏற்றுமதி செய்வதற்கு அனுமதி அளித்தால் பெரிய மனிதர் என்றேன். உண்மையிலேயே மோடி பெரிய மனிதர்தான்.  இந்தியாவுக்கு அந்த மாத்திரையின் தேவைப்பட்டதால் அவர்கள் அந்த மாத்திரைகளுக்கான ஏற்றுமதியை நிறுத்தி வைத்திருந்ததாக கூறினார்.

உலக அளவில் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தின் 70 சதவீதத்தை இந்தியா உற்பத்தி செய்து வருகிறது என்று இந்திய மருந்து தயாரிப்பாளர்கள் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் சுதர்சன் ஜெயின் தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஒவ்வொரு மாதமும் 40 டன் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் உற்பத்தி திறன் உள்ளது, இது முடக்கு வாதம் போன்ற நோய்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மருந்தாக பயன்படுத்தப்படுவதால், உற்பத்தியாளர்கள் அதிகயளவில் உற்பத்தி செய்து வருகின்றனர், தற்போது அவை மேலும் அதிகரிக்கக்கூடும் நிலை ஏற்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com