அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் தவிக்கும் எல்லையோர மலை கிராம மக்கள்
By DIN | Published On : 22nd April 2020 04:08 PM | Last Updated : 22nd April 2020 04:08 PM | அ+அ அ- |

ஈரோடு: தமிழக கர்நாடகா மாநில எல்லையில் உள்ள குட்டையூர் மலை கிராம மக்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்க முடியாமல் பரிதவித்து வருகின்றனர்.
ஈரோடு மாவட்டத்தில் கரோனா நோய் தொற்று பரவலை தடுக்க ஊரடங்குடன் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மளிகை, காய்கறி, அத்தியாவசியப் பொருள்களை காலை 7 மணி முதல் 11 மணிக்குள் கடைகளில் வாங்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால், சமவெளியில் வசிப்போர் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்துகொள்கின்றனர். ஆனால் அத்தியாவசியப் பொருட்கள் எதுவும் மலை கிராம மக்களுக்கு கிடைப்பதில்லை.
போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால் சில மலை கிராம மக்களின் கோரிக்கைகளையும் அரசியல் கட்சியினர், பொதுநல அமைப்புகளை சேர்ந்தவர்கள் முழுமையாக அறிந்துகொள்ள முடியாத நிலை உள்ளது.
போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால் கர்நாடக மாநில எல்லையில் உள்ள தமிழக மலை கிராமமமான குட்டையூர் கிராமத்துக்கு அத்தியாவசியப் பொருட்கள் கடந்த ஒரு மாதமாக கிடைக்கவில்லை. இதனால் அந்த கிராம மக்கள் பரிதவித்து வருகின்றனர்.
இதுகுறித்து மலைவாழ் மக்கள் சங்க தலைவர் வி.பி.குணசேகரன் கூறியதாவது: ஊரடங்கால் மலைப்பகுதி மக்கள் பிற மக்களிடம் இருந்து முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக அந்தியூர் வட்டம் பர்கூர் மலைப்பகுதியில் உள்ள குட்டையூர் கிராமம் தனித்தீவு போல சிக்கி உள்ளது. பர்கூர் ஊராட்சிக்குள்பட்ட குட்டையூர் கிராமத்தை சுற்றி வேலம்பட்டி, மட்டிமரத்தள்ளி மற்றும் குக்கிராமங்களில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.
இவர்கள் சமவெளிக்கு வந்து பொருள்களை வாங்கிவிட்டு மீண்டும் தங்கள் கிராமம் செல்ல தமிழக எல்லை கடந்து கர்நாடகா மாநிலத்துக்குள் சென்று வனப்பகுதியில் நடந்து மீண்டும் தமிழக எல்லை வர வேண்டும்.
கர்நாடகா மாநில எல்லைக்குள் ஊரடங்கால் தமிழக மக்கள் செல்ல தடை உள்ளதால் அனுமதிக்க மறுக்கின்றனர். இதனால் இக்கிராமத்தினர் கடந்த மாதம் 24 ஆம் தேதி முதல் கடுமையான சிரமத்தை சந்தித்துள்ளனர்.
அந்தியூரில் இருந்து 90 கி.மீ தூத்தில் உள்ள கிராமம் செல்ல கர்நாடக மாநிலத்துக்குள் 40 கி.மீ பயணிக்க வேண்டும். இதனால் அரிசி, பருப்பு, எண்ணெய், மருந்து போன்றவைகளை கூட வாங்க முடியாமல் சிரமப்படுகின்றனர்.
இதுகுறித்து பர்கூர் ஊராட்சி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.
தொண்டு நிறுவனம், தன்னார்வலர்களின் உதவிகள் கூட இவர்களுக்கு கிடைக்கவில்லை. மாவட்ட நிர்வாகம் இவர்கள் பிரச்னையை அறிந்து நடமாடும் வாகனம் மூலம் அத்தியாவசியப் பொருட்களை அவர்களுக்கு வழங்க வேண்டும் என்றார்.