கட்சி உறுப்பினர்கள் அதிருப்தியடைவது இயல்பானது: அசோக் கெலாட்
By DIN | Published On : 12th August 2020 12:24 PM | Last Updated : 12th August 2020 12:24 PM | அ+அ அ- |

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்
ஜெய்சால்மர்: கட்சி உறுப்பினர்கள் அதிருப்தி அடைவது இயல்பானது, ஜனநாயகத்திற்காக அதனை பொறுத்துக்கொள்ள வேண்டும் என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தானில் அதிருப்தியில் இருந்த ராஜஸ்தான் மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவரும், முன்னாள் துணை முதல்வருமான சச்சின் பைலட் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, மற்றும் பொதுசெயலர் பிரியங்கா காந்தியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு காங்கிரஸ் கட்சியில் நீடித்து வந்த குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அமைந்தது. மேலும் சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் அதிருப்தி குறித்து விசாரிப்பதற்காக 3 நபர்கள் அடங்கிய குழுவை காங்கிரஸ் தலைமை அமைத்து உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே ஜெய்சால்மரில் சட்டமன்ற உறுப்பினர்களை முதல்வர் அசோக் கெலாட் நேரில் சென்று சந்தித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது, "ஜனநாயகத்தை காப்பதற்காக போராட்டம் நடைபெற்று வருகிறது. எதிர்காலத்திலும் ஜனநாயகத்திற்கான போராட்டம் தொடர்ந்து நடைபெறும். காங்கிரஸில் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் ஒற்றுமையாக உள்ளனர். இது காங்கிரஸ் கட்சியை கவிழ்க்க நினைக்கும் பாஜகவுக்கு எதிராக ராஜஸ்தான் மக்களுக்கு கிடைத்த வெற்றி. மக்களுக்கு சேவை செய்வதே எங்கள் பணி" என்று கூறினார்.
"சட்டமன்ற உறுப்பினர்கள் அதிருப்தியில் இருப்பது இயல்பாக நடக்கக்கூடியது. அதன்படி கடந்த ஒரு மாதமாக சட்டமன்ற உறுப்பினர்கள் அதிருப்தியில் இருந்தனர். இது இயற்கையானது. நாட்டுக்காகவும், மாநிலத்திற்காகவும், மக்களுக்காகவும் நாம் சிலவற்றை பொறுத்துக்கொள்ள வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர்களிடம் கூறினேன்". இவ்வாறு அசோக் கெலாட் தெரிவித்தார்.