அயோத்தி ராமர் கோயிலுக்கு தாமிரவருணி புனித மண்!

அயோத்தி ராமர் கோயிலுக்கு தாமிரவருணியில் இருந்து புனித மண் திங்கள்கிழமை பூஜைகளுக்கு பின்பு எடுத்துச் செல்லப்பட்டது.
குறுக்குத்துறை தீர்த்தக்கட்டத்தில் இருந்து அயோத்தி ராமர் கோயிலுக்கு அனுப்ப புனித மண் எடுக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றோர்
குறுக்குத்துறை தீர்த்தக்கட்டத்தில் இருந்து அயோத்தி ராமர் கோயிலுக்கு அனுப்ப புனித மண் எடுக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றோர்

திருநெல்வேலி, ஆக. 3: அயோத்தி ராமர் கோயிலுக்கு தாமிரவருணியில் இருந்து புனித மண் திங்கள்கிழமை பூஜைகளுக்கு பின்பு எடுத்துச் செல்லப்பட்டது.

உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை இம்மாதம் 5 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் புனித பொருள்கள் எடுத்துச் செல்லப்படுகின்றன.

கன்னியாகுமரி முக்கடல் சங்கமம், ராமசுவரம் அக்னி தீர்த்தம் ஆகியவற்றில் இருந்து புனித மணல் கொண்டு செல்லப்படுகிறது. அதன்படி வற்றாத ஜீவநதியான தாமிரவருணியில் இருந்தும் புனித மண் கொண்டு செல்ல விஷ்வஹிந்து பரிஷத் அமைப்பு சார்பில் முடிவு செய்யப்பட்டது.

திருநெல்வேலி குறுக்குத்துறை தீர்த்தக்கட்டத்தில் தாமிரவருணி நதியில் இருந்து புனிதமண் சேகரிக்கப்பட்டது. பின்பு தீர்த்தக்கட்டத்தில் வைத்து சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. பின்னர் குறுக்குத்துறை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலை ஜெய்சிரீராம் முழக்கத்துடன் பக்தர்கள் வலம் வந்தனர். பின்னர் அந்த மண் அயோத்திக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் விஷ்வஹிந்து பரிஷத் துறவியர் பேரவையின் சுவாமி சிவானந்தமய்யா, ஆர்.எஸ்.எஸ். மாநில பொறுப்பாளர் வெங்கட்ராமன், நல்லக்கண்ணு, விஷ்வஹிந்து பரிஷத் மாநில பொறுப்பாளர்கள் செல்லப்பாண்டியன், பன்னீர்செல்வம், பாஜக திருநெல்வேலி மாவட்டத் தலைவர் ஆ.மகாராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதுகுறித்து நிர்வாகிகள் கூறியது,

நாடு முழுவதும் வசிக்கும் ஹிந்துக்களின் எதிர்பார்ப்பு 500 ஆண்டுகளுக்கு பிறகு நிறைவேறியுள்ளது. ராமபிரான் அவதரித்த அயோத்தியில் பிரமாண்ட கோயில் கட்டுமான பணிகள் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி இம்மாதம் 5 ஆம் தேதி தொடங்குவது மகிழ்ச்சியளிக்கிறது.

அந்த நாளில் முற்பகல் 11.30 மணி முதல் 12.30 மணி வரை ஒவ்வொருவரும் தங்களது வீடுகளில் ராமபிரான் படத்தின் முன்பு திருவிளக்கு ஏற்றி குடும்பத்துடன் ராமஜெயம் மந்திரத்தை 108 முறை சொல்லி ஜெபிக்க வேண்டும். அதேபோல மாலை 6 மணிக்கு வீடுகளில் அகல் விளக்கு ஏற்றி ராமரை வழிபட வேண்டும் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com