'அதிமுகவுக்கு ஆதரவாக ரஜினி குரல் கொடுத்தால் ஏற்றுக் கொள்வோம்': அமைச்சர் கடம்பூர் செ.ராஜு  

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக ரஜினி குரல் கொடுத்தால் அதனை ஏற்றுக் கொள்வோம் என்றார் அமைச்சர் கடம்பூர் செ.ராஜு.
அமைச்சர் கடம்பூர் செ.ராஜு.
அமைச்சர் கடம்பூர் செ.ராஜு.

கோவில்பட்டி: வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக ரஜினி குரல் கொடுத்தால் அதனை ஏற்றுக் கொள்வோம் என்றார் அமைச்சர் கடம்பூர் செ.ராஜு.

கோவில்பட்டி பயணியர் விடுதியில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:

அதிமுக தொடங்கிய பின் 10  பொதுத் தேர்தல்களில் 7 முறை வெற்றி பெற்றுள்ளோம். எங்களுக்கு போட்டி திமுக தான். இதற்கிடையே ஏராளமான கட்சிகள் தோன்றின. எத்தனை கட்சிகள் வந்தாலும் எங்களுக்கு பாதிப்பில்லை.  
நடிகர் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிப்பதும், ஆரம்பிக்காததும் அவரது சொந்த விருப்பம். பொதுவாக, நடிகர்கள் யார் கட்சி தொடங்கினாலும் அதனால் அதிமுகவுக்கு பின்னடைவு ஏதும் இல்லை.

புதிதாக கட்சி தொடங்குபவர்கள் அதிருப்தி வாக்குகளைப் பிரிக்க வாய்ப்பிருப்பதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துளஅள கருத்து குறித்து கேட்டதற்கு, அதிமுக அரசின் மீது அதிருப்தி என்ற பேச்சுக்கே இடமில்லை. மக்கள் திருப்தியாக உள்ளனர். 2021ஆம் ஆண்டில் நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் எங்களுக்கு தொடர் வெற்றியை தர மக்கள் தயாராக உள்ளனர்.
யார் கட்சி தொடங்கினாலும் கவலை இல்லை. அதிமுகவுக்கு வாக்கு வங்கி உள்ளது என நாங்கள் கூறினோம். திமுகவும் கூறியிருந்தால் அவர்கள் மக்கள் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் எனக் கூறலாம். நமது வெற்றி எளிதல்ல என ஸ்டாலின் அவரது தொண்டர்களுக்கிடையே காணொலியில் கூறியுள்ளார். அந்த வகையில் ஸ்டாலின் இதை சரியாக கணித்துள்ளார். இப்போதும் நாங்கள் சொல்கிறோம், அவர்கள் எளிதாக வெற்றி பெறப்போவதில்லை. முடியாது என்பதை ஸ்டாலினே ஒப்புக்கொண்டுள்ளார்.

ரஜினி கட்சி தொடங்குவது பற்றி அதிமுகவினர் யாரும் விமர்சிக்கவில்லை. இன்றைய அவரது முடிவு எங்களுக்கு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. அவர் எங்களுக்கு ஆதரவு கொடுத்தால் ஏற்றுக் கொள்வோம்.

தொட்டில் முதல் சுடுகாடு வரை அனைத்திலும் ஊழல் என்று கமலஹாசன் கூறியது குறித்து கேட்டபோது,   பழுத்த மரத்தில் தான் கல் அடிப்பார்கள். பட்டுப்போன மரத்தில் யாரும் கல் அடிக்கமாட்டார்கள். அதிமுக பழுத்த
மரமாக உள்ளது. அதிமுகவைப் பற்றி பேசினால் தான் கமலஹாசனை மக்கள் நினைப்பார்கள்.

பெண்ணினம் காக்கப்பட வேண்டும் என்று கூறி, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உருவாக்கிய திட்டம் தொட்டில் குழந்தை திட்டம். இத்திட்டத்தை அன்னை தெரசா பாராட்டியுள்ளார். கமலஹாசன் தொட்டில் குழந்தை திட்டத்தை நினைவுகூர்ந்தால் சரி.  இந்த திட்டம் வந்தபின் தமிழகத்தில் ஒரு பெண் சிசு கூட அழிக்கப்படவில்லை. இந்த திட்டமெல்லாம் கமலஹாசனுக்கு தெரியவில்லை என்றால் அவர் எங்கே இருந்தார், நிதானத்தில் இருக்கிறாரா என்பது அவருக்குத் தான் தெரியும் என்றார் அவர்.

பேட்டியின்போது, விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினர் சின்னப்பன், அதிமுக பொதுக்குழு உறுப்பினர் இராமச்சந்திரன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் சந்திரசேகர், அதிமுக நகரச் செயலர் விஜயபாண்டியன், ஜெயலலிதா பேரவை வடக்கு மாவட்டப் பொருளாளர் வேலுமணி உள்ளிட்டோர் உடனிருந்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com