எங்கே செல்கிறார் என்னென்ன செய்கிறார் டிரம்ப்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் இந்தியப் பயணம் குறித்து வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் ரவிஷ் குமார்....
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்

புது தில்லி: பிரதமர் நரேந்திர மோடியும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் கலந்து கொள்ளும் டிரம்பின் மோட்டேரா மைதான நிகழ்ச்சியை அமெரிக்க அரசியல் உள்விகாரத்தோடு தொடர்பு ஏற்படுத்தக்கூடாது என மத்திய  வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.  

மேலும் டிரம்ப்பின் இந்தியப் பயணத்தில் பிரதமர் மோடியுடான இரு தரப்பு பேச்சு வார்த்தையில் அமெரிக்க உதவியுடன் இந்தியாவில் அமையவிருக்கும் 6 அணு உலைகளுக்கான ஒப்பந்தம் மற்றும் உள் நாட்டு பாதுகாப்பு, அறிவுசார் சொத்துரிமை உட்பட 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்திடப்பட இருக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டது. 

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் இந்தியப் பயணம் குறித்து வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் ரவிஷ் குமார் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசினார். அப்போது அவர் கூறிய பதில்கள் வருமாறு:

"அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பிற்கு அகமதாபாத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள மோட்டேரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியை டொனால்ட் டிரம்ப் நாகரீத் அபிநந்தன் கமிட்டி (Citizen Felicitation Committee) ஏற்பாடு செய்துள்ளது. 24 ஆம் தேதி பிற்பகலில் அகமதாபாத்திற்கு வருகிறார் டிரம்ப். விமான நிலையத்திலிருந்து மோட்டேரா மைதானத்திற்கு செல்லும் வரை, வழி நெடுகிழும் 28 மேடைகள் அமைக்கப்பட்டு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு அமெரிக்க அதிபருக்கு வரவேற்பு கொடுக்கப்படுகிறது.  நாட்டின் அனைத்து பகுதியைச் சேர்ந்தவர்களும் இந்த கலை நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர். மைதானத்திற்குள் செல்வதற்கு முன்பு இந்திய தலைவர்கள் டிரம்பை வரவேற்று வாழ்த்துகின்றனர். 

மோட்டேரா மைதானத்தில் பிரதமர் மோடியும் அமெரிக்க அதிபரும் பேசுவதற்கு முன்பும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.   இந்திய - அமெரிக்க இரு தரப்பு உறவிற்கும் இந்த வரவேற்பு நிகழ்ச்சிகளுக்கும் சம்பந்தமில்லை.  அதே சமயத்தில் இதை அரசியல் மேடையாக கருதி அமெரிக்க அரசியல் உள்விகாரத்தோடு தொடர்பு ஏற்படுத்தக்கூடாது. இது இந்திய - அமெரிக்க சமூகத்தின் மூலம் நடத்தப்படும் நிகழ்ச்சி. முன்பு வந்த அமெரிக்க அதிபர்களுக்கும் இது போன்ற வரவேற்பு கொடுக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளனர்.  சபர்மதி ஆஸ்ரம நிகழ்ச்சி குறித்து பின்னர் தெரிவிக்கப்படும்.

அகமதாபாத் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு அமெரிக்க அதிபர், மாலை 3.30 மணிக்கு தன்னுடைய மனைவியுடன் ஆக்ரா வருகிறார். அங்கு சூரியன் அஸ்தமனம் ஆகும் வரை இருப்பார்கள்.  உச்ச நீதிமன்றம் உத்திரவின்படி தாஜ் மஹாலுக்கு அருகே வாகனங்கள் அனுமதியில்லை. ஆனால் மதிப்புமிக்க தலைவர்களுக்கு மாற்று வழி காணப்படும். ஆக்ராவிலிருந்து மாலை 6.30 மணியளவில் தில்லி திரும்புகிறார் டிரம்ப். பின்னர் தில்லியில் இரவில் நடைபெறும் இந்திய - அமெரிக்க வர்த்தகர்களுடான கூட்டம் குறித்து வெளியுறவுத்துறைக்கு சம்பந்தமில்லை.  

25 ஆம் தேதி காலையில் குடியரசுத் தலைவர் மாளிகை முன்பு வழக்கமான அரசு முறை சம்பரதாயங்களுடன் வரவேற்பும் முப்படைகளின் ராணுவ மரியாதையும் அமெரிக்க அதிபருக்கு அளிக்கப்படுகிறது. பின்னர் காந்தி சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தி விட்டு ஹைதராபாத் ஹவுஸ் க்கு வருகிறார். இங்கு பிரதமர் மோடியும் அமெரிக்க அதிபரும் தனியாக சந்தித்து பேசுகின்றனர். 

இரு தரப்பு பேச்சு வார்த்தைகளுக்கு பின்னர் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிறது. பின்னர் இரு தலைவர்களும் செய்தியாளர்களை சந்தித்து பேசுகின்றனர்.  ஹைதராபாத் ஹவுஸிலேயே பிரதமர் அமெரிக்க அதிபருக்கு பகல் விருந்து அளிக்கிறார்.  

பிரதமர் மோடி அமெரிக்க அதிபரை இம்முறை எட்டாவது முறையாக சந்திக்கிறார்.  கடந்த 8 மாதத்தில் இது 5 வது சந்திப்பாகும்.  

சரக்கு மற்றும்  சேவைகளில் இரு நாட்டிற்கும் நல்ல ஒத்துழைப்பும் பங்களிப்பும் இருக்கிறது. அமெரிக்காவுடான சில ராணுவ ஒப்பந்தங்கள் இருக்கும். ஏற்கனவே கச்சா எண்ணெய், சிவில் விமானங்கள் போன்றவை அமெரிக்காவிடமிருந்து வாங்கப்பட்டு வருகிறது. 

ஹெச் 1 பி விசா குறித்து பல்வேறு கட்டங்களில் பேச்சு வார்த்தை நடை பெற்று வருகிறது.  இம்முறை அமெரிக்க உதவியுடன் இந்தியாவில் (ஆந்திராவில்) அமையவிருக்கும் 6 அணு உலைகளுக்கான ஒப்பந்தம் மற்றும் உள் நாட்டு பாதுகாப்பு, அறிவுசார் சொத்துரிமை உட்பட 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் இந்தியாவும் அமெரிக்கா இரு தலைவர்கள் முன்னிலையில் கையெழுத்திடுகிறது" என்றார்  ரவிஷ் குமார்.

25 ஆம் தேதி இரவு குடியரசுத் தலைவர் மாளிகையில் அமெரிக்க அதிபருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரவு விருந்து அளிக்கிறார். இதன் பின்னர் அமெரிக்க அதிபர் டிரம்ப் அன்று இரவே அமெரிக்காவிற்கு திரும்புகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com