கேரள நிலச்சரிவு: 17 தேயிலை தோட்ட தொழிலாளர்களின் உடல்கள் மீட்பு

இடுக்கி மாவட்டத்தில் பெய்து வரும் கன மழையால் மூணாறு அருகே ஏற்பட்ட நிலச் சரிவில் சிக்கிய தேயிலை தோட்ட தொழிலாளர்களில்,  17 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
கேரள நிலச்சரிவு: 17 தேயிலை தோட்ட தொழிலாளர்களின் உடல்கள் மீட்பு
கேரள நிலச்சரிவு: 17 தேயிலை தோட்ட தொழிலாளர்களின் உடல்கள் மீட்பு

கேரளத்தில்  உள்ள இடுக்கி மாவட்டத்தில் பெய்து வரும் கன மழையால் மூணாறு அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய தேயிலை தோட்ட தொழிலாளர்களில்,  17 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன..


இடுக்கி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால், மூணாறு பகுதியில் சிறு பாலங்கள், சாலை, மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. 

இந்த நிலையில், மூணாறு அடுத்த ராஜமாலா பகுதி அருகே உள்ள பெட்டிமடி, கன்னிமலை தேயிலை தோட்டப் பகுதிகளில் தொடர் மழையால் நள்ளிரவில் பலத்த நிலச் சரிவு ஏற்பட்டது.

இதில் கன்னிமலை பகுதியில் உள்ள தனியார் தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் வசிக்கும் 30 குடியிருப்புகள் மண்ணில் புதைந்தன. இந்த குடியிருப்புகளில் மொத்தம் 82 பேர் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.  இவர்கள் அனைவரும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்றும், பெரும்பாலானோர் திருநெல்வேலி, ராஜபாளையம், தென்காசி பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது. 

நிலச்சரிவு குறித்து இடுக்கி மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, தேசிய பேரிடர் மீட்புப் படையினருடன், வனத் துறையினர், தீயணைப்பு மீட்புத் துறையினர் மற்றும் காவல் துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். 

இதில், மண்சரிவில் சிக்கியிருந்த 12 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.  மேலும், மண்ணில் புதையுண்டு உயிரிழந்த 17 பேரின் உடல்களும் மீட்கப்பட்டது. இதில், காந்திராஜ் (48), சிவகாமி (38), விஷால் (12), ராமலட்சுமி (40), முருகன் (45), மயில்சாமி (48), கண்ணன் (40), அண்ணாதுரை (44), ராஜேஸ்வரி (43) ஆகிய 9 பேரின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.

பேரிடர் மீட்புக் குழுவைச் சேர்ந்த 52 பேர் தொடர்ந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர் மழையால் மீட்பு பணிகளில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இரவு முழுவதும் மீட்பு பணிகள் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதனிடையே நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.


இதேபோன்று நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என்று முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். நிலச்சரிவில் சிக்கி படுகாயம் அடைந்தவர்களின் முழு மருத்துவ செலவையும் அரசே ஏற்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com