கோவை அருகே கார் மரத்தில் மோதி விபத்து: 4 இளைஞர்கள் பலி
By DIN | Published On : 07th August 2020 02:56 PM | Last Updated : 07th August 2020 02:56 PM | அ+அ அ- |

கோப்புப் படம்
கோவை கணுவாய் அடுத்த காளையனூர் பகுதியில் அதிகாலை வேகமாக வந்த கார் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் காரில் இருந்த 4 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலியாயினர். படுகாயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை வடகோவையை சேர்ந்த இந்துராஜ், கார்த்திக்ராஜ், மணி, பிரஜேஷ் மற்றும் மோகன்ஹரி ஆகிய 5 இளைஞர்கள் ஆனைகட்டி செல்வதற்காக இன்று அதிகாலை 3 மணியளவில் சிப்ட் காரில் ஆனைகட்டி சாலையில் சென்றுள்ளனர்.
அதிவேகமாக வந்த கார் கணுவாய் அடுத்த காளையனூர் பகுதியில் வந்த போது கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த மரத்தில் மோதியது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. காரில் இருந்த 5 இளைஞர்களும் காரின் இடிபாடுகளுக்கு சிக்கினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தடாகம் காவல்துறையினர் காரில் சிக்கியிருந்த 5 இளைஞர்களையும் 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு வெளியே மீட்டனர். இதில் இந்துராஜ், கார்த்திக்ராஜ், மணி மற்றும் மோகன்ஹரி ஆகிய 4 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாயினர்.
படுகாயமடைந்த பிரஜேஷ் என்பவரை கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த தடாகம் காவலர்கள் பலியான 4 இளைஞர்களின் உடலையும் உடற்கூறாய்விற்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.