ராஜபாளையத்தில் கரோனாவுக்கு  மற்றொரு மருத்துவர் பலி

ராஜபாளையத்தை சேர்ந்த தனியார் மருத்துவமனை மருத்துவர் கோதண்டராமன் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை காலை உயிரிழந்தார். 
கரோனா தொற்றால் உயிரிழந்த மருத்துவர் கோதண்டராமன்
கரோனா தொற்றால் உயிரிழந்த மருத்துவர் கோதண்டராமன்

ராஜபாளையம்: ராஜபாளையத்தை சேர்ந்த தனியார் மருத்துவமனை மருத்துவர் கோதண்டராமன் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை காலை உயிரிழந்தார்.

ராஜபாளையத்தை சேர்ந்த தனியார் மருத்துவர் கோதண்டராமன் (வயது68).  இவர் கடந்த 1981ம் வருடம் மருத்துவ படிப்பையும், குழந்தைகள் நலன் குறித்த சிறப்பு படிப்பையும் முடித்து மருத்துவராக பணியாற்றி வந்தார்.

கடந்த 1995 முதல் ரோட்டரி எனப்படும் தன்னார்வ தொண்டு அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்டார். குழந்தைகளுக்கு ஏற்படும் இதய கோளாறு குறித்து சோதனை செய்து, மதுரை அப்பல்லோ மருத்துவமனைக்கு அறுவை சிகிச்சை தேவைப்படும் குழந்தைகளை தேர்வு செய்து இந்த அமைப்பின் மூலம் அனுப்பி வந்தார்.

முதலுதவி சிகிச்சை பயிற்சியாளர் என தனியார் ஆம்புலன்ஸ் அமைப்பு இவருக்கு அங்கீகாரம் அளித்துள்ளது.

கடந்த இரண்டாயிரமாவது ஆண்டு முதல் இந்திய மருத்துவ சங்கத்தின் ராஜபாளையம் கிளை நிறுவனர் மற்றும் தலைவராக இருந்து வந்தார். தன்னார்வ தொண்டு அமைப்பின் மூலமாகவும், சங்கத்தின் மூலமாகவும் பல்வேறு சேவைகளை செய்து வந்துள்ளார்.

இவருக்கு கடந்த மாத தொடக்கத்தில் காய்ச்சல், சளி உள்ளிட்ட உபாதைகளால் உடல்நலக் கோளாறு ஏற்பட்டுள்ளது. சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் நுரையீரல் நிபுணராக பணியாற்றும் இவரது மகன் தீபக் கண்ணன் ஆலோசனை மற்றும் மருந்துகளின் உதவியுடன் சிறிது நாள்கள் வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.

இந்நிலையில் கடந்த 20ம் தேதி மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு 10 நாள்கள் வரை அளிக்கப்பட்ட சிகிச்சையில் குணமடைந்து ராஜபாளையம் திரும்பினார்.

வீடு திரும்பிய 3 நாட்களிலேயே மீண்டும் உடல் நலக் குறைவு ஏற்பட்டது. ராஜபாளையத்தில் உள்ள 2 தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று, மேல் சிகிச்சைக்காக மீண்டும் மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கடந்த மாதம் 27ம் தேதி ராஜபாளையத்தை சேர்ந்த தனியார் மருத்துவரும், இந்திய மருத்துவ சங்கத்தின் ராஜபாளையம் கிளை பொருளாளருமான சாந்திலால் கரோனாவுக்கு உயிரிழந்த நிலையில், தற்போது மருத்துவர் கோதண்டராமரும் கரோனாவுக்கு பலியானதால்,  உயிரிழந்த மருத்துவர்கள் எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com