முகப்பு தற்போதைய செய்திகள்
தொலைபேசி வாயிலாக பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்த ஆட்சியர்
By DIN | Published On : 03rd August 2020 05:36 PM | Last Updated : 03rd August 2020 05:36 PM | அ+அ அ- |

தொலைபேசி வாயிலாக பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்த ஆட்சியர்
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் பொது மக்களின் குறைகளை தொலைபேசி வாயிலாக மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் திங்கள்கிழமை கேட்டறிந்தார்.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை பொதுமக்கள் குறைதீர்கூட்டம் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், கரோனா பொதுமுடக்கம் காரணமாக பொதுமக்கள் தங்களது மனுக்களை ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள புகார் பெட்டி மூலமாகப் பெறப்பட்டு சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது.
இதனிடையே, கரோனா நோய்த்தொற்று அதிகரித்து வருவதைத் தொடர்ந்து பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகத்துக்கு வருவதைத் தவிர்க்கும் வகையில் தொலைபேசி வாயிலாக ஒவ்வொரு திங்கள்கிழமையும் காலை 11 முதல் பிற்பகல் 1 மணி வரையில் குறைகளைக் கேட்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதன்படி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் தலைமையில் தொலைபேசி வாயிலாக குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில், பொதுமக்களிடமிருந்து வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித் தொகை, புதிய குடும்ப அட்டை வேண்டியும், சாலைவசதி, குடிநீர் வசதி வேண்டி என உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 95 அழைப்புகள் வரப்பெற்றன.
இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி சம்மந்தப்பட்ட அலுவலர்களை ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் அறிவுறுத்தினார். இந்தக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் கு.சரவணமூர்த்தி, சமூகபாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியர் சாகுல்ஹமீது உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.