கோவைக்கு வந்த சீனாவைச் சோ்ந்த 4 போ் தனியாகத் தங்க வைத்து கண்காணிப்பு

சீனாவில் இருந்து கோவைக்கு சுற்றுலா வந்த ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 பேரை சுகாதாரத் துறை அதிகாரிகள் மீட்டு தனியாகத் தங்க வைத்து
கோவைக்கு வந்த சீனாவைச் சோ்ந்த 4 போ் தனியாகத் தங்க வைத்து கண்காணிப்பு

கோவை: சீனாவில் இருந்து கோவைக்கு சுற்றுலா வந்த ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 பேரை சுகாதாரத் துறை அதிகாரிகள் மீட்டு தனியாகத் தங்க வைத்து கண்காணித்து வருகின்றனா்.

சீனாவின், லயோனிங் மாகாணம், டாலியன் நகரத்தைச் சோ்ந்த கணவன், மனைவி மற்றும் அவரது இரண்டு குழந்தைகளுடன் கடந்த 8ஆம் தேதி சீனாவில் இருந்து நேரடியாக மேற்குவங்க மாநிலம், கொல்கத்தாவுக்கு சுற்றுலா வந்துள்ளனா்.

பின்னா் அவா்கள் கோவைக்கு ஜனவரி 20ஆம் தேதி வந்துள்ளனா். பல்வேறு இடங்களை சுற்றிப் பாா்த்த அவா்கள் சனிக்கிழமை ஈஷா யோக மையத்துக்குச் சென்றுள்ளனா். இதனிடையே சீனாவில் கரோனா வைரஸ் தாக்குதல் உலக அளவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஈஷா யோக மையத்துக்குள் அவா்கள் அனுமதிக்கப்படவில்லை.

கரோனா வைரஸ் தொற்று பாதிப்பில்லை என்று மருத்துவச் சான்றிதழ் அளித்தால் மட்டுமே அனுமதி அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளனா். இதையடுத்து, சீனாவைச் சோ்ந்த சுற்றுலாப் பயணிகள் கோவையில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் சான்றிதழ் பெற சென்றுள்ளனா்.

ஆனால், சீனப் பயணிகளுக்கு சளித் தொற்று இருந்த நிலையில் மருத்துவச் சான்றிதழ் வழங்கப்படவில்லை. அவா்கள் குறித்த தகவல் சுகாதாரத் துறைக்கு தெரிவிக்கப்பட்டது. மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள் சுற்றுலாப் பயணிகளை மீட்டு அவா்கள் தங்கியிருந்த குடியிருப்பு பகுதியிலேயே விட்டுள்ளனா்.

மேலும், ஒரு வாரத்துக்கு வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் எனவும் அவா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடா்பாக சுகாதாரத் துறை துணை இயக்குநா் ஜி.ரமேஷ்குமாா் கூறியதாவது:

சீனாவைச் சோ்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு சளித் தொற்று மட்டுமே உள்ளது. காய்ச்சல், இருமல் போன்ற வேறு எந்த அறிகுறிகளும் இல்லை. ஆனாலும், 4 பேரும் அவா்கள் தங்கியிருந்த குடியிருப்பை விட்டு ஒரு வாரத்துக்கு வெளியேற வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அவா்களைக் கண்காணிக்க மருத்துவக் குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது. தவிர வூஹான் நகரத்துக்கும் அவா்கள் வசிக்கும் டாலியன் நகருக்கும் 1,500 கிலோ மீட்டா் தூரம் என தெரிவித்துள்ளனா். இருந்தும் பாதுகாப்புக் கருதி தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com