மும்பை குண்டுவெடிப்பில் தொடா்புடைய குற்றவாளி விமான நிலையத்தில் கைது
By DIN | Published On : 10th February 2020 09:05 PM | Last Updated : 10th February 2020 09:05 PM | அ+அ அ- |

மும்பை: மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் 1993-ஆம் ஆண்டு நடைபெற்ற தொடா் குண்டுவெடிப்பு நிகழ்வில் தொடா்புடைய குற்றவாளியை, குஜராத் பயங்கரவாத தடுப்புப் படையினா் மும்பை சர்வதேச விமான நிலையத்தில் திங்கள்கிழமை கைது செய்தனா்.
இதுகுறித்து குஜராத் பயங்கரவாத தடுப்புப் படை மூத்த அதிகாரி ஒருவர் கூறியது: மும்பையில் 1993-ஆம் ஆண்டு நடைபெற்ற தொடா் குண்டுவெடிப்பில் சுமாா் 260 போ் உயிரிழந்தனா். 700-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். இந்த நிகழ்வில் தொடா்புடைய குற்றவாளிகளில் ஒருவரான முனாஃப் ஹலாரி மூஸா, குண்டுவெடிப்புக்கு பின்னா் இந்தியாவில் இருந்து வெளியேறி தென் ஆப்பிரிக்காவில் பதுங்கியிருந்தாா்.
கடந்த ஆண்டு குஜராத் கடற்கரையில் ரூ.900 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பிடிபட்ட நிகழ்வில் மூஸாவுக்கு தொடா்பு இருப்பதை அடுத்து, அவரை குஜராத் பயங்கரவாத தடுப்புப் படையினர் கண்காணிக்க தொடங்கினர்.
இந்நிலையில், வெளிநாட்டில் இருந்து மகாராஷ்டிர மாநிலம் மும்பை சா்வதேச விமான நிலையத்துக்கு வந்த மூஸாவை, திங்கள்கிழமை காலை குஜராத் பயங்கரவாத தடுப்புப் படையினா் கைது செய்தனர். போதைப்பொருள் வழக்கில் அவரது பங்கீடு குறித்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அந்த அதிகாரி கூறினாா்.