ராமநாதபுரம் மாவட்டத்தில் முழுமையாக பொதுமுடக்கத்தைக் கடைப்பிடித்த மக்கள்

ராமநாதபுரம் மாவட்டத்தில் தளர்வில்லா பொதுமுடக்கத்தை மக்கள் முழுமையாக ஞாயிற்றுக்கிழமை கடைப்பிடித்தனர். இதனால் எப்போதும் இல்லாத அளவுக்கு தெருக்கள் வெறிச்சோடின.
வெறிச்சோடிய அரசு மருத்துவமனைச் சாலை
வெறிச்சோடிய அரசு மருத்துவமனைச் சாலை

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் தளர்வில்லா பொதுமுடக்கத்தை மக்கள் முழுமையாக ஞாயிற்றுக்கிழமை கடைப்பிடித்தனர். இதனால் எப்போதும் இல்லாத அளவுக்கு தெருக்கள் வெறிச்சோடின.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் கரோனா பரவல் தடுப்பு பொதுமுடக்கம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில், தளர்வுடன் கூடிய பொதுமுடக்கம் கடந்த சில வாரங்களாக செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வில்லா பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தளர்வில்லா பொதுமுடக்கத்தை முன்னிட்டு ராமநாதபுரத்தில் எப்போதும் மக்கள் நடமாட்டம் மிகுந்த அரண்மனைத் தெரு, சாலைத் தெரு, வண்டிக்காரத் தெரு, அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை, வழிவிடுமுருகன் கோவில், பாரதிநகர், மதுரை சாலை என முக்கிய பகுதிகளில் மக்கள் நடமாட்டமே இன்றி காணப்பட்டன.

தூய்மைப்பணியாளர்கள், அரசு மருத்துவமனையில் பணிபுரிவோர் என சிலரைத் தவிர தெருக்களில் மக்கள் நடமாட்டம் இன்றியே காணப்பட்டன. தேநீர் கடைகள் முதல் காய்கறிக்கடைகள் வரை அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. சைக்கிளில் கேன் வைத்து தேநீர் விற்றவர்கள் கூட குடிக்க ஆளில்லாத நிலை உள்ளதாகத்
தெரிவித்தனர்.

ராமநாதபுரத்தில் உள்ள பெட்ரோல் நிலையங்கள் அடைக்கப்பட்ட நிலையில், ஓரிரு பங்குகளில் மட்டும் அவசரத்துக்கான பெட்ரோல், டீஸல் நிரப்பப்பட்டன. மருந்துக்கடைகள் ஓரிரு இடங்களில் திறந்திருந்தன. ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கம் போல பள்ளி மைதானங்களில் நடைபயிற்சி மேற்கொள்வோர் நடமாடுவது
வழக்கம். ஆனால், ஞாயிற்றுக்கிழமை ஓரிருவரே நடைப்பயிற்சிக்கு வந்தாலும் விரைந்து சென்றுவிட்டதால் மைதானங்களும் கூட காலியாகவே இருந்தன.

குறைந்துவரும் பாதிப்பு: ராமநாதபுரத்தில் கடந்த ஜூலை 20 ஆம் தேதி வரையில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவந்தன. தினமும் நூற்றுக்கும் மேற்பட்டோர் கரோனா பாதிப்புக்கு உள்ளான நிலையில் ,
கடந்த சில நாள்களாக பாதிப்பின் தாக்கம் வெகுவாகக் குறைந்திருப்பது தெரியவந்துள்ளது. தினமும் 700 க்கும் மேற்பட்டோர் பரிசோதனைக்கு உள்படுத்திய நிலையில், அவர்களில் 30 பேருக்கு மட்டுமே பாதிப்பிருப்பது
தெரியவருகிறது. ஆகவே கரோனா பரவல் ராமநாதபுரத்தில் கட்டுக்குள் வந்திருப்பதாகவும் சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com