அவிநாசி கோர விபத்தில் 19 பேர் பலி: விபத்து நடந்தது எப்படி ?

அவிநாசி அருகே கண்டெயனர் லாரி மோதியதில் கேரள அரசு பேருந்தில் பயணம் செய்த 6 பெண்கள் உள்ளிட்ட 19 பேர் பரிதாபமாக
அவிநாசி கோர விபத்தில் 19 பேர் பலி: விபத்து நடந்தது எப்படி ?

திருப்பூர்: அவிநாசி அருகே கண்டெயனர் லாரி மோதியதில் கேரள அரசு பேருந்தில் பயணம் செய்த 6 பெண்கள் உள்ளிட்ட 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கேரள மாநில சாலை போக்குவரத்து துறைக்குச் சொந்தமான சொகுசு பேருந்து கர்நாடகம் மாநிலம் பெங்களூருவில் இருந்து கேரளம் மாநிலம் எர்ணாகுளம் நோக்கி புதன்கிழமை இரவு 8 மணி அளவில் புறப்பட்டது. இந்தப் பேருந்தில் எர்ணாகுளத்தைச் சேர்ந்த 25 பேரும், பாலக்காட்டைச் சேர்ந்த 4 பேர், திருச்சூரைச் சேர்ந்த 19 பேர் எனமொத்தம் 48 பேர் பயணம் செய்தனர். இந்தப் பேருந்தானது திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே புறவழிச்சாலையில் அதிகாலை 3.15 மணி அளவில் வந்து கொண்டிருந்தது. அப்போது கோவையில் இருந்து சேலம் நோக்கி 50 டன் எடைகொண்ட டைஸ்ஸ் ஏற்றிச் சென்ற கண்டெய்னர் லாரி வந்து கொண்டிருந்தது. 

இந்த நிலையில், அதிகாலை நேரமாக இருந்ததால் கண்டெய்னர் லாரி ஓட்டுநர் கண் அயர்ந்ததாகத் தெரிகிறது. இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கண்டெய்னர் லாரி சாலை மையத்தடுப்பையும் தாண்டி பேருந்தின் மீது நேருக்கு நேர் மோதியுள்ளது. இதில் கண்டெய்னர் லாரியில் இருந்த 50 டன் டைல்ஸ்களை ஏற்றியிருந்த இரும்புக் கூண்டானது பேருந்தின் ஒரு புறத்தில் பலமாக சரிந்துள்ளது. இதில் பேருந்தின் இருக்கைகள் அணைத்தும் அப்பளம் போல் நசுங்கியது. 

இதுகுறித்து தகவல் அறிந்து அவிநாசி, திருப்பூர் வடக்கு தீயணைப்பு நிலையங்களில் இருந்து 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்களும், கோவையில் இருந்து அவசரகால மீட்பு குழுவினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர், இடிபாடிகளில் சிக்கியவர்களை கட்டர், கடப்பாறை போன்ற ஆயதங்களைக் கொண்டு அகற்றும் பணியில் ஈடுபட்டனர். 

இதில், சம்பவ இடத்திலேயே 14 பேரும், மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் 5 பேர் என மொத்தம் 19 பேர் உயிரிழந்துள்ளனர். இதில், 6 பெண்களும் அடங்குவர். விபத்தில் காயமடைந்தவர்களை 24 பேர் கோவை, அவிநாசி, திருப்பூர் பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். மற்ற 5 பயணிகள் லேசான காயமடைந்ததாகவும் தெரிகிறது.  

இதனிடையே பேருந்து ஓட்டுநரை தீயணைப்புத்துறையினர் சுமார் 3 மணி நேரம் போராடி மீட்டனர். இதில், விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பிச் சென்ற லாரி ஓட்டுநர் குறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். 

விபத்து நடைபெற்ற இடத்தில் ஆட்சியர் ஆய்வு: இதனிடையே, விபத்து நடைபெற்ற இடத்தில் மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன், மாநகர காவல் துணை ஆணையர் பத்ரிநாராயணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திஷா மித்தல் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர். மேலும், விபத்து குறித்த பயணிகளின் உறவினர்கள் 97466 40662 என்ற செல்லிடப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இந்த விபத்து குறித்து தீயணைப்புத்துறை அதிகாரிகள் கூறுகையில், கண்டெய்னர் லாரி இருந்த இரும்பு கூண்டானது பேருந்தின் மீது மோதியதால் உயர் சேதம் அதிகரித்துள்ளது. இந்த விபத்தில் பேருந்தின் பயணிகளின் கால்கள் இரும்புக் கம்பிகளில் சிக்கியதால் கட்டர், கடப்பாறை வைத்து நெம்பி எடுத்து 3 உயிர்களை துரிதமாகக் காப்பாற்றினோம் என்று கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com