நாமக்கல்: இரு சக்கர வாகனம் மீது கார் மோதி பாட்டி, பேரன் பலி
By DIN | Published On : 07th August 2020 04:06 PM | Last Updated : 07th August 2020 04:06 PM | அ+அ அ- |

நாமக்கல்: இரு சக்கர வாகனம் மீது கார் மோதி பாட்டி, பேரன் பலி
நாமக்கல்: நாமக்கல் அருகே இரு சக்கர வாகனத்தின் மீது கார் மோதியதில் பாட்டியும் பேரனும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
கரூர் மாவட்டம் தும்பிவாடி கிராமத்தைச் சேர்ந்த பழனியம்மாள் (வயது 45), தனது பேரன் கிருத்திக் ரோஷன் (11) என்பவருடன் நாமக்கல் மாவட்டம் செல்லப்பம்பட்டியில் உள்ள தாய் வீட்டுக்கு வந்திருந்தார்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை இரு சக்கர வாகனத்தில் கரூர் நோக்கி பேரனுடன் சென்று கொண்டிருந்தார். அவர் வள்ளிபுரம் மேம்பாலம் அருகில் சென்றபோது தருமபுரியில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி அதிவேகமாக சென்ற கார், பழனியம்மாள் சென்ற இரு சக்கர வாகனம் மீது மோதியது.
பாட்டியும், பேரனும் தூக்கி வீசப்பட்டதில் மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்து அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் ஒரு இரு சக்கர வாகனத்தின் மீதும் கார் மோதியதில் கீழ் சாத்தம்பூர் கிராமத்தைச் சேர்ந்த உணவக உரிமையாளரும் பலத்த காயமடைந்தார்.
இவ்விபத்து தொடர்பாக நல்லிப்பாளையம் காவல் துறையினர் காரை ஓட்டி வந்தவரை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.