உ.பி. : ராமர் கோவிலுக்கு எதிராக தகவல் பரப்பியவர்கள் கைது
By PTI | Published On : 07th August 2020 12:11 PM | Last Updated : 07th August 2020 12:11 PM | அ+அ அ- |

ராமர் கோவில் மாதிரி படம்
உத்தர பிரதேசத்தில் குறிப்பிட்ட மதத்திற்கு எதிராகவும், ராமர் கோவிலுக்கு எதிராகவும் சமூக ஊடகங்களில் தகவல் பரப்பியதற்காக மருத்துவர் உள்பட மூன்று பேரை கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குன்வர் ஞானஞ்சய் கூறுகையில்,
உத்தர பிரதேசத்தில் கடந்த புதன்கிழமை ராமர் கோயில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது. அன்றைய தினம் சிலர் சமூக ஊடகங்களில் ராமர் கோவிலுக்கு எதிராகவும், குறிப்பிட்ட மதத்திற்கு எதிராகவும், தேசிய ஒருமைப்பாட்டிற்கும் எதிராகவும் மருத்துவர் அலீமின் மருத்துவமனையில் அமர்ந்து தகவல்கள் பரப்புவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.
காவல்துறையினர் அங்கு சென்றபோது, டாக்டர் அலீம், கம்ருதீன் மற்றும் சாஹிபே ஆலம் ஆகியோர் இந்த செயலில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது. மேலும், அவர்கள் மூவரும் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவரில் சாஹிபே ஆலம் என்பவர் பாப்புலர் ஃபரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் முன்னாள் அலுவலக பொறுப்பாளராகவும், சமூக ஜனநாயக கட்சியின் ஊடக பொறுப்பாளராகவும் பணியாற்றியவர் என தெரியவந்துள்ளது.
டாக்டர் அலீம் மற்றும் கம்ருதீன் ஆகிய இருவரும் சமூக ஜனநாயக கட்சியின் வாட்ஸ்அப் குழுவில் உறுப்பினர்களாக இருந்தனர். மேலும், சமூக ஜனநாயக கட்சி மற்றும் பாப்புலர் ஃபரண்ட் ஆப் இந்தியா உடனான தொடர்புகள் குறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது என கூறினார்.