ஆயிரம்விளக்கு திமுக எம்எல்ஏ கு.க.செல்வம் இடைநீக்கம்: மு.க.ஸ்டாலின் நடவடிக்கை

தில்லியில் பாஜவின் தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டாவை ஆயிரம் விளக்கு சட்டப்பேரவைத் தொகுதி திமுக உறுப்பினர் கு.க. செல்வம் செவ்வாய்க்கிழமை சந்தித்து பேசிய நிலையில்
பாஜகவில் இணைகிறார் திமுக எம்எல்ஏ கு.க. செல்வம்
பாஜகவில் இணைகிறார் திமுக எம்எல்ஏ கு.க. செல்வம்


சென்னை: தில்லியில் பாஜவின் தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டாவை ஆயிரம் விளக்கு சட்டப்பேரவைத் தொகுதி திமுக உறுப்பினர் கு.க. செல்வம் செவ்வாய்க்கிழமை சந்தித்து பேசிய நிலையில், அவர் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்படுவதாகவும், அவர் வகித்து வந்த கட்சிப்பதவியில் இருந்து விடுவிக்கப்படுவதாகவும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

திமுக தலைமை மீதான அதிருப்தி காரணமாக கட்சி பணிகளில் இருந்து ஒதுங்கி இருந்த ஆயிரம்விளக்கு தொகுதி திமுக சட்டப்பேரவை உறுப்பினர் கு.க. செல்வம், செவ்வாய்க்கிழமை மாலை தில்லியில் ஜெ.பி.நட்டாவை அவரது இல்லத்தில், கு.க. செல்வம்  சந்தித்துப் பேசினார். அப்போது, தமிழக பாஜக மேலிடப் பொறுப்பாளர் முரளிதர் ராவ், தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், திமுக துணைப் பொதுச் செயலராக இருந்தவரும், தற்போதைய தமிழக பாஜக மாநில துணைத் தலைவருமான வி.பி.துரைசாமி ஆகியோர் உடனிருந்தனர். 

ஆனால்,  தான் பாஜகவில் இணையவில்லை என்று மறுத்த கு.க. செல்வம்,  ராமஜென்ம பூமி  பூஜை விழா புதன்கிழமை நடக்கவுள்ள நிலையில், இதற்காக பிரதமர் மோடிக்கு பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல,  ராமேசுவரம் கோயில் பகுதியை அயோத்திக்கு ஒப்பாக மேம்படுத்தும்படி மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தேன். என்னுடைய  ஆயிரம் விளக்குத் தொகுதியில் உள்ள நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இரண்டு மின் தூக்கிகளை அமைத்துத் தரும்படி மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயலை நேரில் சந்தித்து கோரிக்கை வைப்பதற்காக தில்லி வந்தேன்.

தமிழ்க் கடவுள் முருகனை அவமதித்தவர்களை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கண்டிக்க வேண்டும் என்று கூறியவர், திமுகவில் உள்கட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்றும், காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலக வேண்டும், இந்துக்களுக்கு எதிராக பேசுபவர்களை கண்டிக்க வேண்டும் என்றும் கூறினார்.

இந்த நிலையில், கு.க.செல்வம் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளதாகவும், திமுக  தலைமைச் செயற்குழு உறுப்பினர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுவதாகவும் திமுக தலைவர் இரண்டு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. 

இது தொடர்பாக திமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘திமுக தலைமை நிலைய அலுவலகச் செயலாளர் மற்றும் தலைமைச் செயற்குழு உறுப்பினர் கு.க.செல்வம் அவர்கள், அவர் வகித்து வந்த பொறுப்புகளிலிருந்து இன்று முதல் (ஆகஸ்ட் 5) விடுவிக்கப்படுகிறார்.

திமுக தலைமை நிலைய அலுவலகச் செயலாளர் மற்றும் தலைமைச் செயற்குழு உறுப்பினர் பொறுப்புகளிலிருந்து விடுவிக்கப்பட்ட கு.க.செல்வம் அவர்கள், கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வருவதையொட்டி, அவரை தற்காலிகமாக கழகத்திலிருந்து நீக்கி வைப்பதுடன், ‘கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து ஏன் நீக்க கூடாது’ என அவருக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com