ஆடி பெருக்கு விழாவிற்கு தடை:  வெறிச்சோடிய ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம்

கரோனா பொது முடக்கம் காரணமாக, ஆடி பெருக்கு விழாவிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதையொட்டி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் களையிழந்து காணப்பட்டது.
ஆடி பெருக்கு விழாவிற்கு தடை:  வெறிச்சோடிய ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம்


திருச்சி: கரோனா பொது முடக்கம் காரணமாக, ஆடி பெருக்கு விழாவிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதையொட்டி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் களையிழந்து காணப்பட்டது.

விவசாயத்தை வளம் கொழிக்க செய்யும் காவிரி அன்னைக்கு நன்றிக்கடன் செலுத்தும் விதத்தில் ஆடிப்பெருக்கு விழா காவிரிக்கரையோர மக்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

கடந்தாண்டு ஆடிப்பெருக்கு விழாவின்போது காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படாததால் ஆடிப்பெருக்கு விழா களையிழந்து காணப்பட்டது. ஆனால் நிகழாண்டில் காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டும் கரோனா பொது முடக்கம் காரணமாக ஆடிப்பெருக்கு விழா கேள்விக்குறியாகியுள்ளது.

ஆண்டு தோறும் ஆடிப்பெருக்கு விழாவையொட்டி திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறையில் புனித நீராடுவதற்காக வரும் பக்தர்களின் வசதிக்காக காவிரியில் தண்ணீர் இல்லாவிட்டாலும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் ஆழ்குழாய் மூலம் ‌ஷவர் போன்ற அமைப்பு ஏற்படுத்தப்படும். அதேபோல  கரையோர கடைகளில் காதோலை, கருகுமணி விற்பனை களை கட்டும்.

அதிகாலையிலேயே ஏராளமான புதுமண தம்பதிகள் தங்கள் குடும்பத்தினருடன் வந்து ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாடுவதும், அவர்கள் திருமணத்தன்று சூடிய மணமாலைகளை ஆற்று மணலில் விட்டுச் செல்வது வழக்கம்.

மேலும் பெண்கள் வயது முதிர்ந்த சுமங்கலி பெண்கள் மூலம் தங்களது தாலிக்கயிற்றை மாற்றிக் கொள்வர். பின்னர் அம்மா மண்டபம் காவிரி படித்துறையில் மங்கல பொருள்களை வைத்து பூஜை செய்து வழிபாடு நடத்துவார்கள்.  தொடர்ந்து காவிரி தாய்க்கு விளக்கேற்றி சுமங்கலி பெண்களும், திருமணமாகாத கன்னி பெண்களும் வழிபடுவர்.
 
இதேபோல் திருச்சி அய்யாளம்மன் படித்துறை, ஓடத் துறை, முக்கொம்பு உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் ஆடிப்பெருக்கு விழா விமர்சையாக இருக்கும்.

ஆனால் பொதுமுடக்கம் காரணமாக நிகழாண்டில்  அம்மா மண்டபம் படித்துறையில் ஆடிப்பெருக்கு விழாவிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.  இதையொட்டி ஆடிப்பெருக்கு கொண்டாடப்படும் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறை, வடக்குவாசல் படித்துறை , தில்லைநாயகம் படித்துறை, அய்யாளம்மன் படித்துறை ,கீதாபுரம் படித்துறை மற்றும் ஓடத்துறை படித்துறை ஆகியவை மூடப்பட்டது. 

தொடர்ந்து பொதுமக்கள் புதுமணத் தம்பதிகள் யாரும் ஆடிப்பெருக்கு விழா கொண்டாட நீர்நிலைகளுக்கு வருவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மாநகர காவல் துறையினர் எச்சரிக்கை விடுத்திருந்தனர். இதனால் ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்பட கூடிய திருச்சி காவிரி ஆறு படித்துறை மற்றும் நீர்நிலைகளில் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. 

திருச்சி மற்றும் அதனைச் சுற்றியுள்ள மக்கள் அவர்தம் வீடுகளில் இருந்தவாறு புனித நீராடி காவிரித்தாயை வணங்கி வருகின்றனர். பொது முடக்கத்தை மீறி காவிரி படித்துறை மற்றும் நீர் நிலைகளில் பொதுமக்கள் குவிந்து விடாத வண்ணம் காவல்துறையின் ரோந்து தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆடிப் பெருக்கை முன்னிட்டு இன்று பிற்பகல் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் காவிரிக்கு சீர் கொடுக்கும் நிகழ்வு பட்டர்கள் உள்ளிட்ட சிலர் மட்டும் பங்கேற்கும் வகையில் எளிமையாக நடைபெறும். வழக்கமாக ஸ்ரீரங்கம் கோவிலிருந்து யானையில் அமர்ந்து நம்பெருமாள் படித்துறைக்கு வந்து காவிரிக்கு சீர் வழங்கி, பக்தர்களுக்கு அருளாசி வழங்கும் நிகழ்வும் நடைபெறும்.

இந்த ஆண்டு பொது முடக்கம் காரணமாக ஸ்ரீரங்கம் நம்பெருமாள் யானையின் மீது அமர்ந்து காவிரி அம்மா மண்டபம் படித்துறைக்கு வராமல் கோவிலுக்குள் புறப்பாடு நடைபெற உள்ளது. நம்பெருமாளிடமிருந்து சீர் பொருள்களைப் பட்டர்கள் பெற்று வந்து, காவிரிக்கு அளிப்பார்கள் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com