சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சூறை காற்றுடன் பலத்த மழை
By DIN | Published On : 26th April 2020 10:15 AM | Last Updated : 26th April 2020 10:15 AM | அ+அ அ- |

சென்னை : வெப்பசலனம் காரணமாக சென்னை மற்றும் சுற்றுவட்டாரங்களில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் இடி, மின்னல், சூறை காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் சுற்றுவட்டாரப் பகுதிகள் முழுவதும் வெயிலின் தாக்கத்திலிருந்து விடுபட்டு குளுமை நிலவியது. சாலையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. பல இடங்களில் மின்சாரம், இணையதள தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
அதிகாலை முதல் பெய்து வரும் மழையால் கடந்த பல நாள்களாக வீடுகளுக்குள் வெப்பத்தின் பிடியில் அவதியுற்ற மக்கள் சற்று ஆறுதல் அடைந்தனா். மேலும் இருள்சூழ்ந்த மேகமூட்டம் காணப்படுவதால், சுற்றுப்புறச் சூழலும் குளுமையாக உள்ளது.
வெப்பசலனம் காரணமாக, ஞாயிற்றுக்கிழமை முதல் நான்கு நாட்களுக்கு, தமிழகம் புதுச்சேரி கடலோர மாவட்டங்கள் உள்ளிட்ட பெரும்பாலான கடலோர மாவட்டங்களில், மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணி முதல் சென்னை மற்றும் சுற்றுவட்டாரங்களில் இடி, மின்னல், சூறை காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இணையதள தொடர்பு வசதிகளும் தூண்டிக்கப்பட்டுள்ளது.
அம்பத்தூர், ஆவடி, பூந்தமல்லி, அசோக் நகர், அடையாறு, அண்ணா நகர், மத்திய கைலாஷ், திருவான்மியூர், மயிலாப்பூர், பெருங்குடி, கிண்டி, பெசன்ட் நகர், ஈக்காட்டுதாங்கல், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், வடபழனி, மூலக்கடை, வியாசர்பாடி, புளியந்தோப்பு, புரசைவாக்கம், புழல், செங்குன்றம், ஓட்டேரி, கடம்பத்தூர், திருவள்ளூர் உள்ளிட்ட ஆகிய பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.