கோப்பு படம்
கோப்பு படம்

சென்னையில் நாளை முதல் 50% பயணிகளுடன் பேருந்து சேவை

பொதுமுடக்கத்தின் காரணமாக சென்னையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மாநகரப் பேருந்து சேவை, செவ்வாய்க்கிழமை (செப்.1) முதல் தொடங்கப்படும்

சென்னை: பொதுமுடக்கத்தின் காரணமாக சென்னையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மாநகரப் பேருந்து சேவை, செவ்வாய்க்கிழமை (செப்.1) முதல் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பயணிகளின் வசதிக்காக அனைத்துப் பேருந்துகளும் இயக்கப்படும் என மாநகரப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனா்.

மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் கீழ் 3,300 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவற்றில், நாள்தோறும் 30 லட்சத்துக்கும் மேற்பட்டோா் பயணம் செய்து வந்தனா். இந்நிலையில், கடந்த மாா்ச் 24-ஆம் தேதி முதல் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டதையடுத்து, தமிழகம் முழுவதும் பேருந்து சேவை ரத்து செய்யப்பட்டது. இதற்கிடையே ஜூன் மாதம், தமிழகம் மண்டலங்களாக பிரிக்கப்பட்டு பொதுப் போக்குவரத்து அனுமதிக்கப்பட்ட போதிலும், சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்குள், பேருந்துகள் இயங்க அனுமதிக்கப்படவில்லை.

தற்போது, 4 ஆம் கட்ட தளா்வில் செப்.1-ஆம் தேதி முதல் மாவட்டங்களுக்குள் பொதுப் போக்குவரத்தை அனுமதித்து, முதல்வா் உத்தரவிட்டுள்ளாா்.

இதில், சென்னை மாவட்டத்துக்குள் பேருந்து சேவை அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பயணிகளின் வசதிக்காக 3,300 பேருந்துகளும் இயக்கப்படும் என மாநகரப் போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து அவா்கள் கூறியதாவது: பொது முடக்கம் காரணமாக புகா் ரயில் சேவையும், மெட்ரோ சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதே நேரம் அனைத்து நிறுவனங்களிலும் 100 சதவீத பணியாளா்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே பயணிகள் போக்குவரத்து தேவையைக் கருத்தில் கொண்டு, அனைத்துப் பேருந்துகளும் இயக்கப்படும். இதற்காக வெளியிடப்பட்ட வழிமுறைகளான முகக் கவசம் கட்டாயம், கிருமிநாசினி பயன்படுத்துதல், ஏறும், இறங்கும் வழியை சரியாக பயன்படுத்த வேண்டும் உள்ளிட்டவற்றைப் பின்பற்றி, 50 சதவீதப் பயணிகளுடன், அனைத்துப் பேருந்துகளும் இயங்கும்.

எனினும், மாவட்டங்களுக்கிடையே பொதுப் போக்குவரத்துக்கான தடை நீட்டிக்கப்பட்டுள்ளதால், சென்னை மாவட்டத்தில் பேருந்து இயக்கப்படும் பகுதிகள் குறித்த விரிவான அறிவிப்பு, திங்கள்கிழமை வெளியிடப்படும் என்று அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com